நல்லதொரு தொடக்கம்

சரித்திர காலம்தொட்டு காவிரி பிரச்சினையில் ஒரு தீர்வு காணப்படாமல் இழுத்துக்கொண்டே போனது. பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.

Update: 2018-07-04 21:30 GMT
ரித்திர காலம்தொட்டு காவிரி பிரச்சினையில் ஒரு தீர்வு காணப்படாமல் இழுத்துக்கொண்டே போனது. பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. அரசு தரப்பில் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், எதிலும் தீர்வு எட்டப்படவில்லை. இந்தநிலையில், குடும்பத்தில் சகோதரர்களுக்கிடையே மனத்தாங்கல், கருத்துவேறுபாடுகள் இருந்தால், தாய் எப்படி இரு மகன்களுக்கும் இடையே எவ்வித பாரபட்சமும் இல்லாமல் ஒரு தீர்வை வழங்குவாரோ, அதுபோல சுப்ரீம் கோர்ட்டு தாய் ஸ்தானத்திலிருந்து தீர்வுகாண வழியைக்காட்டிவிட்டது. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு, தமிழ்நாட்டிற்கு ஒரு ஆண்டிற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று கர்நாடக மாநிலத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்தத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக ‘காவிரிநீர் மேலாண்மை ஆணையமும்’, ‘காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவும்’ அமைக்க உத்தரவிடப்பட்டது. இந்த இரு அமைப்புகளுக்கும் உறுப்பினர்கள் நியமனமும் முடிந்துவிட்டது. 

காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தின் முதல்கூட்டம் டெல்லியில் கடந்த திங்கட்கிழமை நடந்தது. ஆணையத்தின் தலைவரான மசூது உசேன் இந்தக்கூட்டத்திற்கு தலைமைத்தாங்கி நல்லதொரு உத்தரவை பிறப்பித்தார். தென்மேற்கு பருவமழை பெய்துகொண்டிருக்கும் இந்தகாலக்கட்டத்தில், இப்போது நடந்துகொண்டிருக்கும் ஜூலை மாதத்தில் கர்நாடகம் 31.24 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட உத்தரவிட்டுள்ளார். ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டுக்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடவேண்டும். ஆனால், நல்ல மழை பெய்ததால் 11 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த கூடுதல் அளவு தண்ணீரை இந்தமாத அளவில் இருந்து கழித்துக்கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் மாதத்தில் கூடுதலாக தண்ணீர் திறந்துவிட்டதின் காரணம், அந்தநேரத்தில் நல்ல மழை பெய்து கர்நாடகத்தின் அணைகள் எல்லாம் நிரம்பியபோது, இதற்கு மேலும் தண்ணீரை தேக்கிவைக்கமுடியாது என்பதால், ஒரு வடிகால் போலத்தான் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆகவே, மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளநீரை திறந்துவிடுவதை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை அடுத்தகூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தவேண்டும். 

நிச்சயமாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல்கூட்டம் நல்லதொரு தொடக்கத்தை அளித்துள்ளது. இதுமட்டுமல்லாமல், தென்மேற்கு பருவமழை பெய்யும் காலக்கட்டங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை ஆணையக் கூட்டம் நடைபெறும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆக, 10 நாட்களுக்கு ஒருமுறை காவிரிநீர் தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்படுகிறதா? என்பது கண்காணிக்கப்படும். இப்போது இந்த மாதத்தில் 31.24 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடுவதுபோல, ஆகஸ்டில் 45.95 டி.எம்.சி.யும், செப்டம்பரில் 36.76 டி.எம்.சி.யும், அக்டோபரில் 20.22 டி.எம்.சி.யும், நவம்பரில் 13.78 டி.எம்.சி.யும், டிசம்பரில் 7.35 டி.எம்.சி.யும், அடுத்த ஆண்டு ஜனவரியில் 2.76 டி.எம்.சி.யும், பிப்ரவரி மாதம் முதல் மே மாதம்வரை தலா 2.50 டி.எம்.சி.யும் தண்ணீர் திறந்துவிடப்படுவதை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதிப்படுத்தவேண்டும். இன்று காவிரிநீர் ஒழுங்காற்று குழுவின் முதல்கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இந்தக்கூட்டத்தில்தான் இரு மாநிலங்களிலும் உள்ள அணைகளில் எவ்வளவு நீர்மட்டம் தற்போது இருக்கிறது என்ற புள்ளிவிவரம் கணக்கெடுக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 10 நாட்கள் தினமும் எவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்படும் என்பதுபற்றி முடிவெடுக்கப்படும். காவிரி மேலாண்மை ஆணையம், எல்லோரும் மகிழத்தக்க வகையில் முடிவுகளை எடுத்ததுபோல, காவிரிநீர் ஒழுங்காற்று குழுவும் நல்லதொரு வழிகாட்டுதல்களை அளிக்கவேண்டும்.

மேலும் செய்திகள்