திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து- தேவஸ்தானம் தகவல்
ஜனவரி மாதத்தில் நடக்கும் பல்வேறு பண்டிகைகள், ஆன்மிக நிகழ்ச்சிகளை முன்னிட்டு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.;
திருமலை,
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (டிசம்பர்), ஜனவரி மாதத்தில் நடக்கும் பல்வேறு பண்டிகைகள், ஆன்மிக நிகழ்ச்சிகளை முன்னிட்டு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 23-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 29-ந்தேதி வைகுண்ட ஏகாதசி, 30-ந்தேதியில் இருந்து ஜனவரி மாதம் 8-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசனம், ஜனவரி 25-ந்தேதி ரத சப்தமி விழாக்கள் நடக்கின்றன.
மேற்கூறிய தினங்களுக்கு முன்தினங்களில், நெறிமுறையின் அடிப்படையில் மட்டுமே அதிகாரப்பூர்வ வி.ஐ.பி.க்களுக்கு சாமி தரிசன அனுமதி வழங்கப்படும். மற்ற யாருக்கும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது. வி.ஐ.பி. தரிசனமும் ரத்து செய்யப்படும். அனைத்துப் பக்தர்களும் இந்த அறிவிப்பை மனதில் கொண்டு தேவஸ்தான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.