பாவங்களைப் போக்கும் ‘ரிஷப சேவை'

அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி, அன்னை திருக்கடையூர் அபிராமியை ஆதிபராசக்தியின் பல்வேறு வடிவங்களாய் போற்றித் துதிக்கிறது.

Update: 2018-06-13 07:24 GMT
13-6-2018 பன்னிரண்டு ரிஷப சேவை

அபிராமி அந்தாதியில், ‘மண்களிக்கும் பச்சைவண்ணமும் ஆகி, மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே’ என்பார் அபிராமிபட்டர்.

சித்திமதி-மதங்க முனிவரின் கோடிக்கணக்கான மதங்க கன்னிகைகளில் மூத்தவளும் பேரழகியுமானவள் அன்னை மாதங்கி. அவளது பச்சைநிறம் இந்த மண்ணையே களிக்கச் செய்ததாக அபிராமிபட்டர் போற்றுகிறார். இந்த மாதங்கியை சியாமளை, மந்திரிணி, ராஜசியாமளா, ராஜமாதங்கி என்றும் அழைப்பார்கள். லலிதை ஆதிபராசக்தியின் கரும்பு வில்லில் இருந்து தோன்றி, தம் அடியவர்களுக்கு கல்வி, நுண்ணறிவு, சொல்லாற்றல், இசையறிவு, வசீகரிக்கும் சக்தி, திரண்ட செல்வம் என அள்ளித்தருபவள் ராஜமாதங்கி. இந்த ராஜமாதங்கி அருளும் இடம் சீர்காழி மற்றும் திருவெண்காடு அருகிலுள்ள திருநாங்கூர் திருத்தலம் ஆகும்.

ஒரு பிரளய காலத்தில் பிரம்மதேவர், சிவபெருமானை மதங்கம் எனும் யானை வடிவில் இருந்து தியானித்தார். அப்போது பிரம்மனின் மனதில் இருந்து அவரது புத்திரனாய் மதங்க முனிவர் தோன்றினார். தவம் செய்ய விருப்பம் கொண்டு இடம் தேடினார் மதங்க முனிவர். அது பிரளய காலம் அல்லவா? எங்கும் ஒரே வெள்ளம். தவமியற்ற இடம் கிடைக்கவில்லை.

அப்போது நாரத முனிவர் தோன்றி, ‘மதங்கா! பூவுலகில் அனைத்து உயிர்களும் ஒடுக்கம் அடையும் திருவெண்காடு, பிரளயத்திலும் அழியாமல் உள்ளது. அங்கு சென்று தவமியற்று' என்றருளினார்.

ஊழிக்காலத்திலும் அழியாத அத்தலத்தைக் கண்ட மதங்கர் அங்கேயே தவமியற்றத் தொடங்கினார். அப்போது மகாவிஷ்ணு மோகினி வடிவில் தோன்றி ஆசி வழங்க, விநாயகப்பெருமான் மதங்கருக்கு அஷ்டமா சித்திகளையும் அருளினார். இந்த மோகினி வடிவ பெருமாள் ‘நாராயணி’ எனும் திருநாமத்திலும், விநாயகர் ‘மதங்க விநாயகர்’ எனும் பெயரிலும் திருநாங்கூர் மதங்கீஸ்வரர் திருத்தலத்தில் எழுந்தருளி அருள்கின்றனர்.

பின்னர் தவமிருந்த மதங்க முனிவருக்கு அம்பிகையுடன் சிவபெருமான் திருக்காட்சி நல்கினார். அப்போது மதங்கர் அம்மையப்பனிடம், ‘அம்பிகையே எனக்கு மகளாக வந்து பிறக்க வேண்டும்' என்று வேண்டினார்.

உடனே பார்வதி தேவி ‘மதங்கரே! எம் வடிவம் கொண்ட மந்திரிணியான சியாமளா தேவி உமக்கு மகளாக வந்து பிறப்பாள்' என அருளி மறைந்தாள். அதன்படி, ஆடிமாதம் வெள்ளிக்கிழமை அதிகாலை மதங்க தீர்த்தம் எனும் பொய்கையில் நீலோத்பல மலர் மேல் சியாமளாதேவி குழந்தையாக வந்துதித்தாள். அப்போது பொய்கைக்கு நீராடவந்த மதங்கர் - சித்திமதி தம்பதியினர், அக்குழந்தையை எடுத்து தங்கள் மகளாக வளர்த்து, பின்னாளில் சிவபெருமானுக்கு மணம் முடித்து வைத்தனர்.

பின்னர் ரிஷபத்தில் சக்தி மாதங்கியுடன் சிவபெருமான் எழுந்தருளி, திருக்கல்யாண சேவை நல்கி அருளினார். அந்த ரிஷப சேவை திருக்காட்சியின் தொடர்ச்சியாய் இன்றுவரை திருநாங்கூர் ராஜமாதங்கி சமேத மதங்கீஸ்வரர் திருக்கோவிலில் ‘ரிஷப சேவை திருக்காட்சி' நடைபெற்று வருகிறது.

