தீவினைகளை அகற்றும் ஞானவேல்

தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப்பூச தினத்தில் குரு வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை அளிக்கும்.

Update: 2022-01-23 16:31 GMT
சிவபெருமானிடம் இருந்து பல்வேறு வரங்களைப் பெற்ற சூரபதுமனும், அவரது தம்பிகள் தாருகாசுரன், சிங்கமுகன் ஆகியோரும், தேவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்து வைத்து துன்புறுத்தினர். தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். ஆனால் சூரபதுமனும், அவனது சகோதரர்களும், ‘சிவனுக்கு நிகரான சக்தி படைத்தவரால் மட்டுமே தங்களுக்கு மரணம் நிகழ வேண்டும்’ என்ற வரத்தைப் பெற்றிருந்தனர்.

இதனால் சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணில் இருந்து தன் சக்தியாக, ஆறுமுகப்பெருமானை உருவாக்கினார். அவர் அவதரித்த தினம் ‘வைகாசி விசாகம்.’ அவர், சூரபதுமர்களை சம்ஹாரம் செய்தது, ஐப்பசி மாதம் சஷ்டி திதியில். அதுதான் ‘கந்தசஷ்டி பெருவிழா’வாக கொண்டாடப்படுகிறது. சூரபதுமர்களை சம்ஹாரம் செய்வதற்காக, பார்வதிதேவி ஞானவேலை, முருகப்பெருமானிடம் கொடுத்த தினம் ‘தைப்பூசம்’ என்று சொல்லப்படுகிறது.

அனைத்து முருகன் ஆலயங்களிலும், தைப்பூசத் திருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். முருகப்பெருமானிடம் சக்திதேவி, ஞானவேலை வழங்கிய இடமாக பழனி தலத்தை புராணங்கள் குறிப்பிடுகின்றன. இதனால்தான், தைப்பூசத் திருநாள் பழனி திருத்தலத்தில் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத் திருநாளில், முருகப்பெருமானின் கையில் இருக்கும் ஞானவேலை, பக்தர்கள் வழிபாடு செய்து வந்தால், ஏவல், பில்லி, சூனியம் என எந்த கெட்ட சக்தியும் அவர்களை நெருங்காது.

அதே போல் சிவபெருமான், பார்வதியுடன் இணைந்து தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆனந்த திருநடனம் புரிந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்ததும், இந்த தைப்பூசத் திருநாளில்தான். இரணியவர்மன் என்ற அரசன், தில்லையம்பலத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்தான். அவனுக்கு சிவபெருமான் காட்சியளித்தது இந்த தைப்பூசத் திருநாளே ஆகும். எனவே தைப்பூசம் அன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், இறைவனுக்கு அபிஷேக மற்றும் அலங்காரங்கள் செய்யப்படும்.

தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப்பூச தினத்தில் குரு வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை அளிக்கும்.

ஜீவகாருண்யம் என்னும் உயிர்களைக் கொல்லாமல் இருப்பது பற்றி வலியுறுத்திய வள்ளலார், ஜோதியில் கலந்த தினம் ‘தைப்பூசம்’ ஆகும். இந்த நாளில் வடலூரில் ஜோதி தரிசனம் நிகழ்வு நடைபெறும்.

மேலும் செய்திகள்