நபிகளார் பிரகடனப்படுத்திய மனித உரிமை சாசனம்

மனித உரிமைகளை மதித்து நடக்கப்பட வேண்டும் என்று, 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நபிகளார் காட்டிய அக்கறை என்பது மனிதகுல மேன்மைக்கு என்றும் உறுதுணையாகவே விளங்குகின்றது.

Update: 2019-07-19 11:55 GMT
அன்றைய சமுதாய மக்கள் மத்தியில் ஒழுக்கத்தோடும், உண்மையோடும், நற்குணத்தோடும் வாழ்ந்து காட்டிய நபிகளார், அம்மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகவே விளங்கினார்கள்.

தனது 40-ம் வயதில் நபிகளார், தன்னை நபி (இறைவனின் தூதர்) எனக்கூறிய போதும், ‘இறைவன் ஒருவனே அவனுக்கு இணைக் கற்பிக்க கூடாது’ என நபிகளார் பேசிய போதும், அம்மக்கள் நபிகளாருக்கு பலத்த எதிர்ப்பை காட்டத் தொடங்கினார்கள்.

அதனை எல்லாம் மிக நேர்த்தியாக எதிர்கொண்ட நபிகளார் பல்வேறு சிரமங்களை தாங்கிக் கொண்டு, தனது 23 ஆண்டு கால ஏகத்துவ பணியில் மாபெரும் வெற்றியை தனது வாழ்நாளிலேயே கண்டு மகிழ்ந்தார்கள்.

நபிகளார் தனது 62-ம் வயதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தனது தோழர்களுடன் ஹஜ் யாத்திரை செய்தார்கள்.

அப்போது, ‘கஸ்வா’ என்ற ஒட்டகத்தின் மீது அமர்ந்தவர்களாக நபிகளார் ஆற்றிய சொற்பொழிவு என்பது உலக வரலாற்றில் என்றும் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டவையாகும்.

உரையின் தொடக்கமாக இறைவனை புகழ்ந்து பேசிய நபிகளார், வரும் அடுத்த ஆண்டில் தனது உலக பயணம் (உலக வாழ்வு) நிறைவு பெற்று விடும் என்பதை இவ்வாறு சூசகமாக அறிவித்தார்கள்:

“மக்களே எனது பேச்சை கவனமாக கேளுங்கள், இந்த ஆண்டிற்கு பிறகு மீண்டும் இதே இடத்தில் நான் உங்களை சந்திப்பேனா? என்பது எனக்கு தெரியாது”, என்ற நபிகளார், பிறப்பால் மனிதர்கள் மத்தியில் ஏற்ற தாழ்வு கற்பிக்கப்பட கூடாது. அதுவே மனித உரிமை மீறலின் அடிப்படையாக உள்ளது என்பதை அழகுற இவ்வாறு கூறினார்கள்.

“மக்களே, உங்களது இறைவன் ஒருவனே. ஓர் அரபி மற்றைய அரபி அல்லாதவரை விடவோ, அரபி அல்லாதவர்கள் மற்றைய அரபியரை விடவோ, எந்த மேன்மையும் சிறப்பும் பெற்றவர்களாக இல்லை”.

“இன்னும் வெள்ளை நிறத்தவர்கள் கருப்பு நிறத்தவர்களை விடவோ, கருப்பர் வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் (நிறத்தால்) பெற்றவராக இல்லை”.

“(நீங்கள்எவராயினும்) உங்களது இறையச்சம் ஒன்றே உங்களது மேன்மையையும் உங்களது சிறப்பையும் நிர்ணயிக்கும். உங்களில் அதிகம் இறையச்சம் உடையவரே, இறைவனிடத்திலே சிறந்தவராக இருக்கின்றார்”.

“மக்களே, இந்த ஹஜ்ஜுடைய மாதமும் இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானதோ, அவ்வளவு புனிதமானது- உங்களது உயிர், உடைமைகள், உங்களது மானமும் மரியாதையும் (என்பதை நினைவில் வையுங்கள்)”.

“உங்களது அடிமைகள் விஷயத்தில் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் உண்பதையே அவர்களுக்கு உண்ணக்கொடுங்கள். நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கு உடுத்தக்கொடுங்கள்”.

“பெண்கள் விஷயத்தில் இறைவனை அஞ்சுங்கள். அவர்களுக்கு நன்மையே நாடுங்கள். எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்ளதோ அதேபோல உங்கள் மீதும் உங்களது மனைவியருக்கு உரிமைகள் உள்ளது”.

“அறியாமை காலத்தின் அனைத்து பாதகச் செயல்களும் என் பாதங்களுக்கு கீழே (போட்டு) புதைக்கப்பட்டு விட்டது. கொலைக்கு கொலை, பழிக்கு பழி என்று உயிர்பலி வாங்குவதை நான் ரத்து செய்கின்றேன்.”

“ஒருவர் குற்றம் செய்தால் அவரே அக்குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டியவர் ஆவார். மகனுடைய குற்றத்திற்கு தந்தையோ, தந்தையின் குற்றத்திற்கு மகனோ, தண்டிக்கப்பட (கூடாது) மாட்டார்கள்”.

இவ்வாறு அன்றே மனித உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும் என பேசியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே.

அத்தகைய மகத்தான மனித சேவையாற்றிய நபிகளார் தனது செயல்பாடு குறித்து மக்களிடம் இவ்வாறு வினவினார்கள்:

“ஓ மக்களே, மறுமை நாளில் என்னை பற்றி இறைவன் உங்களிடம் விசாரித்தால் என்ன பதில் கூறுவீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அம்மக்கள் ஒருமித்து கூறினார்கள்: “நீங்கள் இறைவனின் தூதை எங்களிடம் தெளிவாக தெரிவித்து விட்டீர்கள். உங்களது (கடமையை) நிறைவேற்றிவிட்டீர்கள். (மனித சமுதாயத்திற்கு) நீங்கள் நன்மையையே நாடினீர்கள் என நாங்கள் இறைவனிடம் சாட்சி கூறுவோம்” என்றார்கள்.

அதற்கு நபிகளார் தனது ஆள்காட்டி விரலை வானத்தின் பக்கம் உயர்த்தியவர்களாாக, “இறைவா, இதற்கு நீயே சாட்சியாக இருக்கின்றாய்” என 3 முறை கூறிய பின் தனது சிறப்பு வாய்ந்த இறுதிச்சொற்பொழிவை நிறைவு செய்தார்கள்.

அன்றே மனித உரிமைகள் குறித்து பேசிய நபிகளார் அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள். மனித குலத்தின் மணிமகுடமாக அவர்கள் என்றும் திகழ்வதற்கு அதுவே அடிப்படையாகும்.

- மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.

மேலும் செய்திகள்