புதன் கிரகத்தின் தன்மை

தகவல் தொடர்பு வளர்ந்து விட்ட இந்த காலத்தில், உலகமே நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்குகிறது. தகவல் தொடர்பு மற்றும் அதற்காக மனிதர்கள் பயன்படுத்தும் அனைத்து சாதனத்திற்கும் காரகனாக இருப்பவர் புதன்.

Update: 2019-10-03 23:45 GMT
நவீன உலகத்தை ஆட்சி செய்வதே புதன்தான் என்றால் அது மிகையாகாது. உலகம் சுருங்கி சட்டை பையில் உட்கார்ந்ததற்கு முழுக் காரணமாக புதனைத்தான் கூற வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்புவரை ஒருவருக்கு பள்ளி, கல்லூரி, அண்டை, அயலார், வேலைபார்க்கும் இடத்தின் மூலமாக நண்பர்கள் கிடைத்தார்கள். ஆனால் தற்போது தகவல் தொடர்பு துறையின் வளர்ச்சியின் காரணமாக சமூக வலைத்தலங்களான பேஸ்புக், வாட்ஸ்-அப், டிக் டாக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், டெலிகிராம், யூ-டியூப் என நண்பர்கள் கிடைக்கிறார்கள். 10-வது கிரகமான செல்போன், ஒருவரின் பூட்டிய வீட்டுக் கதவை தட்டாமலேயே, அமைதியாக உள்ளே நுழைந்து பெரிய ஆர்ப்பாட்டத்தையே செய்து விடுகிறது.

சிறு வயது குழந்தைகள் முதல் வாழ்நாளை எண்ணிக் கொண்டு இருக்கும் பெரியவர்கள் வரை, இன்றளவுக்கு செல்போன் இல்லாதவர்களே இல்லை. என்பதை விட செல்போன் மூலம் அறிமுகமான நண்பர்கள் இல்லை எனக் கூறலாம். பிறந்த குழந்தை கூட செல்போனில் பாட்டு கேட்டால் தான் பால் குடிக்கிறது. இது உலகை முன்னேற்றபாதைக்கு அழைத்து செல்கிறதா? அல்லது அழிவை நோக்கி அழைத்து செல்கிறதா என்பதை உணர்வு பூர்வமாக யோசித்தால், ஆக்கலுக்கு சமமாக அல்லது அதைவிட அதிகமாகவே அழிவும் இருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

தகவல் தொடர்பு என்பது ஓரிடத்தில் பெற்ற தகவலை சேமித்து, மாறுபாடு இல்லாமல் மற்றொரு இடத்திற்கு வேகமாக கொண்டு செல்வதையே குறிக்கும். நல்ல செயலுக்காக உருவான தகவல்தொடர்பு பெரும் கலாசார சீர்கேட்டை உலகெங்கும் பரப்பி வருகிறது. இதனால் பலன் அடைந்தவர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வதை விட, பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிதான் நாள்தோறும் அதிக அளவில் பார்த்துக் கொண்டு வருகிறோம்.

“தகவல் தொடர்புக்குரிய கிரகமான புதன், சுப கிரகம்தானே. பிறகு எப்படி இப்படி ஒரு கெடுதலை அவர் செய்வார்?” ஜோதிட ஞானம் உள்ளவர்கள் சிலர் கேட்கலாம்.

புதன் மிகவும் நல்லவர். ஆனால் மிக மிக கெட்டவர். சுப கிரகத்துடன் சேர்ந்த புதன் சுப பலன்களையும், அசுபர்களுடன் சேரும் புதன் அசுப பலன்களையும் தயங்காமல் செய்வார். அதனால் தான் புதனை ‘இரட்டை தன்மையுள்ள கிரகம்’ என ஜோதிடம் கூறுகிறது.

