இணைக்கும் இறைவன்

ஆரம்பத்தில் கிறிஸ்தவத்தை வளர்த்த பவுலின் இயற்பெயர் சவுல். அவர் பென்யமின் கோத்திரத்திலிருந்து வந்தவர். அதனால் இஸ்ரவேல் குலத்தின் முதல் மன்னனின் பெயர் இவருக்கு சூட்டப்பட்டது.

Update: 2018-08-30 12:04 GMT
பவுல் கீழ்ப்படிதல் உள்ளவராக இருந்தார். இயேசுவால் சிறைபிடிக்கப்பட்டவர் எனும் பெயர் இவருக்கு உண்டு. பிற இனத்தவருக்கு இவர் அப்போஸ்தலராக, கிறிஸ்துவின் தொண்டனாக மாற்றப்பட்டவர். அதுதான் இறைவன் அவரை மனம் மாற்றியதன் அடிப்படைக் காரணம்.

ரோம பேரரசு முழுவதையும் அவர் சுற்றித்திரிந்து மூன்று முறை பயணம் செய்கிறார். எபேசுவில் முதலில் பணியாற்றுகிறார், ஆனால் அங்கே தங்கவில்லை. மூன்றாவது பயணத்தில் எபேசுவில் இரண்டு ஆண்டுகள் தங்கினார். எபேசு முழுவதையும் சுற்றிப்பார்த்தார். அப்போது அங்கே நற்செய்தி பரவியிருந்ததை அவர் புரிந்து கொண்டார்.

டயானா எனும் பெண் கடவுளுக்காய் அர்ப்பணிக்கப்பட்ட நகரில் இயேசுவின் திருச்சபையைக் கட்டினார். அதன் பின் பத்து ஆண்டுகளுக்குப் பின் எபேசுவுக்கு அவர் கடிதம் எழுதுகையில் அவர் ரோம அரசினால் சிறை வைக்கப்பட்டிருந்தார். மக்களை திருப்பணிக்கு அர்ப் பணிக்க இந்த எபேசியர் நூலை எழுதுகிறார்.

இந்த நூலில் ‘கிருபை’ எனும் வார்த்தை பனிரண்டு முறை குறிப்பிடப்படுகிறது. தகுதியற்ற மக்களுக்கு கடவுள் தருகின்ற தயவு தான் கிருபை. கிறிஸ்துவோடு இணைய தகுதியற்ற மக்களை இயேசுவின் தயவின் மூலம் அவரோடு இணைக்கின்ற பணி தான் நற்செய்தி அறிவித்தல்.

இயேசு கிறிஸ்துவுக்குள் எனும் பதமும் இந்த நூலில் பல முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. காரணம் கிருபையினால் இயேசு கிறிஸ்துவுக்குள் இணைக்கப்படுவதைத் தான் இந்த கடிதம் பேசுகிறது.

மொத்தம் ஆறு அதிகாரங்கள் கொண்ட இந்த நூலின், முதல் மூன்று அதிகாரங்கள், கிறிஸ்துவில் நம்முடைய ஆவிக்குரிய சொத்துகள் என்ன என்பது சொல்லப்படுகிறது.

பிதாவிடமிருந்து, குமாரனிடத்திலிருந்து, தூய ஆவியிடமிருந்து எதையெல்லாம் பெற்றுக் கொள்கிறோம் என்பதை இந்த அதிகாரங்கள் விளக்குகின்றன. இவை தான் கிறிஸ்துவில் நம்முடைய ஆவிக்குரிய சொத்துகள்.

நான்கு முதல் ஆறுவரையுள்ள அதிகாரங்கள், கிறிஸ்துவுக்காய் நாம் செய்ய வேண்டிய பணிகளை விளக்குகிறது. ஐக்கியத்திலே நடக்க வேண்டும், தூய்மையிலே நடக்க வேண்டும், இசைவாய் நடக்க வேண்டும், வெற்றியிலே நடக்க வேண்டும் என்கிறது அது.

ஒரு விசுவாசி கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கிறான் எனில் அவனுடைய வாழ்க்கையின் முடிவு வெற்றியாய் இருக்க வேண்டும் என்பதே பவுல் சொல்ல வரும் செய்தி.

