விநாயகர் முன்பு வற்றாத நீரூற்று

விநாயகர் விக்கிரகத்தின் முன்பாக தரையில் ஒரு துளையில் வற்றாத நீரூற்று தண்ணீர் பெருக்கெடுத்தபடியே இருக்கிறது.

Update: 2021-09-22 16:32 GMT
கர்நாடக மாநிலத்தில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சைவ மத பீடம் இருக்கும் புகழ்பெற்ற ஊர், சிருங்கேரி. இதன் அருகே `கேசவே' என்ற ஊர் உள்ளது. இங்கு கமண்டல கணபதி திருக்கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலில் உள்ள விநாயகர் விக்கிரகத்தின் முன்பாக தரையில் ஒரு துளை இருக்கும். அதன் வழியே தண்ணீர் பெருக்கெடுத்தபடியே இருக்கும். இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை கண்டறியப்படாத ரகசியமாகவே இருப்பதாக சொல்கிறார்கள்.

மழைக் காலங்களில் அதிக அளவிலும், வெயில் காலங்களில் குறைவாகவும் இந்த துளையில் இருந்து நீரூற்று வந்துகொண்டே இருக்கும். ஒருபோதும் இதில் நீர் வராமல் இருந்ததில்லை என்கிறார்கள், ஆலயத்தினர். இந்த அதிசயம் 1000 வருடங்களாக நடைபெற்று வருவதாகவும் சொல்கிறார்கள். விநாயகர் முன்பாக உள்ள இந்த துளையில் இருந்து வரும் நீரைதான், கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்ய பயன்படுத்துகிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் இதனை புனித நீராகக் கருதி, குடுவைகளில் தங்கள் இல்லங்களுக்குப் பிடித்துச் செல்கின்றனர். விநாயகரின் காலடியில் வெளிப்படும் இந்த நீரானது, இங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரம் ஓடி, அங்குள்ள துங்கா நதியில் கலக்கிறது.

மேலும் செய்திகள்