செயற்கை நுண்ணறிவு மூலம் தேர்தல் பிரசாரத்தில் ஊடுருவலா?

செயற்கை நுண்ணறிவை ஒரு கத்தி போல நினைத்து கவனமாக கையாள வேண்டும்.

Update: 2024-04-15 21:21 GMT

உலகம் முழுவதிலும் தகவல் தொழில் நுட்பம் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ட்ஸ் (ஏ.ஐ.) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் வேகமாக வேரூன்றி வருகிறது. அதனைப்பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மனிதனுக்கும், எந்திரத்திற்கும் உள்ள வேறுபாடு படைப்பாக்க திறன்தான். ஒரு எந்திரம் சுயமாக சிந்திக்காது. மனிதனின் கட்டளைக்கு ஏற்ப எந்திரம் செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் எந்திரங்கள் தானாக சிந்தித்து செயல்பட தொடங்கி உள்ளது. உதாரணமாக ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் சாட் ஜிபிடி மனிதன் எழுதும் கடிதம்-கட்டுரை, மாணவர்களின் வீட்டு பாடங்கள், என்ஜினீயர்களுக்கு தேவையான மென்பொருள் கோடிங்கை கூட மிக எளிதாக எழுதிவிடும். ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டுள்ள ரோபோக்கள், பெரிய டாக்டர்கள் செய்யும் கடினமான அறுவை சிகிச்சைகளை மிக எளிதாக செய்து முடித்து விடும். சில நாடுகளில் உள்ள கல்லூரிகளில் ரோபோ ஆசிரியர்கள் பாடம் எடுக்க தொடங்கிவிட்டன. தொழிற்சாலைகளில் கூட செயற்கை நுண்ணறிவு மூலம் மிக வேகமாகவும், துல்லியமாகவும் அனைத்து உற்பத்தியும் மேற்கொள்ளப்படுகிறது. மொத்தத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் பல மனிதர்கள் செய்யும் வேலைகள் மிக எளிதாக சில வினாடிகளில் செய்து முடிக்கப்படுகிறது.

ஆனால், செயற்கை நுண்ணறிவை ஒரு கத்தி போல நினைத்து கவனமாக கையாள வேண்டும். ஒரு கத்தி, டாக்டர் கையில் இருந்தால் உயிரை காக்கும் அறுவை சிகிச்சை செய்ய பயன்படுகிறது. அதே சமயம் சமூகவிரோதி கையில் கிடைத்தால் அது ஒரு உயிரை கொல்ல பயன்படுத்தப்பட்டு விடுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் சீனா, ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் இந்தியா, தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடக்கும் தேர்தல்களை சீர்குலைக்க திட்டமிட்டு உள்ளது என மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிர்ச்சிகரமான ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது சீனா தன் நலனுக்கு உகந்த வகையில் தேர்தல் முடிவுகளை கொண்டு வருவதற்காக தனது நாட்டின் சைபர் கிரைம் மூலம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஊடுருவ பார்க்கிறது. போலியாக தயாரிக்கப்படும் மீம்ஸ், வீடியோ மற்றும் ஆடியோ குறிப்புகளை சமூக வலைதளத்தில் பரவவிட்டு மக்கள் மனதில் தவறான தகவல்களை விதைக்க திட்டமிட்டு உள்ளது.

சீனா, தான் விரும்பாத கட்சிகள், வேட்பாளர்களை தேர்தலில் தோல்வி அடைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இத்தகைய செயல்களில் ஈடுபட உள்ளது. இது இந்தியாவிற்கு மட்டுமல்ல, இந்திய மக்களுக்கும் விடுக்கப்பட்ட ஒரு சவாலாகும். எனவே தேர்தல் தொடர்பான செய்திகள் நம் நாட்டு பத்திரிகைகளிலும், டி.வி.க்களிலும் வருவதை மட்டுமே பொதுமக்கள் நம்பவேண்டும். அது தெரியாமல் சீனா நாட்டினால் அரங்கேற்றப்படும் போலி வீடியோக்களை நம்பினால் அது நமது ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். இந்திய வாக்காளர்களின் எண்ணத்தை மாற்ற நினைக்கும் சீனாவின் எண்ணத்திற்கு நாம் எல்லாம் இரையாகி விடக்கூடாது. எது போலி, எது உண்மை என்பதனை பகுப்பாய்வு செய்யும் திறன் வாக்காளர்களிடம் தான் இருக்கிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்