பயமுறுத்தும் கனவுகளுக்கான பரிகாரங்கள்

மனித வாழ்வின் பெரும்பான்மையான நேரம் தூக்கத்தில் தான் கழிகிறது

Update: 2019-05-21 09:55 GMT
ஒரு சிலருக்கு தூக்கத்தில் சில கெட்ட கனவுகள் வந்து பாடாய்ப்படுத்திவிடும். கெட்ட கனவுகளை எந்த நேரத்தில் காண்கிறோம் என்பதை பொறுத்து, அது பலிக்குமா அல்லது பலிக்காதா என்பதை பெரியவர்கள் கணக்கிட்டு சொல்வார்கள். அதன் அடிப்படையில் கெட்ட கனவுகள் வந்தால் எல்லோருக்கும் ஒரு வித படபடப்பு இருக்கும். எந்த மாதிரியான கெட்ட கனவுகளுக்கு என்ன மாதிரியான ஆன்மிக பரிகாரங்களை செய்யலாம் என்பது பற்றி ஆன்மிக சான்றோர்கள் சொல்லி வைத்த, சில வழிமுறைகள் பற்றி இங்கே காணலாம்.

பாம்புகள் மற்றும் பிற விஷ ஜந்துகள் கனவில் தொடர்ந்து வந்து பயமுறுத்தி கொண்டே இருந்தால், கருடன் மீது இருக்கும் விஷ்ணுவின் படத்தை பூஜை செய்து வழிபடலாம். அல்லது கோவிலில் உள்ள கருடாழ்வாருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கினால் விஷ ஜந்துகள் சம்பந்தமான கனவுகள் வராது.

நோய், வியாதி சம்பந்தமான கனவுகள் தொடர்ந்து வந்தால், தன்வந்திரி பகவான் மந்திரம் கூறி தன்வந்திரியை வழிபாடு செய்து வர வேண்டும். அத்துடன் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதும் நல்லது.

பேய், பிசாசு மற்றும் நம் காரியங்கள் தடைபடுவது போல கனவு கண்டால், ஆலமரத்தடி பிள்ளையாரை வழிபட வேண்டும். பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்து விநாயகர் அகவலையும் படித்து வந்தால் அது போன்ற கெட்ட கனவுகள் அண்டாது.

பணக் கஷ்டம், பண இழப்பு, பண நஷ்டம் போன்ற கனவுகளை கண்டால், மகாலட்சுமியை நெய் தீபம் ஏற்றி மாலை நேரங்களில் வழிபட்டு வந்தால் அதன் பாதிப்பு இருக்காது.

படிப்பு தடைபடும்படியான கனவுகளை கண்டால், சரஸ்வதி தேவி மற்றும் ஹயக்கிரீவர் மந்திரங்களை உச்சரித்து வழிபாடுகள் செய்து வர வேண்டும்.

இறந்தவர்கள் அடிக்கடி கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால், பெருமாளுக்கு ஏகாதசி விரதம் இருந்து பிரதட்சிணம் செய்து வழிபட வேண்டும். குல தெய்வத்துக்கு பொங்கல் வைத்தும், இறந்த நம் முன்னோருக்கு திதி கொடுத்தும் வழிபட வேண்டும்.

பொதுவாக கெட்ட கனவுகள் கண்டால், காலையில் எழுந்து குளித்து விட்டு பெருமாள் அல்லது இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து வழிபட வேண்டும். அதனால் மனம் தெளிவடையும். மேலும், அருகில் உள்ள கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வதும் நல்லது.

மேலும் செய்திகள்