எதையும் தரவல்லவன் அல்லாஹ்...

திருக்குர்ஆனின் மூன்றாம் அத்தியாயமான, ஆலஇம்ரானில், மர்யம் (அலை) அவர்களின் பிறப்பு வரலாற்றை விரிவாக சொல்கிறான், அல்லாஹ்.

Update: 2018-07-18 08:43 GMT
இம்ரானின் மனைவி ஹன்னா ஆண் குழந்தை பெறும் ஆசையில் அல்லாஹ்விடம் ஒரு நேர்ச்சை செய்தார். ‘நான் கர்ப்பமுற்றிருக்கும் இந்த பிள்ளையை அல்லாஹ்விற்காக நான் அர்ப்பணம் செய்து விடுவேன்’ என்று. ஆனால் அவள் பெற்றெடுத்ததோ பெண் குழந்தை.

“அவர் (தன் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது ‘என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றேன்’ என்று கூறினார். ஆயினும் (அவர் விரும்பிய) ஆண், இந்தப் பெண்ணைப் போன்றல்ல என்பதை அல்லாஹ் (தான்) நன்கறிவான். (பிறகு இம்ரானின் மனைவி) நிச்சயமாக நான் அதற்கு “மர்யம்” எனப் பெயரிட்டேன். அதனையும், அதன் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி (ன் வஞ்சனைகளி)லிருந்து நீ காப்பாற்ற உன்னிடம் பிரார்த்திக் கின்றேன்!’ என்றார்” (திருக்குர்ஆன் 3:36)

அந்த தாயின் விருப்பம் ஒன்றாக இருந்தாலும் அல்லாஹ்வின் விருப்பம் வேறாக இருந்தது. ஆண் பிள்ளையை விட இந்த பெண் குழந்தைக்கு அல்லாஹ் அதிக கண்ணியத்தையும் அந்தஸ்தை கொடுத்திருந்தான்.

எந்தவித ஆணின் தொடர்பும் இன்றி அல்லாஹ்வுடைய ரூகானியத்தை (உயிர் மூச்சை) மர்யமின் கர்ப்பப்பையில் ஊதினான். அதன் மூலம் ஈஸா மஸீஹ் என்ற இறைத்தூதரை பிறப்பிக்கச் செய்தான்.

ஆதி பிதா ஆதம் நபிகளை களிமண்ணால் படைத்து ரூஹை ஊதியது போல், ஈஸா நபியையும் ரூஹால் ஊதி படைத்தான். அத்தகைய சிறப்பை மர்யம் (அலை) அவர்கள் பெற்றது அவர்களுக்கு கிடைத்த மாபெரும் கண்ணியம். அல்லாஹ் நாடினால் எதையுமே “குன்” என்ற வார்த்தை சொன்னால் போதும் அது உருவாகி விடும். இதுதான், இப்படித்தான் என்ற உலக நியதிகளோ, காரண காரியங்களோ அவனுக்குத் தேவை யில்லை.

பாலஸ்தீனத்திலுள்ள பைத்துல் முகத்தஸ் என்ற இறை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்ட மர்யம் (அலை) அவர்கள், சிறுமியாக இருந்த காரணத்தால் அவர்களை வளர்க்கின்ற பொறுப்பை யார் ஏற்பது என்ற சர்ச்சை எழுந்தது. அப்போது பனி இஸ்ரவேலர்கள் வாழ்வில் இருந்த பழக்க முறையான எழுதுகோல்களை ஆற்றில் எறிந்து முடிவு செய்ய எண்ணினர்.

அதன் அடிப்படையில் அப்போது பைத்துல் முகத்தஸ் ஆலயத்தின் தலைமை இமாமாக இருந்த நபி ஜக்கரியா (அலை) அவர்கள் அந்த பொறுப்பை ஏற்க முடிவு செய்யப்பட்டது. அவர்களின் அன்பின் அரவணைப்பில் மர்யம் (அலை) அவர்கள் வளர்ந்து வந்தார்கள்.

