கோல்போஸ்ட்டை மாற்றாதீர்கள்

பொதுவாக கால்பந்து விளையாட்டில் ஒரு அணிக்கு 11 வீரர்கள் இருப்பார்கள். வெற்றியை நிர்ணயிப்பதற்கு ‘கோல்போஸ்ட்’கள் இருக்கும்.

Update: 2016-12-20 21:30 GMT
பொதுவாக கால்பந்து விளையாட்டில் ஒரு அணிக்கு 11 வீரர்கள் இருப்பார்கள். வெற்றியை நிர்ணயிப்பதற்கு ‘கோல்போஸ்ட்’கள் இருக்கும். ஆனால், விளையாடிக்கொண்டிருக்கும்போதே இடையில் 11 வீரர்கள் வேண்டாம், 5 வீரர்களை வைத்து விளையாடுங்கள் என்று சொல்வதும், கோல்போஸ்ட்டை நெருங்கிக்கொண்டிருக்கும்போது இந்த ‘கோல்போஸ்ட்’ இல்லை மாற்றிவிட்டோம் என்று கூறுவதும் பெரிய குழப்பத்தை உண்டாக்கும். அதேபோல, ஒரு குழப்பமான நிலைமைதான் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துவிட்டு, தொடர்ந்து 10–க்கும் மேற்பட்ட புதுப்புது அறிவிப்புகளை வெளியிடுவது, கடந்த நவம்பர் 8–ந் தேதி பிரதமர் திடீரென ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது, இவ்வாறு பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் எந்த விதமான வரம்புமின்றி நவம்பர் 10–ந் தேதி முதல் டிசம்பர் 30–ந் தேதி வரை வங்கி நேரம் முடிவதற்குள் மாற்றிக்கொள்ளலாம். உங்களுக்கு 50 நாட்கள் இருக்கிறது. எந்தக்குழப்பமும் வேண்டாம் என்று பட்டவர்த்தனமாக அறிவித்தார். இதுபோல, 9–ந் தேதி முதல் ஏ.டி.எம். கார்டில் தினமும் ரூ.2 ஆயிரம் எடுத்துக்கொள்ளலாம். இந்தத்தொகை பின்னர் ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும் என்பதுபோன்ற பல வாக்குறுதிகளை அளித்தார்.

பிரதமரின் அறிவிப்பை கேட்டவுடன், வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற கூட்டம் அலைமோதியது. மீண்டும் 11–ந் தேதி நிதிமந்திரி அருண்ஜெட்லி, உங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற டிசம்பர் 30–ந் தேதி வரை காலஅவகாசம் இருக்கிறது. வருகிற நாட்களில் கூட்டம் குறைவாக இருக்கும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து அடிக்கடி புதுப்புது அறிவிப்புகள் வந்துகொண்டிருந்தன. வாரம் ஒருமுறை வங்கிக்கணக்கிலிருந்து ரூ.24 ஆயிரம் வரை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் ஒரு வங்கியிலும் ரூ.24 ஆயிரம் கொடுக்கப்படுவதில்லை. ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்கப்போனால் ஒரேயொரு ரூ.2 ஆயிரம் நோட்டு மட்டுமே வருகிறது. சாதாரண நடுத்தர, ஏழைக்குடும்பத்தினர், வேலைபார்க்கும் வர்க்கத்தினர் தங்கள் கையில் பழையநோட்டுகளை சேமிப்பாக வைத்திருப்பவர்கள் டிசம்பர் 30–ந் தேதி வரை மாற்றிக்கொள்ள காலஅவகாசம் இருக்கிறது என்று பிரதமரும், நிதிமந்திரியுமே கூறியிருக்கிறார்கள், வங்கிகளில் கூட்டம் குறையட்டும் என காத்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.14 லட்சத்து 18 ஆயிரம் கோடி நோட்டுகளில், டிசம்பர் 10–ந் தேதி கணக்குப்படியே ரூ.12 லட்சத்து 44 ஆயிரம் கோடி மீண்டும் வங்கிக்கு வந்துவிட்டது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகத்தான் இந்த திட்டம் என்று கூறிய நிலையில், இப்படி எல்லா ரூபாய் நோட்டுகளும் கணக்குக்கு வருவதைக்கண்டு, இவர்கள் இலக்கு நிர்ணயித்த ரூ.3 லட்சம் கோடி வங்கிக்கு வராமல் போய்விடும் என்றநிலை தோல்வி அடைந்துவிட்டதா? என்ற சந்தேகம் எழுந்தது. இப்போது திடீரென ரிசர்வ் வங்கி டிசம்பர் 30–ந் தேதி வரை ஒரே ஒருமுறை ரூ.5 ஆயிரம் மட்டும்தான் டெபாசிட் செய்யமுடியும். அதிலும் ரூ.5 ஆயிரத்திற்குமேல் டெபாசிட் செய்தால், இரு வங்கி அதிகாரிகளுக்கு முன்னிலையில், ஏன் முன்கூட்டியே இந்தப்பணத்தை டெபாசிட் செய்யமுடியவில்லை என்ற காரணத்தை வாக்கு மூலமாக தெரிவிக்க வேண்டும். அந்த அதிகாரிகளிடம் திருப்திகரமான காரணத்தை கூறினால் மட்டுமே டெபாசிட் செய்யமுடியும் என அறிவித்துள்ளது. டிசம்பர் 30–ந் தேதிவரை காலஅவகாசம் இருக்கிறது என்ற அறிவிப்பை நம்பி இதுவரை பணத்தை டெபாசிட் செய்யாதவர்கள் எல்லோரும் இனி தங்கள் பணத்தை டெபாசிட் செய்ய முடியாது என்ற நிலையால் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தத்தொகையெல்லாம் இனி கருப்பு பண பட்டியலில்தான் கண்டிப்பாக சேர்க்கப்படும். திட்டம் நல்லதிட்டம் என்றாலும், அடிக்கடி இப்படி அறிவிப்பு மாற்றங்கள் வருவது பொதுமக்களுக்கு நம்பகத்தன்மையும் இல்லாமல் போய்விடும். குழப்பமும் ஏற்படும்.

மேலும் செய்திகள்