ராகு- கேதுக்கள் செய்ய தயங்கும் வேலையைக் கூட, மூளையையும், நுண்ணறிவையும், ஆழ்ந்த சிந்தனையையும், நினைவாற்றலையும் பயன்படுத்தி புதன் திட்டமிட்டு கச்சிதமாக செய்துவிடுவார். கோச்சாரத்தில் புதன் வீட்டில் ராகு இருப்பதால்தான், ஆதாரங்களை வைத்து சிலரை மிரட்டும் செயல் நடக்கிறது. அத்துடன் பல குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும், படிக்கவும் மறுக்கிறார்கள். சில குழந்தைகள் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறார்கள். முதுகலை பட்டம் படிப்பவர்கள் கூட, படிக்கப் பிடிக்கவில்லை என்று சாதாரணமாக கூறுகிறார்கள். இவற்றுக்கெல்லாம் காரணம், புதன் இருக்கும் கிரக அமைப்புதான்.

“உலகம் முழுவதும் செல்போன் பயன்பாடு அதிகமாக இருக்கின்ற நிலையில், ஒரு சாரார் மட்டும் பாதிக்கப்படுகிறார்களே ஏன்?.” இந்தக் கேள்விக்கு ஜோதிட ரீதியான காரணங்களைப் பார்ப்போம்.

லக்னம் 7-ம் அதிபதி, 7-ல் நின்ற கிரகம், புதன் பலம் பெற்றவர்களுக்கு எப்பொழுதுமே நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களின் நட்புக்கு வானமே எல்லை. வாழ்நாள் முழுவதும் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பார்கள். எளிதில் அவர்களை யாரும் பிரிக்க முடியாது. ஒருவருக்கொருவர் உதவியாக அனுசரணையாக இருப்பார்கள்.

லக்னம் 7-ம் அதிபதி, 7-ல் நின்ற கிரகம், 6,7,8-ம் அதிபதிகள் சம்பந்தம், புதன் நீசம், அஸ்தமனம், வக்ரம் பெற்றவர்கள், புதன் மற்றும் ராகு-கேது, புதன் - சனி, புதன் - செவ்வாய் சம்பந்தம் பெற்றவர்கள், நண்பர்களை எப்பொழுதுமே நம்பக்கூடாது. புதன்- ராகு சம்பந்தம் இருப்பவர்களின் நண்பர்கள், ஆதாரத்தை சேமித்து வைத்து தக்க சமயத்தில் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தி மிரட்டுபவர்களாக இருப்பார்கள்.

புதன் மற்றும் ராகு- கேது சம்பந்தம் இருப்பவர்கள், பிற மொழி பேசுபவர்களிடம் நட்பு வைக்கக்கூடாது. 10-வது கிரகமான செல்போனை அவசியத் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவையற்ற தகவல்களை போனில் சேமிக்க கூடாது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடக்கூடாது. கையொப்பம் மற்றும் கைரேகையால் பிரச்சினை வரும். டைரி எழுதும் பழக்கத்தையும் வைத்துக் கொள்ளக்கூடாது. காதல் இருந்தால் விட்டு விடுவது நல்லது.

பரிகாரம்

மேற்கண்ட அமைப்பு உள்ளவர்கள் புதன்கிழமை தோறும் மகாவிஷ்ணு, சக்ரத்தாழ்வார் மற்றும் நரசிம்மரை வழிபாடு செய்யலாம். பஞ்சமி திதி நாட்களில் மதுரை மீனாட்சி அம்மன், வராகி அம்மன் வழிபாடு செய்ய வேண்டும். கல்வி கற்க வசதி இல்லாதவர்களுக்கு பள்ளி, கல்லூரி கட்டணம் கட்ட உதவி செய்யலாம். தவறான நட்பில் பிள்ளைகள் பாதிக்கப்பட்டு இருந்தால், பெற்றோர்கள் பிள்ளைகளை மிரட்டாமல் காவல்துறையின் உதவியை நாட வேண்டும்.

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி.

மேலும் செய்திகள்