மணல் இறக்குமதிக்கு தாராள அனுமதி

தமிழ்நாட்டில் இப்போது நிலவும் கடுமையான வறட்சியை நிலத்தடிநீர் மூலம் சமாளிக்க முடியவில்லை. ஏனெனில், நிலத்தடிநீரும் பொய்த்துப்போய், சில இடங்களில் வெகு ஆழத்துக்கு தோண்டியபிறகும், மிக சொற்ப அளவு தண்ணீரே கிடைக்கிறது.

Update: 2017-06-13 21:30 GMT
மிழ்நாட்டில் இப்போது நிலவும் கடுமையான வறட்சியை நிலத்தடிநீர் மூலம் சமாளிக்க முடியவில்லை. ஏனெனில், நிலத்தடிநீரும் பொய்த்துப்போய், சில இடங்களில் வெகு ஆழத்துக்கு தோண்டியபிறகும், மிக சொற்ப அளவு தண்ணீரே கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல், நிலத்தடிநீரின் சுவையும் உப்பு தன்மைக்கு வந்துவிட்டது. இதற்கெல்லாம் காரணம், தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் கடந்த பல ஆண்டுகளாக நடக்கும் மணல் கொள்ளைதான். கட்டிட வேலைக்கு ஆற்று மணல் தேவைதான் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், தமிழ்நாட்டு தேவைக்கு மட்டும் அல்லாமல், வெளிமாநிலங்களுக்கு கடத்திச்சென்று கொள்ளை லாபம் அடிப்பதற்காக, மணலே இல்லாதவகையில் கட்டாந்தரைபோல சுரண்டி எடுத்துவிட்டதால், மழைக்காலங்களில் வேகமாக பெருக்கெடுத்து ஓடிவரும் தண்ணீர் பிடிப்பு இல்லாமல் ஓடி கடலிலே கலந்துவிடுகிறது. ஆறுகளில் போதிய அளவு மணல் இருந்தால்தான், தண்ணீர் தேங்கவும் செய்யும், மெதுவாகவும் ஓடும், அதன்காரணமாக நிலத்தடிநீர் மட்டமும் உயரும்.

அண்டை மாநிலமான கேரளாவில் 45–க்கும் மேற்பட்ட ஆறுகள் பாய்கின்றன. ஆனால், அந்த மாநிலத்தில் 1994–ம் ஆண்டு முதல் எந்தவொரு ஆற்றில் இருந்தும் ஒரு கைப்பிடி மணலையும் எடுக்க முடியாதபடி கடுமையான சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தேவைக்கு தமிழ்நாட்டில் இருந்து சுரண்டி எடுத்துச்செல்லப்படும் மணல்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 5–ந் தேதி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் பேசும்போது, ‘‘மணல் குவாரிகள் அனைத்தையும் அரசே முழுமையாக எடுத்து செயல்படுத்தும். ‘லோடு’ காண்டிராக்ட், அதாவது மணலை லாரியில் நிரப்புவது, அதேபோல ‘ஸ்டாக் யார்டு’ மணலை சேமித்துவைப்பது ஆகிய இரண்டும் இனி அரசின் மேற்பார்வையில்தான் செயல்படுத்தப்படும். மணல் இருந்தால்தான் நிலத்தடிநீர் உயரும். எனவே, பொதுமக்கள் இனி ஆற்று மணலுக்கு பதிலாக, ‘எம் சேண்ட்’ என்று கூறப்படும் கருங்கல் ஜல்லிகளை உடைக்கும்போது கிடைக்கும் மணலை பயன்படுத்தவேண்டும். 2, 3 ஆண்டுகளில் ஆற்றில் இருந்து மணல் அள்ளுவது முழுமையாக நிறுத்தப்படும்’’ என்று கூறினார். முதல்–அமைச்சரின் இந்த அறிவிப்பு, மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. இப்போது கர்நாடக அரசும், தமிழ்நாட்டில் உள்ள சில பெரிய கட்டிட நிறுவனங்களும் மேற்கொண்டிருக்கும் முயற்சியை பார்த்தால், அரசும் இதே முயற்சியை எடுத்தால், உடனடியாக ஆற்றில் மணல் அள்ளுவதற்கு தடைவிதித்து, இன்று கூடப்போகும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு, உரிய சட்டங்களையும் பிறப்பித்துவிடலாம்.

கர்நாடக அரசு தங்கள் மாநில கட்டிட பணிகளுக்கான மணல் தேவைக்காக வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்ய முயற்சிகளை தொடங்கி, அதற்காக டெண்டரும் விட்டுவிட்டது. இதேபோல், ஒரு முயற்சியை தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவன அதிபர்களை உறுப்பினர்களாக கொண்ட இந்திய கட்டிட நிறுவன அதிபர்கள் சங்கம், மலேசியா, கம்போடியா ஆகிய நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு மணல் இறக்குமதி செய்வதற்கான முயற்சிகளை தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் சில இடங்களில் ஒரு கனஅடி மணல் 150 ரூபாய்வரை விற்கப்படுகிறது. ஆனால், கம்போடியாவில் இருந்து இறக்குமதி செய்தால் ஒரு கனஅடி மணல் ரூ.35–க்கும், மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்தால் ஒரு கனஅடி மணல் ரூ.40–க்கும் கிடைக்கும். தற்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாடு, அதிக விலைக்கு வாங்கவேண்டிய கட்டாயம், ஆற்றுவளத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம், இவையெல்லாம் மாநிலத்தின் நலனுக்காக நிறைவேற்ற வேண்டும் என்றால், தனியார் மணல் இறக்குமதி செய்வதை ஊக்குவித்து, அதற்கான அனுமதிகளை மத்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் எளிதில் வழங்கவேண்டும்.

மேலும் செய்திகள்