மகளிர் துயர் துடைக்கும் மீனாட்சி

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது கருவாழக்கரை திருத்தலம்.

Update: 2018-04-04 07:52 GMT
யிலாடுதுறை அருகே உள்ள கருவாழக்கரை என்ற கிராமத்தில் இருக்கிறது, அருள்மிகு சோமசுந்தரேசுவரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர், சோமசுந்தரேசுவரர். இறைவியின் பெயர் மீனாட்சி அம்மன். இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் உள்ளது. அதற்கடுத்து அர்த்த மண்டபம். இந்த அர்த்த மண்டப நுழைவு வாசலில் இடதுபுறம் விநாயகப்பெருமான் அமர்ந்து அருள்புரிகிறார்.

அடுத்ததாக கருவறையில் இறைவன் சோமசுந்தரேசுவரர், லிங்கத்திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அமர்ந்தபடி பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். பொதுவாக சிவாலயங்களில் இறைவியின் சன்னிதி மகாமண்டபத்தின் வலதுபுறம் தான் அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் அன்னை மீனாட்சியின் சன்னிதி வடக்கு பிரகாரத்தில் தனிக் கோவிலாக அமைக்கப்பட்டி ருப்பது தனிச்சிறப்பாகும்.

இங்கு அன்னை நின்ற திருக்கோலத்தில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு இங்கு நான்கு கரங்கள். அன்னை தனது மேல் வலது கரத்தில் சக்கரத்தையும் இடது மேல் கரத்தில் வேலும் தாங்கியிருக் கிறாள். கீழ் இரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருளாசிபுரிகிறாள்.

இறைவனின் தேவ கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடபுறம் வனதுர்க்கை அம்மனும் வீற்றிருக்கிறார்கள். மேற்கு திருச்சுற்றில் விநாயகப்பெருமான், வள்ளி- தெய்வானையுடன் முருகப்பெருமான், கஜலட்சுமி மற்றும் சண்டிகேசுவரர் சன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன. கிழக்கு திருச்சுற்றில் பைரவர், சனீஸ்வரர், சந்திரன், சூரியன் மற்றும் பிள்ளையார் திருமேனிகள் காணப்படுகின்றன. இந்த ஆலயம் சுமார் 200 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.

இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி, நவராத்திரி, கார்த்திகை தீபம், சோம வாரங்கள், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு பிறப்பு, பொங்கல் திருநாள், மார்கழி மாதத்தின் 30 நாட்கள் போன்றவற்றில் இறைவன் மற்றும் இறைவிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுகின்றன. இது தவிர திருவாதிரை தினத்தன்று நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

நாகப்பட்டினம் நஞ்சை நிலங்கள் நிறைந்த மாவட்டம். அதற்கேற்றாற்போல் இந்த தலமும் பச்சைப்பசேல் வயல்வெளிகள் சூழ பசுமையாக காட்சித்தருகிறது. எங்கு நோக்கினும் நெற்பயிர்களும், கரும்பும் குறைவின்றி வளர்ந்து நிற்கின்றன. இந்த ஊர் மக்கள் தங்களது பயிர் செழித்து வளரவும், தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் நோயின்றி வாழவும் இத்தல இறைவனை வேண்டிக்கொள்கிறார்கள். அவர்களின் வேண்டுதல் நிறைவேறுவது கண்கூடான நிஜம்.

இந்த ஊர் பெண்களுக்கு அன்னை மீனாட்சி அம்மன் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள். குழந்தைகள் தங்களுக்கு ஏதாவது துயர் வந்தால் தனது தாயிடம் அழுது கொண்டே முறையிடுவதுபோல, இந்தப் பகுதி பெண்களும் தங்களது துயர்களை இத்தல மீனாட்சி அம்மனிடம் சென்றுதான் முறையிடுகிறார்கள். மீனாட்சி அன்னையும் தன்னிடம் வரும் பெண்களின் துயர்களை, தாயாக இருந்து தீர்த்து வைக்கிறாள்.

தடைபட்டுக்கொண்டே செல்லும் திருமணம் விரைவில் நடந்தேறவும், குழந்தை பேறு வேண்டியும், நோய்வாய்பட்ட கணவரோ அல்லது உறவினரோ குணமாகவும், தங்களது பிள்ளைகள் நன்றாக படிக்கவும் அன்னை மீனாட்சியின் சன்னிதிக்கு வந்து வேண்டிக்கொள்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்த வேண்டுதல்கள் நிறைவேறியதும், பக்தர்கள் மனம் மகிழ்ந்து, அன்னைக்கு அபிஷேக ஆராதனை செய்து புத்தாடை அணிவித்து தங்கள் நன்றிக்கடனை செலுத்தி மகிழ்கின்றனர்.

இந்த ஆலயமானது தினமும் காலை 5 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.


மேலும் செய்திகள்