சிறுநீரக நோய் நீக்கும் சுத்தரத்தினேஸ்வரர்

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே அமைந்துள்ளது ஊட்டத்தூர் திருத்தலம். இங்கு அகிலாண்டேஸ்வரி சமேத சுத்தரத்தினேஸ்வரர் கோவில் இருக்கிறது.

Update: 2018-10-02 07:57 GMT
அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற இந்த ஆலயம், ஆசிய கண்டத்திலேயே அபூர்வமாக கிடைக்கும் பஞ்சநதன கல்லால் ஆன பஞ்ச நதன நடராஜர் சிலையைக் கொண்ட சிறப்பு மிக்கதாகும்.

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்க வல்ல ஆற்றல் மிக்கவராக இருக்கிறார், இத்தலத்தில் அருள்புரியும் சுத்தரத்தினேஸ்வரர். இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், வெட்டிவேரை எடுத்துவந்து இங்குள்ள பஞ்ச நதன நடராஜருக்கு மாலை சாற்றி அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை பருகி வழிபடுவது வழக்கம்.

ஒருவர் தாம் இழந்த அரசியல் பதவியை, அலுவலக பதவியை மீட்டு தரும் சக்தி படைக்கும் சுத்தரத்தினேஸ்வரர் அருள்பாலிக்கிறார். சுத்தரத்தினேஸ்வரர் கருவறையில் நவரத்தினங்களில் ஒன்றான ரூபி கற்கள் பதிக்கப்பட்டுள்ளதால், மகா ஆரத்தி சமயத்தில் மிக ஜொலிப்பாக காட்சி அளிக்கிறது.

ஆலய தீர்த்தமான பிரம்மதீர்த்தத்தை நோக்கியவாறு, கிழக்கு முக நந்திதேவர் கோவில் அமைந்துள்ளது. மாசி மாதம் 12, 13, 14 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி இக்கோவிலின் மூலவர் சன்னிதியில் நேரடியாக பட்டு சூரிய பூஜை நடத்துவது சிறப்புக்குரியதாகும். கொடி மரம் அருகில் மேல் விதானத்தில் (மேற்கூரையில்) 27 நட்சத்திரங்கள், 15 திதிகள், 12 ராசிகள், 9 கிரகங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல சிவ ஆலயங்களையும் வழிபட்டு வந்த அப்பர், ஒரு முறை ஊட்டத்தூர் வந்து சேர்ந்தார். அங்குள்ள சுத்தரத்தினேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் வழிதோறும் எங்கு பார்த்தாலும் சிவலிங்கங்களாக காட்சி அளிப்பதைக் கண்ட அப்பர் மெய்சிலிர்த்தார். நெடுகிலும் சிவலிங்கமாக இருந்ததால், அவரால் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. அதனால் அங்கேயே நின்று ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரரை மனதில் நினைத்து, திருத்தாண்டக திருமுறைப்பாடல்களைப் பாடி வேண்டினார். அப்பர் நின்று திருத்தாண்டகம் பாடிய பகுதியே ‘பாடலூர்’ என்றும் பிற்காலத்தில் மருவி ‘பாடாலூர்’ என்றும் அழைக்கப்படுகிறது.

நூற்றுக்கால் மண்டபம் இக்கோவிலின் தனிச்சிறப்பை எடுத்துரைக்கிறது. இக்கோவிலில் சுத்தரத்தினேஸ்வரரை நோக்கி ஒரு நந்தி வீற்றிருக்கிறது. அதே நேரத்தில் மற்றொரு நந்தி கிழக்கு முகமாக அர்த்த மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அகிலாண்டேஸ்வரி சன்னிதி இரண்டாவது பிரகாரத்தில் சுத்தரத்தினேஸ்வரர் சன்னிதிக்கு பின்புறம் இருக்கிறது.

இக்கோவிலில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு இளம் பெண்கள் பிரார்த்தனை செய்து 11 வாரங்களுக்கு எலுமிச்சை பழ மாலை அணிவித்துவேண்டிக்கொண்டால் திருமணம் தடைபடாமல் விரைந்து நடக்கிறது. இக்கோவிலில் தட்சிணாமூர்த்தி, வீரபத்திரேஸ்வரர் சன்னிதிகள் அழகுற அமைந்துள்ளன.

கஜலட்சுமி சன்னிதியை நோக்கி உள்ள காலபைரவருக்கு, 11 வாரங்கள் தொடர்ச்சியாக நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொண்டால் குழந்தைகளின் மன பயம் நீங்குகிறது. காலபைரவரிடம் விவசாயிகள் தங்களது கால்நடைகள் நோயுற்று இருக்க வேண்டும் என்பதற்காக, தேய்பிறை அஷ்டமி அன்று காலஹஸ்த மந்திரத்தை ஜெபித்து பிரார்த்தனை ெசய்கிறார்கள். இந்த வேண்டுதலால் கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் விரைவில் நீங்குகின்றன.

கல்லால மரத்தின் கீழ் வீற்றிருப்பது போன்ற தட்சிணாமூர்த்தியை, ஒவ்வொரு குரு ஹோரையில் அதிகாலை நேரத்தில் 11 வாரங்களுக்கு கொண்டக்கடலையை மாலையாக கட்டி சாற்றி வழிபட்டால் தாங்கள் நினைக்கும் நல்லெண்ணங்கள் நிறைவேறுகிறதாம்.

இங்குள்ள பஞ்ச நதன நடராஜர் சிலை பஞ்ச நதன கல்லால் உருவாக்கப்பட்டதாகும். இந்த நடராஜர் சிலைக்கு வெட்டிவேர் மாலையை சாற்றி பிரம்மதீர்த்தத்தை கொண்டு அபிஷேகம் செய்து, அந்த அபிஷேக நீரையும், பிரம்மதீர்த்த சுனை நீரையும் 45 நாட்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகள் நீங்கப்பெறுகின்றனர். அதனால் இக்கோவில் நடராஜர் தனிச்சிறப்பு கொண்டு விளங்குகிறார். அதற்கு இக்கோவிலுக்கு ஏற்கனவே வந்து வேண்டுதலும், சிறுநீரக உபாதைகளும் நீங்கி சுகம் அடைந்தபிறகு வேண்டுதல் பிரார்த்தனையை நிறைவேற்றும் பக்தர்களே சான்றாகும்.

ஒரு முறை இந்திரன் தமது இந்திரப்பதவியை இழந்திருந்தான். இக்கோவிலில் எழுந்தருளி யுள்ள பஞ்ச நதன நடராஜரை வழிபட்டு தான் இழந்த பதவியை மீட்டான் என்று இக்கோவில் புராணசெய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே ஆட்சிப்பதவியை இழந்த அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், தேர்தலில் வீழ்ச்சி கண்டவர்களும் இக்கோவிலுக்கு வந்து பஞ்ச நதன நடராஜரை வழிபட்டு செல்கின்றனர்.

இந்த கோவில் கி.பி. 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மாமன்னர் ராஜராஜசோழர் காலத்தில் இக்கோவில் புணரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. பிறகு அவரது மகன் ராஜேந்திர சோழன் மற்றும் பேரன் ராஜாதிராஜன் ஆகியோரால் இக்கோவிலுக்கு கொடை அளிக்கப்பட்டுள்ளன. 50 கல்வெட்டுகளில் சோழமன்னர்கள் திருப்பணிகள் பதிவுகள் செய்யப்பட்டு, இக்கோவில் வளாக சுவர்களில் இடம்பெற்றுள்ளன.

பெரம்பலூரில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும், பாடாலூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது ஊட்டத்தூர் திருத்தலம்.

மேலும் செய்திகள்