மதங்கர் அம்பிகை ராஜசியாமளாவை வளர்த்து வந்ததால், அம்பிகை ‘ராஜமாதங்கி’ என்றும், மாதங்கியை சிவபெருமான் மணந்து ஆட்கொண்டதால், இறைவன் ‘மதங்கீஸ்வரர்’ என்றும், ஆட்கொண்ட மதங்கரின் ஆசிரமம் அமைந்திருந்த இடம் ‘மதங்காஸ்ரமம்’ என்றும், தற்போது அவ்விடமே திருநாங்கூர் ராஜமாதங்கி சமேத மதங்கீஸ்வரர் திருக்கோவில் என்றும் வழங்கப்பட்டு வருகிறது.

இத்தல மாதங்கியை தேன் நைவேத்தியம் செய்து வழிபட்டு வந்தால், படிப்பில் குழந்தைகளின் மந்த நிலை நீங்கி, நுண்ணறிவைப் பெற்றிடுவர் என்று சொல்லப்படுகிறது. மேலும் கல்வி, ஞானம், இசையறிவு கூடிவர இத்தல ராஜமாதங்கி வழிபாடு பெரிதும் துணை செய்யும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல சிவபெருமான் பதினோரு திரு அவதாரங்களுடனும், மகாவிஷ்ணு பதினோரு திரு அவதாரங்களுடனும் ஒரே திருத்தலத்தில் தோன்றி அருளிய திருத்தலம் திருநாங்கூர்.

தமது கட்டளையை மீறி தட்சனின் யாகத்திற்குச் சென்றுவந்த தாட்சாயணியின் மீது கொண்ட சினத்தினால், சிவபெருமான் இங்கு உள்ள உபய காவிரி என்னும் இடத்தில் ருத்திரதாண்டவம் ஆடினார். அப்போது அவரது விரிந்த சடாமுடி பதினொரு இடங்களில் பூமியில் உதிர்ந்தது. அந்தப் பதினொரு இடங்களிலும் இன்னொரு சிவபெருமான் உருவம் தோன்றி ருத்திரதாண்டவம் நிகழ்த்தத் தொடங்கியது. இதனால் இவ்வுலகிற்குப் பேரழிவு ஏற்படும் என்று அஞ்சிய தேவர்கள், மகா விஷ்ணுவிடம் அடைக்கலம் புகுந்தனர். அவர் ருத்திரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த 11 சிவபெருமான்களையும், 11 மகாவிஷ்ணுவாய் தோன்றி கட்டித் தழுவினார். இதனால் சினம் தணிந்து சாந்தநிலைக்குத் திரும்பிய சிவபெருமான், தமது சடாமுடி உதிர்ந்த பதினொரு இடங்களிலும் கோவில் கொண்டருளினார். அதுபோலவே மகாவிஷ்ணுவும் பதினொரு இடங்களிலும் கோவில் கொண்டார்.

மகாவிஷ்ணுவின் பதினொரு திருக்கோலங்கள் கோவில் கொண்ட பதினொரு திருத்தலங்கள் திருநாங்கூரில் திவ்விய தேசங்களாக அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் இரவில் திருநாங்கூரில் திருமணிமாடக் கோவில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் சன்னிதியில் ‘11கருடசேவை' திருவிழா சிறப்பாக நடக்கும். அதுபோல இந்த சிவாலயங்களின் சார்பாக ‘பன்னிரு ரிஷபாரூட சேவை' திருவிழா சித்ரா பவுர்ணமி நாளில் அக்காலத்தில் இங்கு நடந்துள்ளது.

ஆனால் சிலபல காரணங்களால் சித்ரா பவுர்ணமியில் அந்த காலத்தில் நடைபெற்றுவந்த ரிஷபாரூட சேவை தடைபட்டது. பல வருட தடைகளுக்குப்பின், தற்போது வைகாசி மாதத்தில் ரோகிணி நட்சத்திர நாளில் இந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஈசனின் ஒரு ரிஷபாரூட திருக்காட்சி கண்டாலே பெரும் பாக்கியம். ஆனால் இங்கு ஒரே தலத்தில் பன்னிரு திருக்கோவில்களில் உள்ள ஈசன்களும் அம்மை உமையவளுடன் பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி அருள்கிறார். இதனைக் காண்பது வெகு புண்ணியம்.

இந்த விழா 13-6-2018 (புதன்கிழமை) திருநாஞ்கூர் ராஜமாதங்கி சமேத மதங்கீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள் பன்னிரு திருக்கோவில் சிவபெருமானின் உற்சவ திருமேனிகளுக்கும், சமகாலத்தில் திருக்கல்யாணம் செய்விக்கப்படும். பின்னர் திவ்ய தம்பதிகள் ரிஷபாரூடத்தில் திருக்காட்சி தரும் வைபவம் நடைபெறும். பின்பு அன்று இரவு 9.30 மணிக்கு மேல் பன்னிரு ரிஷபாரூட மூர்த்திகளும், திருமுறை பாராயணங்கள் ஒலிக்க, மங்கல வாத்தியங்கள் முழங்க, திருவீதியுலா வருவார்கள். இந்த பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி காண்பதன் மூலம் நம் பாவ வினைகள் அகன்று ஒளிமயமான நல் வாழ்க்கை அமையும்.

அமைவிடம்

சீர்காழியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் திருநாங்கூர் அமைந்துள்ளது. அருகில் திருவாலி திருநகரி, மங்கைமடம், திருவெண்காடு திருக்கோவில்கள் உள்ளன. 

மேலும் செய்திகள்