கோவில்களில் வரலட்சுமி பூஜை

கோவில்களில் வரலட்சுமி பூஜை நடந்தது.;

Update:2023-08-26 03:42 IST

கோவில்களில் வரலட்சுமி பூஜை நடைபெற்றது.

மஞ்சள்-குங்குமம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் நேற்று வரலட்சுமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

அந்தியூர் பஸ் நிலையம் அருகே பழமையான கோட்டை அழகுராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று வரலட்சுமி சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 8 மணிக்கு கோமாதா பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகாலட்சுமி தாயாருக்கு 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின்னர் மலர் அலங்காரத்தில் மகாலட்சுமி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அந்தியூர், தவிட்டுப்பாளையம், பர்கூர், வெள்ளையம்பாளையம், சந்தியபாளையம், காட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் அம்மனை தரிசனம் செய்ய வந்திருந்தனர். அவர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது.

20 ரூபாய் நோட்டு கட்டு

கோபியில் வடக்கு வீதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், எலுமிச்சை பழச்சாறு, திருநீறு, சந்தனம், குங்குமம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. நகைகளாலும், மலர்களாலும் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் அம்மனுக்கு முன்பு 20 ரூபாய் நோட்டு கட்டுகள் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

கொண்டத்து காளியம்மன்

இதேபோல் கோபி சாரதா மாரியம்மன், மொடச்சூர் பால மாரியம்மன், தான்தோன்றியம்மன், தண்டு மாரியம்மன், புதுப்பாளையம் மகா மாரியம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன், கொளப்பலூர் பச்சைநாயகி அம்மன், அளுக்குளி செல்லாண்டியம்மன் கோவில்களிலும் வரலட்சுமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

அம்மாபேட்டையில் உள்ள மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவிலில் மகாலட்சுமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்