இலங்கையில் குழப்பத்திற்கு மேல் குழப்பம்

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் ஜனநாயக மரபுகளைமீறி, குழப்பத்திற்குமேல் குழப்பமான நிலை நீடித்துக்கொண்டிருக்கிறது.

Update: 2018-11-13 22:30 GMT
ந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் ஜனநாயக மரபுகளைமீறி, குழப்பத்திற்குமேல் குழப்பமான நிலை நீடித்துக்கொண்டிருக்கிறது. 2015–ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்தது. அப்போது ராஜபக்சே அரசில் சுகாதாரத்துறை மந்திரியாக பணியாற்றிய மைத்ரிபால சிறிசேனா, எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு தேர்தலில் வெற்றிபெற்று அதிபர் ஆனார். தொடர்ந்து ஆகஸ்டு மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரனில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி, சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியின் ஆதரவோடு பிரதமராக ரனில் விக்கிரமசிங்கே தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்தநிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் சிறிசேனாவுக்கும், ரனில் விக்கிரமசிங்கேயுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.

சிறிசேனா இலங்கையில் பல்வேறு திட்டங்களுக்கு சீனாவுக்கு அனுமதி அளிக்க முயற்சி செய்தார். ஆனால், ரனில் விக்கிரமசிங்கே ஏற்கனவே மேற்கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தியாவுக்குத்தான் வழங்கவேண்டும் என்று உறுதியாக நின்றார். மந்திரிசபை கூட்டத்திலேயே இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் 26–ந்தேதி சிறிசேனா திடீரென ரனில் விக்கிரமசிங்கேயை பதவிநீக்கம் செய்து, ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். ஆனால், பல குழப்பங்களுக்கு இடையே நாடாளுமன்றம் இன்று 14–ந்தேதி கூடும் என்று அறிவித்தநிலையில், ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களையும் அதிகளவில் கட்சி தாவ வைக்கமுடியாது என்றநிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை திடீரென கலைத்துவிட்டு, ஜனவரி மாதம் 5–ந்தேதி தேர்தல் என்று சிறிசேனா அறிவித்துவிட்டார். இதை எதிர்த்து இலங்கை உயர்நீதிமன்றத்தில் 11 மேல்முறையீடு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கு விசாரணை நடந்துவருகிறது. ரனில் விக்கிரமசிங்கே தரப்பு கடந்த 2015–ம் ஆண்டு இலங்கை அரசியல் சட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 19–வது சட்டத்திருத்தத்தின் அடிப்படையில், சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்தது தவறு என்று வாதிடுகிறது. அந்த திருத்தத்தின்படி, இலங்கை நாடாளுமன்றத்தை அதன் பதவிகாலம் 4½ ஆண்டுகள் முடிவதற்கு முன்பு 3–ல், 2 பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலைக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினால் ஒழிய கலைக்கமுடியாது என்று தெளிவாக இருக்கிறது.

சிறிசேனா தரப்பிலோ அரசியல் சட்டத்தின் 33(2) (சி)–ன் அடிப்படையில், நாடாளுமன்றத்தை கூட்டவோ, முடித்து வைக்கவோ, கலைக்கவோ அதிபருக்கு உரிமை இருக்கிறது என்று வாதிடுகிறார்கள். ஆனால், பல சட்டநிபுணர்கள் அதிபரின் கடமைகள் குறித்து கூறப்பட்டுள்ள இந்த அரசியல் சட்டப்பிரிவு 2015–ல் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தை கட்டுப்படுத்தாது என்று வாதிடுகிறார்கள். ஆக, இப்போது இதற்கான தீர்வு இலங்கை உயர்நீதிமன்றத்தில் இருக்கிறது. ஜனநாயகத்தில் விதிமீறல்கள் இருக்கலாம், ஆனால் நீதி வழுவாது, நீதி நிலைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்லப்போகிறது என்பதுதான் இப்போது இலங்கை மட்டுமல்ல, உலகம் முழுவதும் எதிர்பார்க்கும் ஒன்றாகும். நாடாளுமன்றத்தின் பதவிகாலம் இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன. இந்தநிலையில், நாடாளுமன்றத்தை கூட்டி யாருக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்று பார்க்கவேண்டியதுதான் அதிபரின் கடமையேதவிர, ராஜபக்சே பிரதமராக வருவதற்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இல்லை என்று அவருடைய தரப்பிலேயே கூறப்பட்ட சிறிதுநேரத்தில், நாடாளுமன்றத்தையே சிறிசேனா கலைத்தது நிச்சயமாக ஏற்புடையதல்ல என்பதுதான் உலகத்தின் கண்ணோட்டம் ஆகும்.

மேலும் செய்திகள்