யூதரில் பாவிகளுக்கு எவற்றையெல்லாம் கடவுள் செய்திருக்கிறார், பிற இனத்தவரான பாவிகளுக்கு கடவுள் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை பவுல் தனித் தனியே எழுதுகிறார். யூதர் இறைவனோடு இணைக்கப் படுவது, பிற இனத்தார் யூதரோடு இணைக்கப்பட்டு வேறுபாடின்றி வாழ்வது எனும் இரண்டு நிலைகளை அவர் விளக்குகிறார்.

மரித்தவன், கீழ்ப்படியாதவன், சீரழிந்தவன், ஆக்கினைக்கு உட்பட்டவன் இது தான் ஒரு பாவியின் நிலை. கடவுள் இத்தகைய பாவிகளிடையே செயல்புரிபவராக இருக்கிறார். அதன் மூலம் நேசிக்கிறார், உயிர்ப்பிக்கிறார், உயர்த்துகிறார், பாதுகாக்கிறார் எனும் நிலைக்கு பாவிகளை மாற்றுகிறார். இது பொதுவான பாவிக்கு தரப்படும் பாக்கியம்.

இயேசு யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. “யூதர்கள் நடுவிலிருந்து மட்டுமன்றி, யூதரல்லாதார் நடுவிலிருந்தும் அவரால் அழைக்கப்பட்ட நாமே அந்தக் கலன்கள்” (ரோமர் 9:24,25) என்கிறது விவிலியம். “தூய ஆவியின் கொடை பிற இனத்தவர் மீதும் பொழியப்பட்டதைக் கண்டு மலைத்துப் போயினர்” என்கிறது அப்போஸ்தலர் 10:45. கடவுள் அன்பைப் பொழிவதிலும், அருளைப் பொழிவதிலும், ஆவியைப் பொழிவதிலும் வேறுபாடு காட்டுவதில்லை.

முன்பு பிற ஜாதியினர் எப்படி இருந்தார்கள் என்று பார்த்தால். கிறிஸ்துவைச் சேராதவர்களாக இருந்தார்கள். டயானா எனும் கடவுளுக்கு தங்களை அர்ப்பணித்திருந்தார்கள். இறை சமூகத்துக்குப் புறம்பானவர்களாக இருந்தார்கள். இவர்கள் உடன்படிக்கைக்கு அன்னியர்களாய் இருந்தனர். இவர்கள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தார்கள், கடவுளற்றவர்களாக இருந்தார்கள்.

கடவுள் இஸ்ரயேல் மக்களின் மூலமாக பிற இனத்தாரை தனக்குரியவர்களாக மாற்ற முயல்கிறார். பிற இனத்தவர்களை அவர் புறந்தள்ளவில்லை. இருவரையும் இணைக்கும் கருவியாக இறைமகன் இயேசுவின் சிலுவை மரணம் இருந்தது. ‘மீட்பு யூதர்கள் வழியாக வருகிறது’ என விவிலியம் சொல்வதன் பொருள் இது தான்.

நம்மை சமீபமாக்கிய ரத்தம் என்ன செய்கிறது?. ஒப்புரவாக்கும் பணியைச் செய்கிறது. யாரெல்லாம் அவர் மீது விசுவாசம் வைக்கிறார்களோ அவர்களை ஒப்புரவாக்குகிறது. பழைய ஏற்பாட்டில் அழிக்க விரும்பிய கடவுள், இப்போது அழைக்க விரும்புகிறார். அதற்காக தனது ரத்தத்தை செலவிட்டு நம்மை அவரோடு ஒப்புரவாக்குகிறார்.

பழைய ஏற்பாடு கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே சட்டங்களால் ஒரு தடுப்புச் சுவரை எழுப்பியது. ஆனால் இறைமகன் இயேசுவின் பலியோ தடுப்பை உடைத்து நம்மை அவரோடு இணைக்கும் பணியைச் செய்தது.

இறைவனோடு இணைவோம், மீட்பை அடைவோம்.

(தொடரும்) 

மேலும் செய்திகள்