கல்வி வளம் தரும் பழமையான சிவாலயம்

சோழ மன்னர்கள் நம் நாட்டில் எண்ணற்ற ஆலயங்களை கட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு பின் வந்தவர்களும் கூட அந்த ஆலயங்களை புனரமைத்து நல்ல முறையில் நிர்வாகம் செய்தனர்.

Update: 2019-02-19 09:14 GMT
ஆனாலும் தொடர் படையெடுப்பு காரணமாக பல ஆலயங்கள் சிதைவுற்றும் போயிருக்கின்றன. அப்படி ஒரு ஆலயம் தான் குளித்தலை அருகே உள்ள மேட்டு மருதூர் என்ற கிராமத்தில் உள்ள ஆரா அமுதீஸ்வரர் கோவில்.

காவிரியின் தென்கரை ஆலயமான இது, கிராமத்தின் கீழ் திசையில் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலயம் இது என்று சொல்லப்படுகிறது. கி.பி.985 முதல் 1014 வரை சோழ நாட்டை ஆண்ட முதலாம் ராஜராஜனால், கி.பி.996-ல் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப் பிடுகின்றனர்.

ஆலயத்தின் கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம் அனைத்தும் கருங்கற்களால் ஆனவை. இறைவனின் கோபுரம் மட்டும் செங்கற்களால் உருவாகியிருக்கிறது. இந்த கோபுரம் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. கருவறையின் மூன்று பக்கங்களிலும் 22 தூண்கள் உள்ளன. கருவறையின் வெளிப்பக்கத்தில் கல்வெட்டு குறிப்புகள் காணப்படுகின்றன. பெரும்பாலான சோழர் கால சிவன் ஆலயங்களில் மூலவர் விக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளதைப் போலவே, இந்த ஆலயத்திலும் தாமரை இதழ் விரித்ததைப் போல் ஆவுடையாரும் அதன் மேல் ஆறடி உயரமுள்ள எண் பட்டை வடிவம் கொண்ட லிங்கமும் இருக்கிறது.

இந்த ஆலயத்தில் அம்மன் சன்னிதி இல்லை. 10 தூண்கள் கொண்ட அர்த்த மண்டபம் பல்வேறு சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டிருக்கிறது. நுழைவு வாசலில் தென்புற நிலைக் காலில் முதலாம் ராஜராஜனின் கல்வெட்டு 21 வரிகளில் உள்ளது. கல்வெட்டின் முதல் 10 வரிகள் தெளிவாகவும், ஏனைய வரிகள் சற்றே சிதிலமடைந்தும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டு முதலாம் ராஜராஜனின் 11-வது ஆட்சி ஆண்டை சேர்ந்தது என்கிறார்கள். இந்த கல்வெட்டைக் கொண்டு இந்த ஊரைப் பற்றியும், இக்கோவில் இறைவனைப் பற்றியும், மேலும் பல தகவல்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.

இக்கல்வெட்டில் இருந்து, இந்த ஊர் பழங் காலத்தில் ‘மாதான மருதூர்’ என்றும், இந்த ஆலய இறைவன் ‘ஆராவமிதீஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டு வந்திருப்பது தெரிய வருகிறது. தினசரி ஒரு கால பூஜை நடக்கும் இந்த ஆலயத்தில், பிரதோஷம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. சிவராத்திரியின் போது இறைவனுக்கு நான்கு கால பூஜைகள் நடக்கிறது.

கல்வி அறிவு வளரவும், தேர்வில் நல்ல முறையில் வெற்றி பெறவும், இத்தல இறைவனை வேண்டிச் செல்கின்றனர், இந்தப் பகுதி மாணவர்கள். கருவறையைச் சுற்றி 10 அடி உயரமுள்ள கருங்கல் சுற்றுச் சுவரை அமைத்த மன்னன், அதன் மேல் உள்ள 20 அடி உயரமுள்ள கோபுரத்தை மட்டும் செங்கற்களால் ஏன் அமைத்தான் என்று தெரியவில்லை. இந்த ஆலயத்தை தினமும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை தரிசனம் செய்யலாம்.

கரூர் மாவட்டம் கரூர் - திருச்சி சாலையில் உள்ளது மருதூர். இங்கிருந்து 1½ கிலோமீட்டர் தூரம் சென்றால் மேட்டு மருதூர் கிராமத்தை அடையலாம். திருச்சியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.

- மல்லிகா சுந்தர்

மேலும் செய்திகள்