சிறப்பு நிதியை கேளுங்கள்

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் திருச்சி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளை சமீபத்தில் வீசிய ‘கஜா’ கோரப்புயல் புரட்டிப் போட்டு விட்டது.

Update: 2018-11-26 22:00 GMT
12 நாட்களாகியும் இன்னும் இந்தப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இந்தநிலையில், தமிழக அரசு சார்பில் உடனடியாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்தித்து ரூ.15 ஆயிரம் கோடி நிதி உதவி கோரியுள்ளார். வெள்ளச்சேதத்தை பார்வையிட மத்தியகுழு வந்தது. எல்லா இடங்களையும் பார்வையிட்டு இன்று டெல்லி செல்கிறது. இந்தக்குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு பாதிக்கப்பட்ட மக்களின் வலியையும், துயரத்தையும் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது. எங்கள் கற்பனைக்கும் மீறிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போதெல்லாம் தமிழக அரசு நிதிகோருவதும், மத்திய குழு வருவதும் வாடிக்கையான ஒரு நிகழ்வுதான். ஆனால், ஒரு நேரமும் தமிழக அரசு கோரிய நிதிக்கு பக்கத்தில்கூட மத்திய அரசாங்கத்தின் நிதி வந்து சேரவில்லை. 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பயங்கர வெள்ளச்சேதத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.25,912 கோடியே 45 லட்சம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், மத்திய அரசாங்கம் கொடுத்தது ரூ.1,759 கோடியே 55 லட்சம்தான். 2016-ம் ஆண்டு வார்தா புயலோடு ரூ.22,573 கோடியே 26 லட்சம் கோரப்பட்டது. ஆனால் மத்திய அரசாங்கம் கொடுத்தது ரூ.1,793 கோடியே 63 லட்சம்தான். இதுபோல கடந்த ஆண்டு கோரத்தாண்டவம் ஆடிய ‘ஒகி’ புயலுக்காக ரூ.9,302 கோடி கோரப்பட்டது. ஆனால், மத்திய அரசாங்கம் வழங்கியது ரூ.413 கோடியே 55 லட்சம்தான். இப்போது ரூ.15 ஆயிரம் கோடி தேவையான ஒன்று. ஆனால், மத்திய அரசாங்கம் மாநில தேசிய பேரிடர் மீட்புநிதியில் இருந்தும், தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்தும் மட்டும் பணம் ஒதுக்கினால் நாம் கேட்கும் இவ்வளவு தொகையை நிச்சயமாக பெறமுடியாது.

இந்த ஆண்டுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.786 கோடியைத்தான் நிதிக்குழு ஒதுக்கியிருக்கிறது. இதில் 90 சதவீத தொகை மத்திய அரசாங்கமும், 10 சதவீததொகை மாநில அரசும் பங்கிட்டுக் கொள்ளவேண்டும். இந்தத் தொகையில் ஏற்கனவே சில ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தொகையைத்தான் மத்திய அரசாங்கம் ஒதுக்க முடியும். இதுபோல, தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்தும் கொஞ்சம் தொகையைத்தான் வழங்க முடியும். மேலும் மத்திய அரசாங்கத்தின் சில துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து அவர்கள் ஒதுக்கீடு செய்யமுடியும். ஆனால், இந்த ஒதுக்கீடு மிகவும் குறைவான தொகையாகத்தான் இருக்கும். எடுத்துக்காட்டாக, ‘வார்தா’ புயல் சமயத்தில் தேசிய ஊரக குடிநீர் திட்டத்திலிருந்து ரூ.2 கோடியே 6 லட்சம்தான் கொடுத்தார்கள். எனவே, பேரிடர் மீட்பு நிதியிலிருந்தும், மத்திய அரசாங்கத்துறைகளில் இருந்தும் ஒதுக்கீடு பெறுவதோடு மட்டுமல்லாமல், பிரதமரிடம் இந்தப்புயலின் கோரத்தை எடுத்துக்கூறி, இதற்கென தனியாக சிறப்பு நிதி கேட்பதுதான் சாலச்சிறந்ததாகும். மத்தியகுழு அறிக்கை நிச்சயமாக புயலின் கோரத்தை வெளிக்காட்டும் வகையில் இருக்கும். ஆனால், ‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’ என்பதற்கேற்ப, பேரிடர் மீட்பு நிதியை மட்டும் எதிர்பார்த்தால் போதிய நிதி கிடைக்காது. பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து ‘கஜா’புயலுக்கு சிறப்பு நிவாரண நிதியைப்பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும்.

மேலும் செய்திகள்