அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம்

தமிழ்நாட்டின் தனிப்பெருமை தமிழ்மொழி, தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர் வரலாறு ஆகியவற்றோடு ஊர்தோறும் அமையப்பெற்றுள்ள திருக்கோவில்களாலும் உலக அளவில் பேசப்படுகிறது.

Update: 2017-11-01 21:30 GMT
மிழ்நாட்டின் தனிப்பெருமை தமிழ்மொழி, தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர் வரலாறு ஆகியவற்றோடு ஊர்தோறும் அமையப்பெற்றுள்ள திருக்கோவில்களாலும் உலக அளவில் பேசப்படுகிறது. இந்து சமயத்திற்கு என உள்ள தனிச்சிறப்பு இது. எந்தக்காலத்தில் தோன்றியது என்று, இன்றுவரை யாராலும் வரையறுக்க முடியவில்லை. அதனால்தான் ‘கோவில் இல்லா ஊர்களில் குடியிருக்கவேண்டாம்’. ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்று ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்டு வருகிறது. கோவில் வழிபாடுகள் வளர, வளர, கோவில்களை அமைக்கும் விதம், அங்கு எந்த இடத்தில் எந்த தெய்வத்தின் சிலைகள் வைக்கவேண்டும், யார் நடத்தவேண்டும், யார், யார் எங்குநின்று வழிபடவேண்டும் போன்றவற்றை கூறும் நூல்கள்தான் ஆகமங்கள். சைவர்களுக்கு 28 ஆகமங்களும், வைணவர்களுக்குத் தனி ஆகமங்களும் உள்ளன. சைவ ஆகமங்களுள் ‘காமிகாமமம்’, ‘காரணாகமம்’, ‘சுப்பிரபேத’ ஆகமம் போன்றவை முக்கியமானதாகவும், வைணவர்களுக்கு வைகானசம், பாஞ்சராத்ரம் ஆகியவை முக்கியமானதாகவும் கருதப்படுகின்றன.

கோவில்களில் அர்ச்சகர்கள், குருக்கள் போன்றவர்கள் பூஜைகளை நடத்துகிறார்கள். வெகுகாலமாகவே தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்காக தந்தை பெரியார் போராட்டத்தை தொடங்கியபோது அப்போது முதல்–அமைச்சராக இருந்த கருணாநிதி இதற்காக தனியே சட்டம் நிறைவேற்றுவேன் என்று உறுதிமொழிகூறி தகுதி அடிப்படையில் அனைத்து சாதியினரிலிருந்தும் அர்ச்சகர் நியமனம் நடக்கும் வகையில் 2–12–1970–ம் ஆண்டு ஒரு சட்டத்தை நிறைவேற்றினார். மீண்டும் 2006–ல் இதற்கென ஒரு தனிச்சட்டம் கருணாநிதி ஆட்சியில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றங்களில் நீண்ட காலமாக வழக்குகள் நடந்தன. எம்.ஜி.ஆர் முதல்–அமைச்சராக இருந்தபோதும், ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோதும் சட்டசபையில் இதற்காக உறுதிமொழி கொடுத்தார்கள். நீதிமன்றத்தின் நீண்டநெடிய படிக்கெட்டுகளில் ஏறிய இந்த வழக்கின் இறுதித்தீர்ப்பு 16–12–2015–ல் வழங்கப்பட்டது. அந்தத்தீர்ப்பில், ‘‘ஆகம விதிகளின் அடிப்படையில் தகுதிப்பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் செல்லும்’’ என்றவகையில் தீர்ப்பளித்தனர். தீர்ப்பு வந்தபிறகும் இன்னமும் தமிழ்நாட்டில் அதை நடைமுறைப்படுத்தவில்லை. ஏற்கனவே இதுதொடர்பான பயிற்சிகளைப்பெற்ற 206 பேர் இன்னமும் வேலை நியமனம் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.

திருக்கோவில்களில் பூஜைமுறைகள், மந்திரங்கள் ஓதுதல், ஆகமங்கள் மற்றும் வேதங்கள் பயிற்றுவிக்க சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் திருக்கோவில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி திருக்கோவில் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில் ஆகியவற்றிலும் இந்த வேத ஆகம பாடசாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுபோல, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மற்றும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் ஆகிய கோவில்களில் ஓதுவார் பயிற்சி பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கேரளாவில் திருவாங்கூர் தேவசம் வாரியத்தில் 62 பேர்கள் அர்ச்சகர்களாக இப்போது நியமனம் பெற்றுள்ளனர். இதில் 6 தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் அர்ச்சகர்களாக நியமனம் பெற்றுள்ளனர். இந்த 62 பேர்களில் பிராமணர்கள் 26 பேர், ஈழவா சமுதாயத்தினர் 21 பேர்கள், நாடார், விஸ்வகர்மா, தண்டர், வேட்டுவா, மற்றொரு தாழ்த்தப்பட்ட சமுதாயம் ஆகிய சமுதாயங்களில் ஒருவரும், தீவரா சமுதாயத்தில் இருந்து 2 பேர்களும், புலையா மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களில் இருந்து தலா 4 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வளவுக்கும் கேரளாவில் அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற வகையில் சட்டம் இயற்றப்படவில்லை. அரசாணை தான் இருக்கிறது. கேரளாவை பின்பற்றி தமிழ்நாட்டிலும் ஆகமவிதிப்படி பாரம்பரியம், வழக்கமான வழிபாட்டு நடைமுறைகள், ஸ்தலபுராணங்கள், அந்தந்த கோவில்களுக்குள்ள வழிபாட்டுமுறைகள், தனிப்பெருமைகள் ஆகியவற்றுக்கு பாதிப்பு இல்லாமல், வழிபாட்டு முறைகளில் நன்கு பயிற்சிபெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட தமிழக அரசில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.

மேலும் செய்திகள்