“ஆகவே அவருடைய இறைவன் அதனை அன்பாய் அங்கீகரித்து பரிசுத்தமாகவும் அழகாகவும் அதனை வளரச் செய்து, அதனை வளர்க்க ஜக்கரிய்யா பொறுப்பேற்று கொள்ளுமாறும் செய்தான். ஜக்கரிய்யா அந்த பிள்ளை இருந்த மாடத்திற்குள் நுழையும் போதெல்லாம் அவளிடத்தில் ஏதேனும் உணவு பொருள் இருப்பதை கண்டு ‘மர்யமே, இது உனக்கு ஏது? எங்கிருந்து வந்தது’ என்று கேட்டார். அதற்கு அவர் ‘இது அல்லாஹ்விடமிருந்து தான் வருகிறது. ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கு அளவின்றியே உணவளிக்கின்றான்’ என்று கூறினார்”. (திருக்குர்ஆன் 3:37)

ஜக்கரிய்யா நபிகள் அருமை குழந்தை மர்யம் (அலை) அவர்களை காணச்செல்லும் போதெல்லாம் அவள் இருப்பிடத்தில் உணவும் பல வகையான கனிகளும் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் மேலோங்கியவராக வினவினார்.

“மர்யமே! நீயோ உன் புனிதத்தன்மையை காப்பதற்காக மறைவான மாடத்தில் வசிக்கிறாய். வெளியே சென்று கனிகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. ஆனால் நான் உன்னை காண வரும் போதெல்லாம் உன்னிடம் அந்த காலகட்டத்தில் விளைச்சல் இல்லாத, இந்த பாலைவனத்தில் விளையவே முடியாத அபூர்வ கனிவர்க்கங்கள் இருக்கின்றனவே. இதன் உண்மைத் தன்மை என்ன” என்றார்.

“என் இறைவன் எல்லாவற்றுக்கும் ஆற்றலுடையவன். அவன் நாடினால் எதையும் தருவதற்கு எந்த தடையும் அவனுக்கு இல்லை. நம் தேவைக்காக கையேந்தினால் மறுகணம் அது நிகழ்ந்து விடுமே” என்று மர்யம் (அலை) பதிலுரைத்தார்கள்.

இந்த பதில் ஜக்கரிய்யா (அலை) மனதில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தியது. ‘இத்தனை ஆண்டு காலம் நபியாய் இருந்து அல்லாஹ்வின் ஏகத்துவத்தை எடுத்தியம்பிக் கொண்டிருக் கிறேன். பனி இஸ்ரவேலர்களில் மிக சொற்பத் தொகையினரே அதனை ஏற்றுக் கொண்டார்கள். எனக்கோ வயது முதிர்ந்து விட்டது. என்னைத் தொடர்ந்து இந்தப் பணியைச் செய்வதற்கு எனக்கென ஒரு சந்ததி இல்லை. நானும் முதியவன். என் மனைவியும் மலடு. எங்களுக்கு இனி எங்கே பிள்ளைப் பிறக்கப் போகிறது என்ற சந்தேகத்தில் வீணே நாட்களைக் கடத்தி விட்டேன். அல்லாஹ்விடம் மன்றாடி கேட்டால் அத்தனையும் கிடைக்கும் என்ற ஞானம் எனக்கு இல்லாமல் போய்விட்டது. மர்யமிற்கு அளித்த இந்த பாக்கியத்தை எனக்கும் வழங்க அல்லாஹ்வே எனக்கு போதுமானவன்’, என்று எண்ணிவர்களாக இருகரம் ஏந்துகின்றார்கள்.

“என் இறைவனே! உன் புறத்திலிருந்து எனக்கு ஒரு நல்ல சந்ததியை அளிப்பாயாக. நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை செவியேற்பவனாக இருக்கின்றாய்” என்று கூறினார். (திருக்குர்ஆன் 3:38)

அல்லாஹ் அவர்களுடைய துஆவை எந்தவித நிபந்தனையுமின்றி உடனே ஏற்றுக் கொண்டான்.

“ஆகவே அவர் மாடத்தில் (மிஹ்ராப்) நின்று தொழுது கொண்டிருந்த சமயத்தில் அவரை நோக்கி மலக்குகள் சப்தமிட்டு கூறினார்கள். ஜக்கரிய்யாவே! நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா என்ற ஒரு மகவை உங்களுக்கு அளிப்பதாக நற்செய்தி கூறுகின்றான்”. (திருக்குர்ஆன் 3:39)

யஹ்யா என்று பெயரிடப்பட்ட ஒருவரையே அவருக்கு வாரிசாகவும், ஒரு நபியாகவும் அளித்து அருட்கிருபை செய்தான் அல்லாஹ்.

