அரசு சேவைகள் வீடு தேடி வருகிறது

அரசின் சேவைகள் அனைத்தும் வீடு தேடி செல்லும் வகையிலான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.;

Update:2025-07-17 04:45 IST

பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காமராஜர் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கு அரசின் அனைத்து திட்டங்களும் போய் சேரவேண்டும் என்பதில் அதிக அக்கறையுடன் இருந்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காமராஜருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர் ஆசைப்பட்டதுபோல மக்களுக்கு அரசின் சேவைகள் அனைத்தும் வீடு தேடி செல்லும் வகையிலான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை தொடங்கி வைத்தார்.

காமராஜருக்கு புகழஞ்சலி செலுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் தொடங்கிய மதிய உணவு திட்டத்தை நினைவு கூர்ந்து, அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல, நூற்றாண்டுக் கல்வி கனவுக்கான அடித்தளம். நல்லவேளை, பள்ளியில் கல்விதான் கொடுக்கவேண்டும்; சோறுபோட அது என்ன ஓட்டலா? என்று அதிமேதாவியாகப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று. அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டுக்கு இன்று! கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்! என்று கூறினார்.

இதுகுறித்து வெளியிட்ட சமூகவலைத்தள பதிவில், கதர் சட்டை அணிந்து கருப்பு சட்டைக்காரர்களின் பணிகளை செய்த கர்மவீரர் காமராஜர்! தந்தை பெரியாரின் வழிகாட்டலில் ஆட்சி நடத்திய பச்சைத் தமிழர்! திறமை என்பது பிறப்பால் வருவதல்ல, வாய்ப்பு கிடைத்தால் எவரும் பெறுவது என்று ஓங்கி உரைத்த பெருந்தலைவர்! மக்களோடு மக்களாக வாழ்ந்த, அவரது பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தி, மக்களை நாடி அரசு செல்லும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை தொடங்கி வைக்கிறேன் என்று கூறி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக ஜூலை மாதம் 15-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 15-ந்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. நகர்ப்புற பகுதிகளில் 3,768 முகாம்களும், ஊரக பகுதிகளில் 6,232 முகாம்களும் நடைபெறுகிறது.

நகர்ப்புற பகுதிகளில் 13 அரசு துறைகளை சேர்ந்த 43 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 துறைகளை சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் எங்கெங்கு எந்த நாளில் மக்களை தேடி அரசு வரும் முகாம்கள் நடக்கிறது?, எந்த இடத்தில் நடக்கிறது? என்ற விவரத்தையும் தெரிவிக்க ஒவ்வொரு வீட்டுக்கும் வரும் தன்னார்வலர்கள், ஒவ்வொரு முகாமிலும் அரசின் என்னென்ன திட்டங்கள், சேவைகள் வழங்கப்படும்? என்று விவரித்து அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்தும் விளக்கி சொல்வதோடு அதுதொடர்பான கையேட்டையும், விண்ணப்பங்களையும் வழங்குவார்கள்.

மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு தகுதியுள்ள விடுபட்டவர்கள் இந்த முகாம்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம். இந்த திட்டத்தின் பெரிய சிறப்பு என்னவென்றால் முகாம்களில் கொடுக்கப்படும் அனைத்து மனுக்கள் மீதும் 45 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. கடலூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த முகாமில் கொடுத்த 3 மனுக்களுக்கு ஒரு மணி நேரத்துக்குள் தீர்வு கிடைத்தது. மக்கள் தங்கள் தேவைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு செல்வதற்கு பதிலாக, அரசு அலுவலகங்களே அவர்களை தேடி வரும் இந்த திட்டம் மிகவும் வரவேற்புக்குரியது. அதுபோல இப்போது முகாம்களில் எவ்வளவு விரைவாக தீர்வு காணப்படுகிறதோ, அதேவேகத்தில் 10 ஆயிரம் முகாம்களில் வழங்கப்படும் மனுக்களுக்கும் உடனடி தீர்வு வழங்க அரசு ஊழியர்கள், அதிகாரிகள் துரிதமாகவும், முனைப்புடனும் செயல்பட வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்