அன்று நிலவேம்பு கசாயம்; இன்று கபசுர குடிநீர்

அன்று நிலவேம்பு கசாயம் இன்று கபசுர குடிநீர்.

Update: 2020-04-24 22:30 GMT

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று முற்றுப்புள்ளியே இல்லாமல் நீண்டுகொண்டே போகிறது. இதற்கு முடிவு காணவேண்டும் என்றால், கொரோனா பரவலைத்தடுத்து பாதிக்கப்பட்டவர்களை குணமடையச்செய்து புதிதாக யாருக்கும் கொரோனா பாதிக்காத நிலையை உருவாக்குவதுதான். கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்தோ அல்லது குணமாக்கும் மருந்தோ உலகில் எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் பரிசோதனை செய்து உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பதன் நோக்கமே, அவரால் மற்றவர்களுக்கு பரவிவிடக்கூடாது என்பதும், அவருடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, அந்த நோய் எதிர்ப்பு கிருமிகள் கொரோனா தொற்று கிருமிகளோடு போரிட்டு அதை அழிப்பதற்கும்தான். நோய் எதிர்ப்புசக்தி அதிகம் இருந்தால் எந்த தொற்றும் எளிதில் ஒருவருடைய உடலில் நுழைந்துவிட முடியாது.

2012-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப்பரவி பல உயிரிழப்புகள் ஏற்பட்ட நேரத்தில், அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மருத்துவ நிபுணர்களோடு கலந்து ஆலோசித்து தமிழ்நாடு முழுவதும் நிலவேம்பு கசாயம் வழங்க உத்தரவிட்டார். நிலவேம்பு கசாயம் என்பது நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சைவேர், கோரைக்கிழங்கு, சந்தனம், பற்பாடகம், பேய்ப்புடல், சுக்கு மற்றும் மிளகு ஆகிய 9 நாட்டு மருந்துகளை கொண்டதாகும். இந்த நிலவேம்பு கசாயம் அப்போது டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பெரிதும் உதவியது. அதுபோல, இப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ஆரோக்கியம்” என்ற சிறப்புத்திட்டத்தை அறிவித்து பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீர், சூரண பொட்டலங்களை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். கபசுர குடிநீர் தயாரிக்க சுக்கு, திப்பிலி, இலவங்கம், சிறுகாஞ்சொறி வேர், அக்கரகாரம், முள்ளி வேர், கடுக்காய்த்தோல், ஆடாதொடா இலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் கொடி, சிறுதேக்கு, நிலவேம்புச் சமூலம், வட்டத்திருப்பி வேர் (பாடக் கிழங்கு) மற்றும் முத்தக்காசு (கோரைக்கிழங்கு) ஆகிய சித்த வைத்திய பொருட்களை பயன்படுத்த வேண்டும். இந்த திட்டத்தை அவர், மத்திய அரசாங்க ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி அறிவித்துள்ளார்.

மத்திய அரசாங்க ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேதத்தின் நீண்டகால சோதனைகள் மூலம் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது. இதையொட்டி, முதல்-அமைச்சர் சென்னை நகரில் கொரோனா கட்டுப்பாடு பகுதியில் வசிக்கும் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் சூரண பொட்டலங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மத்திய அரசாங்கமும் அறிவுறுத்திவிட்டது. எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட 11 மருத்துவ வல்லுனர்கள் கொண்ட குழுவும் இதற்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த கபசுர குடிநீரை மக்கள் வீட்டில் தயாரிக்கவேண்டும் என்றால் இதற்கு பயன்படுத்தப்பட வேண்டிய 15 பொருட்களையும் அவர்கள் வாங்கி தயாரிக்க முடியாது. எனவே எப்படி ஜெயலலிதா ஆட்சியின்போது, நிலவேம்பு குடிநீர் தமிழகம் முழுவதும் அரசால் வழங்கப்பட்டதோ அதேபோல, சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இந்த நிலவேம்பு, கபசுர குடிநீர், சூரண பொட்டலங்கள் வழங்கும் முயற்சிகளை தமிழகஅரசு உடனடியாக தொடங்க வேண்டும். மக்கள் நல்வாழ்வுத்துறையில் உள்ள இந்திய மருத்துவத்துறை, இம்ப்காப்ஸ் போன்ற நிறுவனங்கள் மற்றும் சித்த மருத்துவர்களை உடனடியாக இதை தயாரிக்கச்சொல்லி சற்றும் தாமதம் இல்லாமல், தமிழ்நாடு முழுவதும் வழங்க வேண்டும். இதேபோல, ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவங்களில் தனித்தனியே எந்த நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்தை எவ்வளவு அளவு சாப்பிடலாம்? என்று வெளியிட்டுள்ள அறிவுரைகளை உடனடியாக பொதுமக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் தமிழகஅரசு பெரிய அளவில் விளம்பரம் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்