ஆற்றின் கரையில் இங்கிலாந்து பிள்ளையார்

இங்கிலாந்து நாட்டில் கொவன்ட்ரி என்ற சிறு நகரத்தில் விநாயகர் வீற்றிருக்கிறார்.

Update: 2019-11-05 09:48 GMT
ற்றங்கரையும் அரசமரத்தடியும் பிள்ளையாருக்கு பிடித்த இடம். அது எந்த ஊராக.. எந்த தேசமாக இருந்தால் என்ன?

இங்கிலாந்து நாட்டில் கொவன்ட்ரி என்ற சிறு நகரத்தில் விநாயகர் வீற்றிருக்கிறார். பளிங்கு போன்ற குளிர்ந்த நீர் சிலு சிலு வென்று ஓடிக்கொண்டிருக்க, பசுமை இருகரை களிலும் பாய் விரித்திருக்க, படகுப் போக்குவரத்து நடைபெறும் கொவன்ட்ரி ஆற்றின் கரையோரம் கோவில் கொண்டுள்ளார், இந்த விநாயகப்பெருமான்.

இந்த ஆலயம் அமைந்திருக்கும் வளாகத்துக்குள் நுழைந்ததும், ஒரு சிறிய கோவிலில் கணபதி அமர்ந்திருக்க ‘இங்கே தேங்காய் உடைக்கவும்’ என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது.

விசாரித்ததில், புதிய வாகனங்கள் வாங்குவோர் இவர் முன்னே நிறுத்தி தேங்காய் உடைத்து வழிபாடு செய்துவிட்டுத்தான் வாகனத்தை ஓட்டுகிறார்கள் என்ற செய்தி கிடைத்தது.

வெளிச்சுவர் முழுவதும் வெள்ளை, காவிநிற நெடும்பட்டைகளும், நுழைவு வாசலில் சிறிய கோபுரமும் கோவிலை அடையாளப்படுத்துகின்றன. கோவிலுக்கு முன் ஓடும் ஆற்றின் கரையோரம் இலைகளும், கிளைகளும், அரசமரம் போலவே காட்சிதரும் ‘சில்வர் பெரிச்’ மரம் நிழல் பரப்பிக் கொண்டிருக்கிறது. மக்கள் தங்கள் தோஷம் நீங்க மஞ்சள் துணியில் எலுமிச்சை பழத்தை சேர்த்துக் கட்டி மரத்தில் தொங்கவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

கோவில் வாசல் வழியே நுழைந்ததும் பலிபீடமும், கொடி மரமும் அதன் கீழே சிறிய ஸ்தம்ப விநாயகரும் தோற்றம் தருகின்றன. மூஷிக வாகனத்தில் எதிரே உயர்ந்து நின்றுள்ள விமானத்தின் கீழ் கருவறையில் மூலவரான சித்தி விநாயகர் அமர்ந்த கோலத்தில் அருளாட்சி செய்கிறார். ஐந்தடி உயரமுள்ள இந்த விநாயகர்தான் ஐரோப்பா முழுவதும் உள்ள இந்து கோவில்களில் இருக்கும் விநாயகர் சிலைகளை விட பெரியது என்று பெருமை பொங்கச் சொல்கிறார்கள்.

இந்த விநாயகரின் வலதுகரம் அபயம் அளிப்பதாகவும், இடதுகரம் கனியைத் தாங்கியும், பின்னிரு கரங்கள் பாசாங்குசம் ஏந்தியும் காட்சி தருகிறார்.

விநாயகர் சன்னிதியின் தென்புறம் கயிலாசநாதராக சிவலிங்கமும், வட புறத்தில் சங்கு சக்கரதாரியான வேங்கடேச பாலாஜியும், தனித்தனியான சிறிய சன்னிதியில் வீற்றிருக்கின்றனர்.

மூலவரின் கோஷ்டத்தில் தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தி சுவாமியும், மேற்கில் லிங்கோத்பவரும் வடக்கில் கோமுகத்தின் மேல், பிரம்மனுக்குப் பதிலாக அவர் மனைவி சரஸ்வதியும், கீழே சண்டிகேசரும் தரிசனம் தருகின்றனர்.

பிரகாரத்தை வலம் வரும் போது, திரிசூலம் ஏந்திய வடக்கு நோக்கிய துர்க்கை அம்மனும், கிழக்கு நோக்கிய வரலட்சுமி சன்னிதியும், சிவலிங்கம் ஏந்திய நாக தம்பீரானாக ஐந்து தலை நாகமும் தனித்தனி சன்னிதிகளில் உள்ளன.

அடுத்து ராமசபை என்ற சன்னிதியில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் காட்சிதருகின்றனர். அதற்கு அடுத்தாற்போல், வள்ளி - தெய்வானை சமேத வேல் தாங்கிய முருகப்பெருமான் ‘கதிர்காம முருகன்’ என்ற நாமத்துடன் சிறு சன்னிதியில் எழுந்தருளியிருக்கிறார்.

வடக்கு சுற்றில் தென்திசை நோக்கியபடி, சபரிமலை ஐயப்பனும், சிவகாமி அம்மன் சமேத தில்லைக் கூத்தனும் காட்சி தருகின்றனர். வசந்த மண்டபத்தில் விநாயகர் உட்பட எல்லா தெய்வங்களின் செப்புத் திருமேனிகள் அழகுற அமைந்துள்ளன. ஈசானிய மூலையில் ஒன்பது கிரகங்களும் பீடத்தின் மீது நின்ற கோலத்தில் வீற்றிருக்கின்றன. மேற்கு நோக்கியபடி பைரவர் காட்சி தருகிறார்.

இந்த ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களும், திருக் கார்த்திகை, சஷ்டி போன்ற விழாக்களும், சிவராத்திரி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்களும், நவக்கிரக பெயர்ச்சிகளின் போதும், வேள்வி மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

டாக்டர் ச.தமிழரசன்

மேலும் செய்திகள்