இறை ஆட்சியும், அறுவடை உவமையும்

இறைமகனாகிய இயேசு, தம் தந்தையின் ஆட்சியைக் குறித்து தன்னைப் பின்தொடரும் சாமானிய மக்களுக்கு எளிய உவமைகள் வழியாக எடுத்துக்கூறினார்.

Update: 2021-03-23 01:18 GMT
இறைமகனாகிய இயேசு, தம் தந்தையின் ஆட்சியைக் குறித்து தன்னைப் பின்தொடரும் சாமானிய மக்களுக்கு எளிய உவமைகள் வழியாக எடுத்துக்கூறினார். அவற்றில் ‘அறுவடை நாள்’ எனும் உவமை முக்கியமானது. அதற்குமுன் அவர் கூறிய இரு சிறு உவமைகளைக் கடந்து அறுவடை நாளுக்குப் பயணிப்போம்.

இயேசு கலிலேயா பகுதியில் பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். ‘கடவுளின் அரசாங்கம் குறித்துக் கூறுகிறீர்களே, அது எப்படிப்பட்டது’ என மக்கள் கூட்டத்திலிருந்து சிலர் கேட்டனர். அதற்கு இயேசு, “புதையலைத் தேடிக்கொண்டிருந்த ஒருவர், மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அது புதையல் என்று அவருக்கு உறுதியாய்த் தெரிந்தது. உடன் அதைப் பத்திரமாய் மூடிவைத்துவிட்டு மகிழ்ச்சியுடன் போய், தனக்குச் சொந்தமான அனைத்தையும் விற்று, அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.” என்றார். அடுத்து அவர், “வணிகர் ஒருவர் சிறந்த முத்துகளைத் தேடிச் செல்கிறார். அப்போது விலை உயர்ந்த முத்து ஒன்றைக் கண்டார். உடன் அவர் போய்த் தமக்குள்ள அனைத்தையும் விற்று, அதை வாங்கிக்கொண்டார். தந்தையின் அரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்” என்றார்.

பின்னர் கடவுளை நல்ல விதைகளைப் பூமியில் விதைக்கும் விவசாயியாக உருவகப்படுத்தி, இயேசு வேறொரு உவமையை மக்களுக்குச் சொன்னார்: “வானுலக அரசாங்கம், நல்ல விதையைத் தன் வயலில் விதைத்த ஒருவரைப் போல் இருக்கிறதென்று சொல்லலாம். நல்ல விதைகள் தூவப்பட்ட வயலைக் காவல் காத்துக்கொண்டிருந்த ஊழியர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது அவருடைய எதிரி வந்து கோதுமைப் பயிர்களுக்கு இடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பயிர்கள் வளர்ந்து கதிர்விட்டபோது, பயிர்களைப்போல் தோற்றம் காட்டிய களைகளும் வளர்ந்திருந்தன. அதனால், அந்த மனிதருடைய ஊழியர்கள் அவரிடம் வந்து, “எஜமானே, நீங்கள் வயலில் நல்ல விதையைத்தானே விதைத்தீர்கள். அப்படியிருக்கும்போது, களைகள் எப்படி வளர்ந்தன?” என்று கேட்டார்கள்.

உடன் அவர் “இது எதிரியின் வேலை” என்றார். அதற்கு ஊழியர்கள், “நாங்கள் போய் களைகளைப் பிடுங்கி எறியட்டுமா?” என்று கேட்டார்கள். அப்போது அவர், “வேண்டாம், அப்படிச் செய்யாதீர்கள்; களைகளைப் பிடுங்கும்போது தெரியாமல் கோதுமைப் பயிர்களையும் பிடுங்கி விடுவீர்கள். அதனால் அறுவடைநாள் வரும்வரை இரண்டும் சேர்ந்தே வளரட்டும். அறுவடைநாள் அன்று, அறுவடை செய்கிறவர்களிடம், முதலில் களைகளைப் பிடுங்கி அவற்றை எரித்துவிடுவதற்காகக் கட்டுகளாகக் கட்டுங்கள், அதன் பின்பு கோதுமையை என்னுடைய களஞ்சியத்தில் சேருங்கள் என்று சொல்வேன்” என்றார். இந்த உவமையைக் கேட்ட மக்கள் மனத்தெளிவு பெற்றவர்களாக முகம் மலர்ந்தனர். ஆனால் சீடர்களோ புரிந்தும் புரியாதவர்களைப்போல நின்றனர்.

அதன்பின்பு இயேசு அங்கே திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது சீடர்கள் அனைவரும் அவரருகே வந்து அமர்ந்து “ஆண்டவரே, கோதுமை வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு மேலும் விளக்கிக் கூறுங்கள்’’ என்று கேட்டனர். புன்முறுவலோடு அவர்களுக்கு விளக்கத் தொடங்கினார்.

“இந்த உலகம்தான் வயல். நல்ல விதைகள், கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடக்கும் அவரது ஆட்சிக்கு உட்பட்ட மக்கள். மானிட மகன் நல்ல விதைகளை விதைக்கிறார். களைகளை விதைக்கும் பகைவன், தீயோனாகிய சாத்தான். அறுவடை, உலகின் முடிவு. அறுவடை செய்வோர் கடவுளின் ஊழியர்களாகிய வானதூதர்கள். எவ்வாறு களைகளைத் தனியே பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார், அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும், நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள். பின் அவர்களை நெருப்புச் சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளிவீசுவார்கள். கேட்கச் செவியுள்ளோர் இதைக் கேட்கட்டும்” என்றார்.

மேலும் செய்திகள்