குண்டர் சட்டம் பாயட்டும்

கடந்த ஆண்டு மே மாதம் 5–ந் தேதி மதுரையில் நடந்த அரசு விழாவில், ‘முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இனிமேல் மணல் குவாரிகளையெல்லாம் அரசே முழுமையாக எடுத்துச் செயல்படுத்தும்.

Update: 2018-05-13 21:30 GMT
லோடு காண்டிராக்ட் அதாவது, மணலை லாரியில் நிரப்புவது, ஸ்டாக்யார்டு மணலை சேமித்து வைப்பது ஆகிய இரண்டும் இனிமேல் அரசின் மேற்பார்வையில்தான் எடுத்துச் செயல்படுத்தப்படும்’ என்று அறிவித்தார். இதுமட்டுமல்லாமல், இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் ஆற்றில் மணல் அள்ளுவது முழுமையாக நிறுத்தப்படும் என்றும் உறுதிபட அறிவித்தார். முதல்–அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டு ஒரு ஆண்டாகிவிட்டது. அரசுதான் மணல் குவாரிகளை நடத்துகிறது என்று கூறினாலும், நடைமுறையில் மணல் மாபியாக்கள் மணலை கொள்ளையடித்து, தனியாக கடைபோட்டு, பெருமளவில் விற்பனை ஜரூராக நடந்துவருகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இந்த மணல் மாபியாக்களுக்கு போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் துணை பெருமளவில் இருக்கிறது. அந்தந்த பகுதிகளில் இவர்கள் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. நேர்மையான அதிகாரிகள் மணல் கொள்ளையை தடுக்க முயன்றால், தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அடிக்கடி நடக்கிறது.

கடந்த 7–ந் தேதி நெல்லை மாவட்டம், நாங்குநேரி யூனியனுக்கு உட்பட்ட வடக்கு விஜயநாராயணம் என்ற ஊரின் காவல்நிலையத்தில் தனிப்பிரிவு போலீஸ்காரராக வேலைபார்த்த ஜெகதீஷ்துரை மணல் கொள்ளையர்கள் டிராக்டரில் மணலை கொள்ளையடித்து சென்றபோது, அதை தடுக்க முயன்றதால் இரும்பு கம்பியால் அடித்து கொல்லப்பட்டார். அவருடைய மனைவி மரியரோஸ் மார்க்கரெட் தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார். அவருடைய சந்தேகம் மணல் கொள்ளையர்களுக்கு துணையாக இருக்கும் சில காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை மீதே இருக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு ஒரு மனு கொடுத்து இருக்கிறார். தமிழக அரசு சிறப்பு காவல்படை அமைத்து, இதை தீவிர விசாரணை செய்யவேண்டும். ஜெகதீஷ்துரை குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை முதல்–அமைச்சர் அறிவித்துள்ளார். துணிச்சலாக மணல் கொள்ளையை தடுக்க முயன்ற ஜெகதீஷ்துரை குடும்பத்துக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்கவேண்டும். மேலும் எம்.காம்.,பி.எட். பட்டப்படிப்பு படித்த அவருடைய மனைவிக்கு அரசு வேலையும் வழங்கப்படவேண்டும். அவருடைய 3½ வயது மகன், பிறக்கப்போகும் குழந்தைக்கு படிப்பு செலவை அரசே ஏற்கவேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இந்த நிலையில், மாமூல் வாங்கிக்கொண்டு மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ராமதிலகம் கொண்ட பெஞ்சு உத்தரவிட்டுள்ளது. மணல் கடத்தலில் ஈடுபடும் லாரி டிரைவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும்போது, அதை தூண்டுபவர்கள், உடந்தையாக இருப்பவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயவேண்டும் என்ற இந்த தீர்ப்பு நிச்சயமாக வரவேற்புக்குரியது. மணல் கடத்தலில் போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்தால் அதை தீவிரமாக விசாரித்து, உண்மை என்றால் ஐகோர்ட்டு உத்தரவுப்படி, சட்டத்துக்குட்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும். ஜெகதீஷ்துரை வழக்கில் இருந்து இந்த நடவடிக்கை தொடங்கட்டும்.

மேலும் செய்திகள்