சொக்கநாதபாளையம் சுயம்பு மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
சொக்கநாதபாளையம் சுயம்பு மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.;
சென்னிமலை
சொக்கநாதபாளையம் சுயம்பு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சுயம்பு மாரியம்மன் கோவில்
சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் பிரசித்தி பெற்ற பழமையான சுயம்பு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 18-ந் தேதி விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. பின்னர் காங்கேயம் தாலுகா மறவபாளையம் மாகாளியம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் யானை, குதிரைகள் ஊர்வலத்துடன் முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடங்கள் எடுத்து மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.
இதைத்தொடர்ந்து முதல் கால யாக பூஜை நடந்தது. இரவு கம்பத்தாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் காலையில் 2-ம் கால யாக பூஜை, கோபுர கலசங்கள் அபிஷேகம், கோபுரம் மற்றும் குறிஞ்சி கலசங்கள் வைத்தல், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு சொக்கநாதபாளையம் சுயம்பு மாரியம்மன் குழுவினரின் வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும், கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது. இதைத்தொடர்ந்து கோவில் கோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் விநாயகர், சுயம்பு மாரியம்மன், அரச மர விநாயகர், கன்னிமூல கணபதி, கருப்பணசாமி, குதிரை வாகனம் மற்றும் பரிவார சாமிகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கோவிலை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.