ஒலிம்பிக் கமிட்டியின் முதல் பெண் தலைவர்

இதுவரை 9 ஆண்கள் மட்டுமே தலைவராக இருந்த வரிசையில் முதல் முறையாக ஒரு பெண் தலைவர் என்ற முத்திரையை பதித்துள்ளார்.;

Update:2025-07-18 03:09 IST

உலகளாவிய அளவில் விளையாட்டு வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் உற்ற துணையாக, உந்து சக்தியாக இருப்பது ஐ.ஓ.சி. என்று அழைக்கப்படும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிதான். இதற்கு கீழ்தான் அனைத்து நாடுகளிலும் உள்ள ஒலிம்பிக் சங்கங்கள் செயல்படுகின்றன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி 1894-ம் ஆண்டு ஜூன் 23-ந்தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரில் தொடங்கப்பட்டது. இதை தொடங்க மூல காரணமாக இருந்தவர் வரலாற்று ஆய்வாளரான பேரன் பியார்டி கோபர்டின் தான். அந்த காலக்கட்டத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே அமைதியின்மை நிலவியது. அந்த நாடுகளுக்கிடையே அமைதியையும், ஒற்றுமையையும் உருவாக்குவதற்கு விளையாட்டு ஒன்றால்தான் முடியும் என்ற நோக்கத்தோடு அவர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை தொடங்கினார்.

சர்வதேச விளையாட்டு போட்டிகள்தான் பிரச்சினைகளை குறைத்து நாடுகளிடையே நட்புறவை வளர்க்கும் என்று கூறினார். முதல் நவீன ஒலிம்பிக் போட்டி கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் 1896-ல் நடந்தது. அப்போது 14 நாடுகள் கலந்துகொண்டன. அந்த நேரத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு நாட்டில் ஒலிம்பிக் போட்டியை நடத்தவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 1900-ம் ஆண்டு முதலாவதாக டென்னிசில் மட்டும் பெண்கள் விளையாட அனுமதிக்கப்பட்டனர். அதில் 22 வீராங்கனைகள் கலந்துகொண்டனர். காலப்போக்கில் எல்லா விளையாட்டுகளிலும் பெண்களுக்கு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தேர்வை பொறுத்தமட்டில் 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரே ஒருமுறை மட்டும் அவருக்கு 4 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்படும். அந்தவகையில், இதுவரை 12 ஆண்டுகள் தலைவராக இருந்த ஜெர்மனியை சேர்ந்த தாமஸ் பேச் பதவிக்காலம் முடிந்ததால் கிரீஸ் நாட்டின் கோஸ்டா நவரினோவில் புதிய தலைவர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 7 பேர் போட்டியிட்டனர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 99 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த 41 வயது கிறிஸ்டி கவன்ட்ரி 49 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்று பெரும் சாதனை படைத்துள்ளார். 131 ஆண்டுகால சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் இதுவரை 9 ஆண்கள் மட்டுமே தலைவராக இருந்த வரிசையில் முதல் முறையாக ஒரு பெண் தலைவர் என்ற முத்திரையை பதித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவரும் அவர் தான். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிறுவன தலைவராக இருந்த பியார்டி கோபர்டினுக்கு பிறகு இவர்தான் இதுவரை தலைவர்களாக இருந்தவர்களில் வயதில் இளையவர். மேலும் இவர் 2004, 2008-ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று இருக்கிறார். இதுதவிர உலக நீச்சல் சாம்பியன்ஷிப், காமன்வெல்த் போட்டிகளிலும் நிறைய பதக்கங்களை வாங்கி குவித்து இருக்கிறார். 2028-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அடுத்த ஒலிம்பிக் போட்டி நடக்க இருக்கும் நிலையில் அதன் ஏற்பாடுகளுக்காக டிரம்ப்போடு கலந்தாலோசிக்கும் நிலையில் இருக்கிறார். அதேபோல 2036-ம் ஆண்டு ஒலிம்பிக்கை இந்தியாவில் நடத்தவேண்டும் என்ற கோரிக்கையையும் பரிசீலிக்கவேண்டிய நிலையில் இருக்கிறார். இளம் நீச்சல் வீராங்கனையாக விளையாட்டு உலகில் காலெடுத்து வைத்து தன் பயணத்தை தொடங்கிய கிறிஸ்டி கவன்ட்ரி இப்போது உச்ச பதவிக்கு வந்துள்ளது மட்டுமல்லாமல் பல போர்களுக்கு மத்தியில் நிறைய சவால்களை சந்திக்கவேண்டிய நிலையில் இருக்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்