பாராளுமன்றத்தில் உறுதி அளிக்கலாமே!

பாராளுமன்றத்தின் இரு அவைகளுமே கடந்த 12 நாட்களாக தொடர்ந்து முடங்கிப்போய் கிடக்கிறது.

Update: 2018-03-20 21:30 GMT
பாராளுமன்றத்தின் இரு அவைகளுமே கடந்த 12 நாட்களாக தொடர்ந்து முடங்கிப்போய் கிடக்கிறது. அவைநேரம் தொடங்கியவுடனே மக்களவையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த உறுப்பினர்களும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர்களும் தங்கள் கோரிக்கைகளுக்காக சபாநாயகர் இருக்கையைச்சுற்றி பலத்த கோ‌ஷங்களை எழுப்புவதால், அவையின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட முடியாமல் ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அமளியிலும் நிதி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. அ.தி.மு.க., தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களை பொறுத்தமட்டில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், ‘காவிரி மேலாண்மை வாரியம்’ உடனடியாக அமைக்கப்படவேண்டும் என்பதுதான் கோரிக்கை. தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் கோரிக்கை 100 நாள் வேலைத்திட்டத்தை விவசாய வேலைகளோடு இணைக்கவேண்டும். தெலுங்கானாவிற்கு இடஒதுக்கீடு கோட்டாவை அதிகரிக்கவேண்டும் என்பதுதான். இதற்கிடையில், ஆந்திராவுக்கு ‘சிறப்பு மாநில அந்தஸ்து’ வழங்கப்படவில்லை என்ற எதிர்ப்பின் அடிப்படையில், முன்பு பா.ஜ.க.வின் கூட்டணியாக இருந்த தெலுங்குதேசம் கட்சியும் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் நோட்டீசை கொடுத்திருக்கிறது. இந்த நோட்டீசின் அடிப்படையில் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.

ஆனால் அ.தி.மு.க.வும், தெலுங்கானா ராஷ்டிர சமிதியும் அவையை நடத்தவிடாமல் கோ‌ஷங்கள் எழுப்பிக்கொண்டிருப்பதால், அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்ள முடியவில்லை. பா.ஜ.க.வின் கூட்டணியைவிட்டு தெலுங்குதேசம் வெளியேவந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் இதே கோரிக்கைக்காக ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்திருப்பது ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. அவை அமைதியான சூழ்நிலையில் இல்லாததால், ‘என்னால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்ள முடியவில்லை, நான் வருந்துகிறேன்’ என்று சொல்லி மக்களவையில் சபாநாயகர் அவையை ஒத்திவைத்துவிடுகிறார். மாநிலங்களவையிலும் அதன் தலைவர் வெங்கையா நாயுடு அவையை ஒத்திவைத்துவிடுகிறார். இது தினமும் நடக்கிறது. இந்தநிலையில், தெலுங்குதேசம், சமாஜ்வாடி போன்ற கட்சிகள், அ.தி.மு.க., தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிகளை இவ்வாறு போராட்டம் நடத்த பா.ஜ.க.தான் ஊக்குவிக்கிறது என்கிறது. இவர்கள் போராட்டம் நடத்தி அவை நடக்கமுடியாத சூழ்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்ள முடியாது என்றநிலையை உருவாக்க பா.ஜ.க.வின் முயற்சிதான் இது என்று அபாண்டமாக குற்றம் சாட்டுகிறது. இது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும்.

நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு 3 நாட்கள்தான் ஆகிறது. ஆனால், அ.தி.மு.க. 12 நாட்களாக தன் கோரிக்கைக்காக போராட்டம் நடத்திவருகிறது. தமிழக கட்சிகளை குறைசொல்லும் தெலுங்குதேசம் உள்பட அனைத்து கட்சிகளும் முதலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கைக்கு உறுதுணையாக இருந்தால், அதற்கடுத்து அவர்கள் கோரிக்கைக்கும் வலுகிடைக்கும். இதுமட்டுமல்லாமல், ‘தந்தி’ டி.வி.க்கு அளித்த பேட்டியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்’ என்று உறுதி அளித்திருக்கிறார். தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் சில தலைவர்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று வெளியே கூறுகிறார்கள். வெளியே கூறும் இந்த உறுதிமொழியை பாராளுமன்றத்தில் மத்திய அரசாங்கம் கொடுத்துவிட்டால் பிரச்சினையெல்லாம் தீர்ந்துவிடும். அவையும் சுமுகமாக நடக்கும். ஆக, இதில் அ.தி.மு.க.வை குறைசொல்வதற்கும் ஒன்றுமில்லை.

மேலும் செய்திகள்