சிறு தொழில்களில் பெண்களின் வெற்றி நடை
பெண்கள் தொழில் முனைவோர் ஆக தமிழக அரசும், மத்திய அரசும் பல ஊக்க சலுகைகளையும், கடன் வசதிகளையும் அளித்து வருகின்றன.;
இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒரு இலக்கை நோக்கியே தங்கள் பாதையை வகுத்துள்ளனர். பிரதமர் மோடி 2027-க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அதாவது, ரூ.425 லட்சம் கோடி பொருளாதாரத்தை உருவாக்கியே தீருவேன் என்று இலக்கு நிர்ணயம் செய்து, அதற்கேற்ற வகையில் திட்டங்களை தீட்டி வருகிறார். அதே நேரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் அதில் 5-ல் ஒரு பகுதியாக ஒரு டிரில்லியன் டாலர் அதாவது, ரூ.85 லட்சம் கோடி பொருளாதாரத்தை 2030-க்குள் உருவாக்கியே தீருவேன் என்று ஒரு லட்சியத்தை பறை சாற்றி அதை நோக்கி வேகமாக சென்று கொண்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டில் இந்த லட்சியத்தை அடைய வேண்டுமென்றால், தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்க வேண்டும். அதிலும் குறு, நடுத்தர, சிறு தொழில்களின் வளர்ச்சிதான் பெரிதும் கை கொடுக்கும். இதன் உற்பத்தி பொருட்கள் கனரக தொழில்களுக்கு உதிரி பொருட்களாக மட்டுமல்லாமல், அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அன்னிய செலாவணியையும் பெருமளவில் ஈட்டித்தரும். இந்தியாவில் உள்ள மொத்த தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் 15 சதவீதம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு 3-வது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து ரூ.3.86 லட்சம் கோடி மதிப்புள்ள ஏற்றுமதி வெளிநாடுகளுக்கு ஆண்டுதோறும் அனுப்பப்படுகிறது. இத்தகைய வளர்ச்சியில் குறு, நடுத்தர, சிறு தொழில்களின் வளர்ச்சி வியத்தகு அளவில் இருக்கிறது.
தமிழ்நாட்டில் 35 லட்சத்து 56 ஆயிரம் குறு, நடுத்தர, சிறு தொழில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 10 லட்சத்து 69 ஆயிரம் தொழில்கள் உற்பத்தித்துறையிலும், 24 லட்சத்து 87 ஆயிரம் தொழில்கள் சேவைத்துறையிலும் இருக்கிறது. இது கடந்த பிப்ரவரி மாதம் உதயம் இணைய தள தரவுகளில் கிடைத்த கணக்கீடுகளாகும். இந்த சிறு தொழிற்சாலைகள் மூலம் தமிழ்நாட்டில் 2.56 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் மிகவும் பெருமைதரும் சாதனை என்னவென்றால், தமிழ்நாட்டில் 6 லட்சத்து 23 ஆயிரம் தொழிற்சாலைகள் மகளிரால்தான் நடத்தப்படுகிறது. தென் மாநிலங்களிலேயே இதுதான் அதிகமாகும். இந்த தொழிற்சாலைகளில் 17 ஆயிரத்து 206 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 42 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இந்த தொழிற்சாலைகளில் மொத்த வரவு-செலவு ஆண்டுக்கு ஒரு லட்சத்து 91 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். ஆக தமிழ்நாட்டை தொழில்மயமாக்குவதில் மகளிர் தொழில்முனைவோர் வெற்றி பயணத்தில் முன்னணியில் இருந்து பெரும் சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாட்டில் இருக்கும் சிட்கோ தொழில் பூங்காக்களில், 5 பூங்காக்கள் மகளிர் தொழில் முனைவோருக்காக மட்டுமே இருக்கிறது. இங்கு 1,022 தொழிற்கூடங்கள் இருக்கின்றன. பெண்கள் தொழில் முனைவோர் ஆக தமிழக அரசும், மத்திய அரசாங்கமும் பல ஊக்க சலுகைகளையும், கடன் வசதிகளையும் அளித்து வருகின்றன. படித்து பட்டம் பெற்ற பல பெண்களும் இப்போது ஏதாவது தொழில் தொடங்குவதில்தான் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இந்த வேகத்தில் பெண்கள் தொழில் தொடங்கி வந்தால் மகளிர் முன்னேற்றம் என்பது தமிழ்நாட்டில் பெரும் பாய்ச்சலாக இருக்கும்.