இதன் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடம், உறுதியான நம்பிக்கையோடு எந்த ஒரு பிரார்த்தனையையும் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கும் போது, அது ஏற்றுக்கொள்ளப் படுவதற்கு எந்த தடையும் இருக்காது என்பது தான்.

இதே போன்ற நிகழ்வு ஒன்று இப்ராகிம் நபிகளின் வாழ்விலும் நடந்தேறியது. ஒரு காலகட்டத்தில் லூத் நபியின் கூட்டத்தார் மானக்கேடான செயலில் ஈடுபட்டு வந்தனர். லூத் நபியின் எந்த போதனையையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராய் இல்லை. எனவே அந்த கூட்டத்தாரை அழிப்பதற்கான ஆணை அல்லாஹ்விடமிருந்து பிறப்பிக்கப்பட்டது. அதனை நிகழ்த்தி காட்டும் மலக்குகள் லூத் நபியின் கூட்டத்தார் வசித்து வந்த பகுதிக்கு அருகாமையில் வாழ்ந்து வந்த இப்ராகிம் நபிகளைச் சந்தித்து விவரம் சொல்ல அல்லாஹ் கட்டளையிட்டிருந்தான். அதோடு இப்ராகிம் நபிகளுக்கும் ஒரு நற்செய்தியைச் சொல்லி அனுப்பினான்.

“அதே சமயத்தில் அவருக்கு ‘இஸ்ஹாக்’ என்னும் மகனைப் பற்றியும் இஸ்ஹாக்கிற்கும் பின்னர் ‘யாகூப்’ என்னும் பேரன் பிறக்கப் போவதைப்பற்றியும் நற்செய்தி கூறச் செய்தோம்.” (திருக்குர்ஆன் 11:71)

அந்த செய்தி கேட்ட இப்ராகிம் நபியின் மனைவி சாரா அதிர்ச்சி அடைந்தார்.

“மாதவிடாய் நின்று நான் கிழவியாகவும், என்னுடைய கணவர் ஒரு வயோதிகராகவும் ஆனதன் பின்னர் நான் கர்ப்பமாகி பிள்ளை பெறுவேனா. நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்” என்றாள். (திருக்குர்ஆன் 11:72)

பேதைப்பெண்ணே! அல்லாஹ்வின் அருட்கிருபையில் நிராசையாகி விடாதே என்ற மலக்குகள், “அல்லாஹ்வுடைய சக்தியைப் பற்றி நீ ஆச்சரியம் அடைகிறாயா? அல்லாஹ்வுடைய அருளும் அவனுடைய பாக்கியங்களும் இப்ராகிமுடைய இவ்வீட்டிலுள்ள உங்கள் மீதுள்ளன. நிச்சயமாக அவன் மிக்க புகழுடையவனாகவும், மகிமையுடையவனாகவும் இருக்கின்றான்” என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 11:73)

எனவே அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டு ஜக்கரிய்யா நபியவர்கள் கேட்ட அந்த துஆவை கேட்டு வந்தால், கர்ப்பம் கொள்ள எந்த ஒரு அனுகூலமும் இல்லாத ஒருவருக்கு கூட அல்லாஹ்வின் கிருபையால் பிள்ளைப் பேறு கிட்ட நிச்சயமாக வழிபிறக்கும். இது பலரின் வாழ்வில் உணர்த்தப்பட்ட உண்மை.

இப்ராகிம் நபிகளுக்கு அன்னை சாரா மூலம் இஸ்ஹாக், யாகூப் நபிமார்களால் தொடர்ந்து, அன்னை ஹாஜரா மூலம் இஸ்மாயில் என்ற நபியையும் அல்லாஹ் அருளினான் என்பது அருள்மறையில் பதிவு செய்யப்பட்ட வசனம்.

இல்லாததிலிருந்து எதையும் தருவதற்கு இறைவன் ஆற்றலுடையவன். நம் நம்பிக்கையும் பிரார்த்தனையுமே அதனை நடத்தி காட்டும் சக்தி கொண்டது.

(தொடரும்) 

மேலும் செய்திகள்