அழகிய காஷ்மீர்; அமைதி காஷ்மீர் ஆகவேண்டும்

காஷ்மீர் மிகவும் அழகிய மாநிலமாகும். எழில் கொஞ்சும் அழகிய மலைகளையும், ஏரிகளையும் கொண்ட இந்த மாநிலத்தில் அமைதி நிலவவில்லை.

Update: 2018-06-21 21:30 GMT
காஷ்மீர் மிகவும் அழகிய மாநிலமாகும். எழில் கொஞ்சும் அழகிய மலைகளையும், ஏரிகளையும் கொண்ட இந்த மாநிலத்தில் அமைதி நிலவவில்லை. பயங்கரவாதிகளின் அட்டூழியத்தால் மாநிலமே ரத்தக்காடாகித்தான் இருக்கிறது. இந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள். இங்கு ஜனநாயகம் மலர எவ்வளவோ முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், பயங்கரவாதத்தை இதுவரை முழுமையாக ஒழிக்கமுடியவில்லை. இந்த சூழ்நிலையில், 2014-ம் ஆண்டு டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முப்தி முகமது சயீத்தின் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களிலும், பா.ஜ.க. 25 இடங்களிலும், தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும், இதர கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 7 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. மொத்தமுள்ள 87 இடங்களில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால், எதிரும்புதிருமாக தேர்தல் நேரத்தில் ஒருவருக்கொருவர் வசைபாடிக்கொண்டிருந்த மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜ.க.வும் பொருந்தா கூட்டணியாக ஒன்று சேர்ந்தன.

முதலில் முப்தி முகமது சயீத் 2015-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். சிலமாதங்களில் அவர் காலமானவுடன், அவரது மகளான மெகபூபா முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றார். பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவேண்டும் என்பதில் பா.ஜ.க. மிகத்தீவிரமாக இருந்தது. ஆனால், மெகபூபா அதை ஆதரிக்கவில்லை. பயங்கரவாதிகள் விஷயத்தில் மென்மையானபோக்கு அதாவது, பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணவேண்டும் என்று மெகபூபா விரும்பினார். இந்தநிலையில், ரம்ஜானையொட்டி ஒருமாத காலம் ராணுவ நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால், பயங்கரவாதிகளோ தங்களது கொடூர நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. கடந்த சிலநாட்களாக பயங்கரவாதம் மிகஅதிகமாக இருந்தது. பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புகாரியையும், அவரது 2 மெய்காப்பாளர்களையும் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதுமட்டுமல்லாமல், ராணுவ வீரர் அவுரங்க சீப்பை பயங்கரவாதிகள் கடத்திச்சென்று கொன்றனர். இந்த நிலையில், ரம்ஜானுக்கு பிறகும் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்படவேண்டும் என்று மெகபூபாவும், இல்லை தீவிரப்படுத்தவேண்டும் என்ற கருத்தில் பா.ஜ.க.வும் உறுதியாக இருந்தது. ஏற்கனவே புகைந்துகொண்டிருந்த வேறுபாடுகள் காரணமாக பா.ஜ.க. தனது ஆதரவை வாபஸ் பெற்றது. இப்போது 8-வது முறையாக கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

தற்போது கவர்னராக இருக்கும் 82 வயது என்.என்.வோரா கடந்த 10 ஆண்டுகளாக கவர்னராக இருந்து வருகிறார். அவரது பதவிகாலத்தில் இது 4-வதுமுறை கவர்னர் ஆட்சியாகும். அடுத்த 8 நாட்களில் அவர் பதவியிலிருந்து ஓய்வு பெறப்போகிறார். அவரே மற்றொரு முறை கவர்னராக இருப்பாரா? என்பது அடுத்த சிலநாட்களில் தெரிந்துவிடும். அவருடைய ஆலோசகராக சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டு வீழ்த்திய, காஷ்மீரில் எல்லை பாதுகாப்புப்படை ஐ.ஜி.யாக பணியாற்றிய அனுபவம் கொண்ட தமிழக போலீஸ் அதிகாரி விஜய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். கவர்னர் ஆட்சியில் ராணுவமும், போலீசும் ஒருங்கிணைந்து நல்ல உளவு தகவல்களை திரட்டி காஷ்மீரை ஒரு அமைதிபூமியாக்கும் வகையில் பயங்கரவாதத்தை நசுக்கவேண்டும். காஷ்மீர் மாநிலத்தில் வாழ்பவர்கள் பாகிஸ்தானுக்கு விசுவாசிகளாக இருக்கவே முடியாது என்ற ஒருநிலையை உருவாக்கவேண்டும் என்றுதான் நாடு எதிர்பார்க்கிறது. கவர்னர் ஆட்சி நிச்சயமாக அந்த பாதையில் காஷ்மீரை வழிநடத்தும்.

மேலும் செய்திகள்