தன்கரின் எதிர்பாராத ராஜினாமா

ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.;

Update:2025-07-24 04:45 IST

அரசியல் உலகில் இப்போது மிகவும் பரபரப்பாக பேசப்படுவது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாதான். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தன்கர், பிரதமராக சந்திரசேகர் இருந்தபோது நாடாளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரியாக இருந்தார். ஆரம்பத்தில் ஜனதா தளம், அதன்பின் காங்கிரஸ் கட்சி என்று இருந்த தன்கர், 2003-ம் ஆண்டு பா.ஜ.க.வில் சேர்ந்தார். மேற்கு வங்காள கவர்னராக 2019 முதல் 2022 வரை பணியாற்றிய நேரத்தில் தன்கருக்கும், முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே எப்போதும் மோதல் போக்கே இருந்து வந்தது. மம்தா பானர்ஜிக்கு தொல்லை கொடுக்கவே தன்கர் அந்த மாநிலத்தில் பா.ஜ.க.வால் கவர்னராக நியமிக்கப்பட்டார் என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டது. அவரது செயல்பாட்டுக்கு பரிசாகவே 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை ஜனாதிபதியாக தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற பேச்சும் உண்டு.

மாநிலங்களவை தலைவர் என்ற பொறுப்பிலும் தன்கரின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்குள்ளானது. இதன் காரணமாகவே எதிர்க்கட்சிகள் அவர் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. வரலாற்றிலேயே, இதுதான் முதல்முறை. தன்கர் ஒரு வக்கீல் என்றாலும், நீதித்துறையை போட்டு தாக்குவதே அவரது வழக்கம். மத்திய அரசாங்கம் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அமைத்த ஆணையத்தை சுப்ரீம் கோர்ட்டு செல்லாது என்று தீர்ப்பு வழங்கிய நேரத்தில்தான், தன்கர் துணை ஜனாதிபதியாகி மாநிலங்களவை தலைவரானார். அந்த நேரத்தில் அவரது முதல் உரையிலேயே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கடுமையாக விமர்சித்தார்.

சமீபத்தில்கூட தமிழக அரசின் மசோதாக்களுக்கான காலக்கெடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு எதிரான கருத்துக்களை தன்கர் கூறினார். இந்த சூழ்நிலையில் கடந்த திங்கட்கிழமை வழக்கம்போல மாநிலங்களவையை நடத்தினார். நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்கம் செய்யக்கோரும் எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டார். இதே தீர்மானத்தை மத்திய அரசாங்கம் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் கொண்டு வர திட்டமிட்டு இருந்த நிலையில், தன்கர் எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது பா.ஜ.க.வுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை வெளிப்படுத்தும் விதமாக அன்று மாலையில் தன்கரின் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் மத்திய மந்திரிகள் நட்டாவும், கிரண் ரிஜிஜுவும் கலந்து கொள்ளவில்லை.

அப்போதே ஏதோ மிகப்பெரிய பிரச்சினை உருவெடுத்துவிட்டது என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இரவு 9.25 மணிக்கு அவருடைய சமூகவலைதளத்தில் தன் உடல் நிலையை காரணம் காட்டி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். கடந்த 10-ந்தேதிதான் தன்கர், 'எனக்கு தெய்வீக தலையீடு இல்லாமல் இருந்தால் என் பதவி காலம் முழுவதும் பணியாற்றிவிட்டுத்தான் ஓய்வு பெறுவேன்' என்று பிரகடனப்படுத்தி இருந்தார். எனவே அவரது திடீர் ராஜினாமா, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுவரையில் இருந்த 13 துணை ஜனாதிபதிகளில் இதுவரை யாரும் இப்படி இடையிலேயே ராஜினாமா செய்ததில்லை. அதற்கு தன்கரின் உடல் நலக்குறைவுதான் காரணம் என்பது ஏற்புடையதாக தெரியவில்லை. அவர் ஏன்? எதற்காக ராஜினாமா செய்தார்? என்ற முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த மக்களுக்கும் இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்