ஜாலியன் வாலாபாக் படுகொலை நூற்றாண்டு தினம்

இன்றைய தினம் இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கியமான நாளாகும். ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகளாகிவிட்டன.

Update: 2019-04-12 22:30 GMT
ன்றைய தினம் இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கியமான நாளாகும். ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகளாகிவிட்டன. 

1919–ம் ஆண்டு ஏப்ரல் 13–ந்தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலாபாக் மைதானத்தில் ஒரு அமைதியான பொதுக்கூட்டம் நடந்தது. இந்தியர்களின் பேச்சுரிமை உள்பட அனைத்து உரிமைகளையும் பறிக்கும் கொடிய ரவுலட் சட்டத்தை எதிர்த்தும், ஏற்கனவே இந்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் கைது செய்யப்பட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பலர் கொல்லப்பட்டது ஆகியவற்றை கண்டித்தும் நடந்த அகிம்சை கூட்டம்தான் அது. பிரிகேடியர் ஜெனரல் ரொனால்டு டயர் என்ற வெள்ளைக் காரர் தலைமையில் வந்த ஆங்கிலேய ராணுவ படை, கூடியிருந்தவர்களை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுக்காமல், பீரங்கியால் சுட்டு வீழ்த்தினர். 10 நிமிட நேரம் 1,650 ரவுண்டுகள் சுட்டப்பிறகுதான் பீரங்கிகள் ஓய்ந்தன. ‘‘சுட்டேன் சுட்டேன் குண்டுகள் தீரும்வரை சுட்டேன்’’ என்று கொக்கரித்தான் பிரிகேடியர் ஜெனரல் டயர். இந்த சம்பவத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிர்இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். 

ஆண்டுகள் 100 ஆனாலும், அன்று உயிர் இழந்தவர்களின் ரத்தம்தான் இந்திய நாட்டின் சுதந்திரத்துக்கு உரமிட்டது. சுதந்திரத்துக்காக உயிர்நீத்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜாலியன்வாலாபாக் தியாகி களுக்கு கண்ணீரோடு அஞ்சலி செலுத்தும் கடமை வாழும் தலைமுறைக்கு இருக்கிறது. சுதந்திரத்துக்கு கொடுத்த விலையை மறக்காத தேசம்தான் முன்னேற்றப் பாதையில் வேகமாக செல்லமுடியும். கவிஞர் வைரமுத்து கூறியதுபோல, அந்த அசோக சக்கரத்தின் ஆரங்கள் எல்லாம் விடுதலை வீரர்களின் விலா எலும்புகள். பறந்த கொடியின் கயிறுகள் எல்லாம் இறந்த வீரர்களின் அறுந்த நரம்புகள். எண்ணிக்கையில் அடங்காத எத்தனையோ உயிர்கள் சுதந்திரத்துக்காக பறிக்கப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான சரித்திர சம்பவம்தான் ஜாலியன் வாலாபாக் படுகொலையாகும். ஒரு பாவமும் அறியாத அப்பாவி மக்களை, ஆங்கிலேய ராணுவம் இப்படி கண்மூடித்தனமாக கொன்றுகுவித்ததை இன்றளவும் இந்தியா மட்டுமல்ல, உலகமே கண்டித்து வருகிறது. இன்னுயிரை இழந்தும், ரத்த வெள்ளத்தில் காயமடைந்தும் கிடந்த அந்த வீரர்களின் தியாகம் போற்றுதலுக்குரியது. வணங்குதலுக்குரியது. இந்த சம்பவத்துக்கு பிறகுதான் சுதந்திர போராட்டம் தீவிரமடைந்தது. இந்தியா வந்திருந்த இங்கிலாந்து நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் இந்த சம்பவத்தை பற்றி குறிப்பிடும்போது, ‘இது இந்தியாவோடு உள்ள இங்கிலாந்து நாட்டின் பழைய சரித்திரத்தின் ஒரு வேதனைதரத்தக்க சம்பவம். நடந்த சம்பவத்துக்காகவும், இழைக்கப்பட்ட வேதனைக்காகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார். 

இப்போது இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே, இங்கிலாந்து–இந்தியா வரலாற்றில் இது வெட்கப்படத்தக்க ஒரு தழும்பு என்று கூறி, இந்த சம்பவத்துக்காக தன் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித் துள்ளார். இந்த தியாகிகள் கொல்லப்பட்ட நூறாம் ஆண்டில் இந்த செயலை அப்போது செய்த ஆங்கிலேய அரசாங்கத்தின் செயலுக்கு இங்கிலாந்து நாடாளு மன்றத்திலேயே பிரதமர் வருத்தம் தெரிவித்தது, நம் மனப்புண்ணுக்கு மாமருந்தாக இருக்கிறது. ஜாலியன் வாலாபாக் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் தியாகமூச்சு காற்றிலேதான் சுதந்திர கொடி பறந்துகொண்டு இருக்கிறது. அந்த தியாகிகளின் ரத்தம்தான் நம் சுதந்திர நாட்டின் வெற்றி திலகம். இந்தநாளில் ஜாலியன்வாலா நினைவிடம் இருக்கும் திசைநோக்கி இந்தியர்கள் அனைவரும் வீரவணக்கம் செலுத்துவோம். 

மேலும் செய்திகள்