தொண்டர்களுக்கு பிறகே இறைவன்

‘இறைவனின் தொண்டர்களுக்கு நாம் பணி செய்யும் பாக்கியம் கிடைத்துவிட்டால், மோட்சத்தைத் தேடிச் செல்லவேண்டிய அவசியம் இல்லை. அது தானாக அமைந்துவிடும்’ என்கிறார், தாயுமானவர்.

Update: 2021-02-11 22:30 GMT
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூரில் இருந்த காலங்களில் எல்லாம், அங்குள்ள தேவாசிரியன் மண்டபத்தை முதலில் வலம் வந்து, அங்கிருக்கும் அடியவர்களை வணங்கிய பிறகுதான், தன்னுடைய தோழரான திருவாரூர் ஈசனை வழிபடச் செல்வார். ஒருமுறை சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஈசனை நினைத்தவாறே, தேவாசிரிய மண்டபத்தை வலம் வராமலும், அங்கிருந்த அடியவர்களை வணங்காமலும் நேராகத் தியாகராஜர் சன்னிதிக்குச் சென்றுவிட்டார்.

அப்போது அடியார் மண்டபத்தில் இருந்த அடியவர்களில் ஒருவரான விறன்மிண்டர், கோபம் கொண்டார். “அடியாரை வணங்கி விட்டுதான் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது மரபு. அப்படிப்பட்ட அடியவர்களை மதிக்காத சுந்தரரை, இப்போதே சைவ நெறியில் இருந்து தள்ளி வைக்கிறேன்” என்றார்.

இதனைக்கண்டு மனம் பதறிய பிற அடியவர்கள் விறன்மிண்டரிடம், “சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாரூர் தியாகேசனின் அருள் நிரம்பப் பெற்றவர். அதனால் அவர் மீது இவ்வளவு கோபம் வேண்டாம்” என்று தடுத்தனர்.

இதனால் மீண்டும் கோபம் கொண்ட விறன்மிண்டர், “திருவாரூரில் இனிமேல் காலடி எடுத்து வைக்க மாட்டேன்” என சபதம் செய்து வெளியேறிவிட்டார். இதனை அறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாரூர் ஈசனிடம் வேண்டினார். அப்போது இறைவன், “சுந்தரா! நம் தொண்டர்களைப் போற்றி திருத்தொண்டத் தொகைப் பாடிடுக” எனக் கூறினார். அதோடு ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என்று சுந்தரருக்குப் பாட அடியெடுத்தும் கொடுத்தார்.

ஈசனின் திருவிளையாடல் மூலம் மீண்டும் திருவாரூர் வந்துசேர்ந்தார், விறன்மிண்டர். அப்போது சுந்தரரின் திருத்தொண்டத் தொகையைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். சுந்தரருடைய உள்ளம் அடியாரிடத்தில் பதிந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு இன்பம் அடைந்தார். அவரது பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், அவரை சிவகணங்களுக்குத் தலைவராகத் திகழுமாறு அருளினார். இப்படிப்பட்ட அப்பழுக்கற்ற பரிசுத்தமான அன்புள்ளமும், தொண்டுள்ளமும், பக்தி உணர்வும் கொண்ட சிவனடியார்களே, அறுபத்து மூன்று நாயன்மார்களாகத் திகழ்ந்தனர்.

இந்த அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் வகையில், திருவாரூர் தியாகேசன் அருளால் திருவாரூரில் வைத்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடி அருளியதுதான் ‘திருத்தொண்டத் தொகை.’ அம்மையப்பனை வழிபடும் தீவிர பக்தர்களான அடியார்களை வழிபட்ட பின்னரே சிவபெருமானை வழிபடவேண்டும் என்கிறார்கள். அந்த அளவுக்கு சிவசக்தி வழிபாட்டில் தொண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்