இது தேவை இல்லை; திரும்பப்பெறுங்கள்!

போக்குவரத்து என்பது அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. தரைவழி, வான்வழி, ரெயில்வழி போக்குவரத்து என்றாலும், சாலைபோக்குவரத்துத்தான் முதன்மையான போக்குவரத்து ஆகும்.

Update: 2017-09-14 21:30 GMT
போக்குவரத்து என்பது அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. தரைவழி, வான்வழி, ரெயில்வழி போக்குவரத்து என்றாலும், சாலைபோக்குவரத்துத்தான் முதன்மையான போக்குவரத்து ஆகும். சாலைபோக்குவரத்தில் சரக்குகள் மற்றும் பயணிகள் போக்குவரத்து முக்கிய பங்கு வகிப்பதுடன், சமூக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய காரணியாகவும் அமைந்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், 62,468 கி.மீட்டர் நீளமுள்ள தேசிய, மாநில, மாவட்ட, இதரசாலைகள் உள்ளன. கடந்த மார்ச் மாத கணக்குப்படி, இந்த சாலைகளில் தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 38 லட்சத்து 45 ஆயிரத்து 64 வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதில், கார் மற்றும் லாரி, பஸ், டிராக்டர் போன்ற கனரக வாகனங்கள் எல்லாவற்றையும் உரிமையாளர்களே ஓட்டுவதில்லை. டிரைவர்களையும் வேலைக்கு வைத்து ஓட்டுகிறார்கள். இதன்மூலம் டிரைவர்களுக்கும் பெரிய அளவில் வேலைவாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், டிரைவர்கள் வேலைவாய்ப்புகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், கடந்த மாதம் 24–ந் தேதி மாநில போக்குவரத்து ஆணையம், அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து ரக மோட்டார் வாகனங்களையும் பதிவு செய்யும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், அந்த வாகனங்களை வாங்கிய உரிமையாளர்கள் டிரைவிங் லைசென்சு அதாவது, ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தால் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த உத்தரவுப்படி, கையில் டிரைவிங் லைசென்சு இல்லையென்றால் வாகனம் வாங்கமுடியாது. இதை எதிர்த்து மோட்டார் வாகன விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த ஒரு வழக்கில் நீதிபதி எம்.துரைசாமி இடைக்கால தடை விதித்துள்ளார். இந்த முடிவை எடுப்பதற்கான காரணத்தை தமிழக அரசு போக்குவரத்துத்துறை கூறும்போது, பெருகிவரும் மோட்டார் வாகனங்களின் விபத்துக்களை தடுப்பதற்காகத்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருந்தது. மோட்டார் வாகன சட்டத்தில், வாகனங்களை பதிவு செய்வதற்கு இப்படி ஒரு நிபந்தனை இல்லை என்பதுதான் விற்பனையாளர்களின் கூற்றாகும். தமிழக அரசின் இந்த உத்தரவு நிச்சயமாக தேவையற்றதாகும். ஒரு மோட்டார் வாகனத்தை வாங்குபவர் வயதானவராகவோ அல்லது உடல் ஊனமுற்றவராகவோ இருந்தால், நிச்சயமாக அவர்களால் டிரைவிங் லைசென்சு வாங்கமுடியாது. அதுபோல, ஏதாவது நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அடிக்கடி செல்லவேண்டிய நிலையில், ஒரு மோட்டார் வாகனம் வாங்க வேண்டும் என்று நினைத்தால் அவர்களாலும் முடியாது. இதுமட்டுமல்லாமல், சிறு குழந்தைகளை வீட்டில் உள்ளவர்கள் பள்ளிக்கூடத்துக்கு செல்வதற்காக டிரைவர் வைத்துக்கொண்டு அனுப்ப கார் வாங்கும் நிலையில் அவர்களும் இந்த உத்தரவால் பாதிக்கப்படுவார்கள். விவசாயிகளை எடுத்துக்கொண்டால், டிராக்டர் போன்ற விவசாயத்துக்கு தேவையான வாகனங்களை வாங்கும்போது, எல்லா விவசாயிகளும் டிரைவிங் படித்திருப்பார்கள் என்று கூறமுடியாது.

அரசிலும், தனியார் நிறுவனங்களிலும், உயர் அதிகாரிகளுக்கு டிரைவர்கள் ஓட்டத்தக்கவகையில், கார்களை வழங்கி வருகிறார்கள். இப்படி அரசும், தனியார் நிறுவனங்களும் தங்கள் அலுவலர்களுக்காக வாங்கும் கார்களுக்கு யாருடைய டிரைவிங் லைசென்சை காட்ட முடியும்? டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருப்பவர்கள் ஒரே லைசென்சை வைத்துக்கொண்டு எத்தனையோ வாகனங்களை வாங்கமுடியும். இப்படி இந்த உத்தரவில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதால், இதை நிறைவேற்றுவது என்பது நிச்சயமாக சாத்தியமாகாது. விபத்துகளை குறைப்பதற்காக இந்த உத்தரவு என்றால், போக்குவரத்து விதிகளைத்தான் கடுமையாக அமல்படுத்தவேண்டுமே தவிர, இந்த உத்தரவு நிச்சயமாக பலன் அளிக்காது. எல்லோரும் லைசென்சு வாங்கிக்கொண்டுதான் மோட்டார் வாகனங்கள் வாங்க வேண்டுமென்றால் டிரைவிங் தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தும் டிரைவர்களின் வாழ்க்கை என்னவாகும்? எனவே, இந்த வி‌ஷயத்தில் கோர்ட்டு தீர்ப்பு கூறும் முன்பே, அரசே கவுரவம் பார்க்காமல் இந்த உத்தரவை திரும்பப்பெறுவதுதான் நல்லது.

மேலும் செய்திகள்