கோபத்தை குறைக்கும் ஐராவதேஸ்வரர்

பெருந்தோட்டத்தில் உள்ளது ஐராவதேஸ்வரர் ஆலயம். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சோழர் கால ஆலயத்தில் அருள்புரியும் இறைவன் ஐராவதேஸ்வரர்.

Update: 2018-11-08 09:47 GMT
 இறைவி அதிதுல்ய குஜாம்பிகை. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் பலிபீடம், நந்தி இருக்க, இடது புறம் தனிக் கோவிலில் ‘வாதாடும் கணபதி’ அருள்பாலிக்கிறார்.

அடுத்துள்ள மகாமண்டபத்தின் தென் திசையில் நால்வர் திருமேனிகள் உள்ளன. வலது புறம் அன்னை அதிதுல்ய குஜாம்பிகையின் சன்னிதி உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இருகரங்களில் கும்பத்தையும், தட்டையும் சுமந்து, கீழ் இருகரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன், இளநகை தவழ, நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அன்னையை விதம் விதமாய் அலங்காரம் செய்வர். இதைக் காணவே பக்தர் கூட்டம் இந்த ஆலயத்திற்கு வருவதுண்டு.

மகாமண்டபத்தைத் தாண்டி, அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் ஐராவதேஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிள்ளையார், பிரம்மா, துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். துர்க்கைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை ராகு கால நேரத்தில், நான்கு வாரங்களுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும்.

திருச்சுற்றில் ஸ்தல விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்க, வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் உள்ளனர். கிழக்கு திருச்சுற்றில் சூரியன், சனீஸ்வரன் திருமேனிகள் காணப்படுகின்றன.

நாகை மாவட்டம் திருவெண்காட்டுப் பகுதியில் பல வனங்கள் இருந்தன. இதில் திருவெண்காடு ‘சுவேத வனம்’ எனவும், பூம்புகார் ‘சாயாவனம்’ எனவும், காவிரிப்பூம்பட்டினம் ‘பல்லவ வனம்’ எனவும், பெரும்பள்ளம் ‘தால வனம்’ எனவும், யோகீஸ்வரம் ‘யோகவனம்’ எனவும், பெருந்தோட்டம் ‘உத்யான வனம்’ எனவும் அழைக்கப்பட்டது.

பெருந்தோட்டத்தில் திருவெண்காட்டினைப் போல் மூன்று குளங்கள் இருந்தன. பெருவெள்ளம் ஒன்று வந்தபோது, இந்த மூன்று குளங்களும் அழிந்து விட்டன. அருகே இருந்த ஆலயமும் சிதிலமடைந்தது. ஊர் மக்களால் அந்த ஆலயம் புணரமைக்கப்பட்டது. அந்த ஆலயமே பெருந்தோட்டத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவனை வழிபடுவதால், கோப குணம் குறைந்து, மனதில் நிதானமும் பொறுமையும் நிலவும் என்கின்றனர் பக்தர்கள்.

துர்வாச முனிவரிடம் ஒரு முறை மகாலட்சுமி மலர் மாலை ஒன்றை அளித்தார். அதனை அந்த முனிவர், இந்திரனுக்கு பரிசளித்தார். இந்திரனோ மாலையை வாங்கி, தான் அமர்ந்திருந்த ஐராவதம் என்ற வெள்ளை யானையின் மீது வைத்தான். அந்த யானையோ, மாலையை தரையில் வீசி காலால் மிதித்தது. இதைக் கண்ட துர்வாச முனிவருக்கு கோபம் தலைக்கேறியது. ஐராவதத்தை கோபத்ேதாடு பார்த்தார். ‘நான் கொடுத்த மாலையை அவமதித்த நீ, தேவலோகத்தில் இருக்க தகுதியில்லை. காட்டு யானையாக பூலோகத்தில் சுற்றித் திரிவாய்’ என்று சாபம் அளித்தார்.

பூலோகம் வந்த யானை, ஒவ்வொரு சிவாலயமாக சுற்றித் திரிந்தது. இந்த தலத்திற்கு யானை வந்தபோது, இங்கிருந்த கணபதி, ‘இறைவனை வழிபடக்கூடாது’ என்று வாதிட்டார். அந்த விநாயகரை ஆலயத்தின் வடகிழக்கு திசையில் தனிக்கோவிலில் ‘வாதாடும் கணபதி’ என்ற பெயரில் வீற்றிருக்கிறார். பின்னர் சமரசம் ஆன கணபதி, யானையை அனுமதித்தார். அதன் பிறகே யானைக்கு சாப விமோசனம் கிடைத்தது.

ஐராவத யானை வழிபட்டதால் இத்தல இறைவன் ‘ஐராவதேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இது செவி வழி தல வரலாறு.

திருக்கார்த்திகை, சோம வாரங்கள், தைப்பூசம், சஷ்டி, பொங்கல், ஆண்டுப்பிறப்பு, மார்கழி 30 நாட்கள், சிவராத்திரி போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலய இறைவனை அத்தி (யானை) வழிப்பட்டதால் இந்த ஊருக்கு அத்தீஸ்வரம் என்ற பெயரும் உண்டு. இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

யானைக்கு அருள்பாலித்த இத்தல இறைவனை நாமும் வணங்கி அருள் பெறுவோமே!

அமைவிடம்

நாகை மாவட்டம் புதன் தலமான திருவெண்காட்டிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள பெருந்தோட்டம் என்ற கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம். சீர்காழி, மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.

வாதாடும் கணபதி

இந்த ஆலயத்தில் ‘வாதாடும் கணபதி’ என்ற பெயரில் விநாயகர் அருள்பாலிக்கிறார். இவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக காணப்படுகிறார். மழை வேண்டும் என்று இந்த ஊர் மக்கள் இந்த விநாயகருக்கு ‘கரமணி அபிஷேகம்’ செய்கின்றனர்.

விநாயகர் கருவறையிலிருந்து தண்ணீர் வெளியேறும் வழியை அடைத்து விடுவார்கள். விநாயகரின் கருவறையை தண்ணீர் கொண்டு நிரப்புவார்கள். விநாயகர் உருவம் முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருக்க தீபாராதனை நடைபெறும். அதன் பிறகு தண்ணீர் வெளியேறும் வழியை திறந்து விடுவார்கள். தண்ணீர் குறையத் தொடங்கியதும், மீண்டும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். பின் வடைமாலை சாத்தி, கொழுக்கட்டையால் வழிபடுவார்கள். இந்த பிரார்த்தனையால் மழை பெய்வது உறுதி என்கின்றனர் பக்தர்கள்.

தாமதமாகும் வழக்குகள் விரைந்து சாதகமாக முடிவதற்கும் அலுவலக ரீதியான தண்டனையிலிருந்து முழுவதும் விடுபடவும் இந்த விநாயகருக்கு கொழுக்கட்டையால் அர்ச்சனை செய்ய பலன் உடனடியாக கிடைக்குமாம்.

- ஜெயவண்ணன்

மேலும் செய்திகள்