சங்கடம் தரக்கூடியதா சந்திராஷ்டமம்?

உலக உயிர்களை இயங்கச் செய்வது சூரிய ஒளி. ஒரு உயிரை ஜனிக்க செய்வது சூரிய ஒளி என்றால், ஜனித்த உயிரை தாங்கும் உடல் சந்திரனாகும். ஜோதிட ரீதியாக லக்னம் என்றால் உயிர், ராசி என்றால் உடல். ஜாதகத்தில் ஜாதகர் உயிர், ஆன்மா சூரியன் என்றால், உடல், மனம் சந்திரனாகும். சூரிய, சந்திரர்களின் இயக்கமே ஜோதிடமாகும்.

Update: 2019-03-21 21:30 GMT
மனோகாரகனான சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாட்கள் சஞ்சரிக்கிறார். ராசி மண்டலத்தை சுற்றிவர அவருக்கு 27 நாட்கள் ஆகிறது. சந்திரன் மனோகாரகன் என்பதாலும், அதன் இயக்கம் விரைவாக இருப்பதாலும் சந்திரனின் இயக்கத்திற்கு ஏற்ப மனிதர்களின் மனம், எண்ண அலைகள் ஒவ்வொரு நிமிடமும் மாறிக் கொண்டே இருக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரமே, ஜென்ம நட்சத்திரமாகும். சந்திரன் நிற்கும் ராசி ஜென்ம ராசியாகும்.

ஜனன ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்றிருந்தால் பண்பு, பாசம், நல்ல மனநிலை, கவிதை, கற்பனைத் திறன், கவுரவம், புகழ், நிம்மதியான உறக்கம், அரசு வழியில் ஆதரவு உண்டாகும். மனோகாரகன் வலிமை இழந்தால் மனக்குழப்பம், மன நோய், மற்றவர்களிடம் ஒத்துப்போக முடியாத நிலை, எதிலும் தோல்வி, அனுகூலமற்ற நிலை ஏற்படும்.

கோச்சாரத்தில் ராசிக் கட்டத்தை சந்திரன் வலம் வரும் போதும், ஜென்ம ராசிக்கு 8-ல் வரும் போதும், மாதத்திற்கு 2¼ நாட்கள் நெருக்கடியான, அவயோக,  இடையூறுகளை ஏற்படுத்துகிறது. சந்திரம் + அஷ்டமம் = சந்திராஷ்டமம் ஆகும். குறிப்பாக பிறந்த நட்சத்திரத்திற்கு, 17-வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம் சந்திராஷ்ட நாளாகும்.

சந்திராஷ்டமம் குறித்து பல்வேறு விதமான கருத்துகள் நிலவுகிறது. சந்திராஷ்டமம் என்று தெரியாத வரை எந்த கெடு பலனும் இல்லை. தெரிந்த பிறகு கெடு பலன் மிகுதியாகுகிறது என்பது ஒரு சிலரின் கருத்து. அத்துடன் சந்திராஷ்டமத்தால் எந்த பாதிப்பும் இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.

8-ம் இடம் என்பது சில தடைகள், மனச் சங்கடங்கள், மனச்சோர்வு, இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மனம், எண்ணங்களை வழிநடத்தும் சந்திரன் மறைவு ஸ்தானமான எட்டாம் இடத்தில் மறைவதால், உடலும் மனமும் 2¼ நாட்கள் பலவிதமான இன்னல்களை அனுபவிக்கிறது. மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக தனம், வாக்கு, குடும்பம் என்னும் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால், தன ஸ்தானமும் பாதிப்படைந்து பொருள் இழப்பும் ஏற்படும்.

மனித உடலில் ஓடுகின்ற ரத்தத்தை குறிப்பவர் சந்திரன். சந்திராஷ்டம நாட்களில் பதற்றத்தால் ரத்தம் சூடேறுவதால் கோபம், வாக்குவாதம், மறதி, படபடப்பு, சிடுசிடுப்பு அதிகமாக இருக்கும். பதற்றத்தின் காரணமாக தவறு நேரலாம் என்பதால், மேலே குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும், கவனமாகவும் இருப்பது நலம் தரும்.

சந்திராஷ்டம நாளில் மனமும் எண்ணங்களும் தெளிவானதாக இருக்காது. எனவே முக்கிய பேச்சுவார்த்தைகளை தவிர்க்க வேண்டும். புதிய தொழில் தொடங்குதல், ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுதல், புதிய முயற்சிகளை செய்து பார்ப்பதும் நல்லதல்ல. புதுமனை புகுவிழா, திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளையும் இந்த நாளில் தவிர்த்து விடுவது சிறப்பு. வாகனங்களில் சீரான வேகத்துடன் செல்லுங்கள். உயிர் காக்கும் அறுவை சிகிச்சையை வேறு ஒரு நாளில் செய்து கொள்ளலாம்.

ஜனன ஜாதகத்தில் லக்னம் வலிமையானவர்களுக்கும், ஆழ்மனதை அடக்கி ஆளத் தெரிந்தவர்களுக்கும் சந்திராஷ்டமம், கண் திருஷ்டி, செய்வினை போன்ற எந்த பாதிப்பும் எப்போதும் இருக்காது. மேலும் லக்னம் வலிமை இல்லாதவர்கள், தியானம், யோகா போன்ற முறையான மூச்சுப் பயிற்சி செய்து வந்தால் எந்த பாதிப்பும் நேராது.

சந்திராஷ்டமம் உள்ளவர்கள் அந்த நாட்களில் முக்கியமான பணிகளை தவிர்க்க முடியாது. சில முக்கிய முடிவுகள் அந்த நாளில் எடுக்க வேண்டியது இருக்கலாம். அதுபோன்ற தருணங்களில், சந்திராஷ்ட நாட்களில் முக்கியமான செயல்களை செய்ய வேண்டிய நிலை வரும்போது ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவர்களுக்காக கீழே கொடுக்கப்பட்ட வழிபாட்டை செய்தால் போதுமானது.

மேஷம் -துவரை தானம் செய்து, முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

ரிஷபம்- மொச்சை தானம் செய்து, மகாலட்சுமியை வழிபடுங்கள்.

மிதுனம்-பச்சை பயிறு தானம் செய்து, பெருமாளை வழிபட வேண்டும்.

கடகம்-பச்சரிசி தானம் செய்து, அம்பிகையை வழிபடுங்கள்.

சிம்மம்-கோதுமை தானம் கொடுத்து, சிவலிங்கத்தை வழிபாடு செய்யலாம்.

கன்னி-அவல் தானம் செய்து, கிருஷ்ணரை வழிபாடு செய்யுங்கள்.

துலாம்-நாட்டு சர்க்கரை தானம் செய்து அலங்காரத்தில் இருக்கும் அம்பிகையை வழிபடுங்கள்.

விருச்சிகம் -
பருப்பு சாதம் தானம் செய்து, அங்காரகனை வழிபட வேண்டும்.

தனுசு-கொண்டைக் கடலை தானம் செய்து, பெரியவர்களின் ஆசியைப் பெறுங்கள்.

மகரம்-தயிர் சாதம் தானம் செய்து விநாயகரை வழிபடலாம்.

கும்பம்-எள் உருண்டை தானம் செய்து, ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.

மீனம்-லட்டு தானம் செய்து ஆன்மிக குருமார்களின் ஆசி பெற வேண்டும்.

வழிபாட்டிற்குப் பிறகு சந்திராஷ்டம நாட்களில் தவிர்க்க முடியாத செயல்களைச் செய்தால் தடைகள் அகலும். வெற்றியும் வந்து சேரும்.

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி.

மேலும் செய்திகள்