சபரிமலை அய்யப்பன் கோவிலில் இதுவரை 25 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இதுவரை 25 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.;

Update:2025-12-15 08:08 IST

சபரிமலை,

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜை, வழிபாடுகள் நடந்து வருகிறது. சீசனையொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்தது.

உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நடப்பு சீசனையொட்டி மண்டல பூஜை வருகிற 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14-ந் தேதியும் நடக்கிறது.

இந்தநிலையில் பக்தர்களின் வருகை குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு இதுவரை 29 நாட்களில் சாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. இதில் எருமேலி, அழுதக்கடவு காட்டுப் பாதையில் நடை பயணமாக சபரிமலைக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 59 ஆகும்.

இந்த வழிப்பாதையில் சராசரியாக தினசரி 1,500 முதல் 2,500 வரை பக்தர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். அதேநேரத்தில் வண்டிப்பெரியார், சத்ரம் புல்மேடு வழியாக இதுவரை 64 ஆயிரத்து 776 பக்தர்கள் சபரிமலைக்கு புனித பயணம் வந்துள்ளனர். இந்த பாதை வழியாக தினசரி 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பக்தர்கள் சபரிமலைக்கு வருகிறார்கள்.

தற்போது சபரிமலை தரிசனத்திற்கு தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 8-ந் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 1 லட்சத்து ஆயிரத்து 844 பேர் தரிசனம் செய்தனர். அதே போல் கடந்த மாதம் 24-ந் தேதி ஒரே நாளில் 1 லட்சத்து 867 பேர் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்