ஊழல் என்னும் புற்றுநோய்

பொதுவாக அரசியலில் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருவரையொருவர் தாக்கி அறிக்கைவிடுவதும், ஒருவரது தாழ்வில் அடுத்தவர் மகிழ்ச்சியடைவதும்தான் வாடிக்கை.

Update: 2017-02-22 21:30 GMT
பொதுவாக அரசியலில் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருவரையொருவர் தாக்கி அறிக்கைவிடுவதும், ஒருவரது தாழ்வில் அடுத்தவர் மகிழ்ச்சியடைவதும்தான் வாடிக்கை. ஆளும்கட்சிக்கு ஏதாவது பின்னடைவு ஏற்பட்டால், எதிர்க்கட்சிகள் அதைக்குறிப்பிட்டு கொக்கரிப்பார்கள். இப்போது ஆளும்கட்சியான அ.தி.மு.க. தலைவர் மறைந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. செயல்தலைவரான மு.க.ஸ்டாலின் நீதியின் வெற்றி கொண்டாடுவதற்கு அல்ல, ‘கடைப்பிடிக்க’ என்ற தலைப்பில் ஒரு மடல் எழுதியுள்ளார். அதில், 21 ஆண்டுகள் நடந்த சட்டப்போராட்டத்திற்குப் பிறகு, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வாயிலாக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பொது வாழ்வில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வகையில் வெளி வந்திருக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு, தமிழக அரசியலில் நேர்மையை நிலைநாட்டும் வகையிலான வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்ப்பாக அமைந்திருக்கிறது என்று தொடங்கி, இந்த வெற்றி கொண்டாடுவதற்கானது அல்ல. பொதுவாழ்வில் நாம் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைநெறிகளுக்கானது என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட்டு, தமிழகத்திற்கும், நாட்டுக்கும் பெருமை சேர்ப்போம் என்று முடித்துள்ளார். நிச்சயமாக இந்த வழக்கு பொதுவாழ்வில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், மக்கள்பணியாற்ற அரசு பணியில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும், நேர்மையுடன் அப்பழுக்கற்றவகையில் தங்கள் கடமையை ஆற்றவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

இந்தத்தீர்ப்பின் மிகமுக்கியமான ஒரு பாடம், சமுதாயத்தில் எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் சரி, எவ்வளவு உயரிய நோக்கங்களை கொண்டவர்களானாலும் சரி, சட்டம் எல்லோருக்கும் மேலானது. எல்லோரையும் கட்டுப்படுத்தக்கூடியது. எல்லோரும் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்குவது என்பதை காட்டியுள்ளது. சமுதாயத்தில் ஊழல் என்பது ஒரு புற்றுநோய். நிச்சயமாக ஒழிக்கப்படவேண்டிய ஒன்றாகும். ஊழல்செய்துவிட்டு யாராலும் தப்பிக்கமுடியாது என்ற ஒரு நிலையை உருவாக்கினால்தான், ஊழலை நிச்சயமாக ஒழிக்கமுடியும். சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பில்கூட, நீதிபதி அமிதவராய் 3 பக்கங்களில் ஊழலை ஒழிக்க மக்கள் போரிட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். சமுதாயத்தில் ஒவ்வொரு அங்கத்திலும் ஊழல் ஒரு புற்றுநோய் போல பரவியிருக்கிறது என சுட்டிக்காட்டி, இதனால் சாதாரண மனிதனும், நேர்மையானவர்களும் படும்பாட்டை அவர் விளக்கியுள்ளார். இதைப்போக்க எல்லோரும் ஒன்று பட்டு போராடவேண்டிய அவசியத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழலை ஒழிப்பதில் தமிழக அரசு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை முக்கிய பங்காற்றுகிறது. இதில் பணிபுரியும் அதிகாரிகள்தான் ஊழலை ஒழிக்கும்போரில் முக்கியத் தளபதிகளாக, போர்வீரர்களாக இருக்கிறார்கள்.

ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை மிகத்தீவிரமாக செயல்பட்டால், எந்த வழக்கையும் கண்டு பிடித்துவிட முடியும். அவர்களது புலனாய்வுத்திறமை யாரையும் தப்பவிடாது. தற்போது தமிழக அரசில் இந்தத்துறை இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். கடந்த ஆண்டு இந்தத்துறையில் 15 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது நிச்சயமாக ஏற்புடையது அல்ல. அவர்கள் உயர்நிலையில் உள்ள யார் மீதும் வழக்கு தொடரவில்லை. சாதாரண அதிகாரிகள், அதிலும் கீழ்மட்ட அதிகாரிகள் மீதுதான் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேல்மட்டம் மீதும் அவர்களது கடமை கரங்கள் செல்லவேண்டும். இதுமட்டுமல்லாமல், ஏற்கனவே தொடரப்பட்ட 179 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழ்நாடு முழுவதும், ஒரு டி.ஜி.பி. தலைமையில் அல்லது ஏ.டி.ஜி.பி. தலைமையில் இயங்கும் இந்தத்துறையில் 3 ஐ.ஜி.க்கள், ஒரு டி.ஐ.ஜி., 4 போலீஸ் சூப்பிரண்டு உள்பட 868 பேர் பணியாற்றுகிறார்கள். இந்தத்துறையை இன்னும் வலுப்படுத்தி, கருப்பு ஆடுகளுக்கு இடமளிக்காமல், முழுமையாக நேர்மையும், திறமையுமான அதிகாரிகளை நியமித்தால், நிச்சயமாக ஊழல் புற்றுநோய் தமிழக நிர்வாகத்தில் தலையெடுக்காது.

மேலும் செய்திகள்