தமிழக அரசின் சிக்கன நடவடிக்கைகள்!

தமிழக அரசின் பல சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Update: 2020-05-22 22:30 GMT
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் சொன்ன ஒரு பழமொழி அரசுகளுக்கு மட்டுமல்லாமல், தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், ஏன் குடும்பங்களுக்கும் பொருந்தும். “நீங்கள் சிக்கனம் என்று அழைக்கும்போது, நான் அதை திறமை என்று அழைக்கிறேன்” என்றார். அந்தவகையில், கொரோனா பாதிப்பால் கடுமையான நிதிச்சிக்கலில் தமிழக அரசு உழன்று கொண்டிருக்கும் இந்தச்சூழ்நிலையில், மிகச்சிக்கனமான நடவடிக்கைகளை திறமையாக மேற்கொள்ளும் வகையில், நிதித்துறை பல ஆணைகளை தொடர்ந்து பிறப்பித்து வருகிறது. தமிழக அரசின் வருவாய் பெரும் அளவில் குறைந்துவிட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கை, நிவாரண நடவடிக்கை மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பெருமளவில் நிதி தேவைப்படுகிறது. இதற்காக, தற்போது மற்ற பல செலவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் 12 லட்சம் அரசு ஊழியர்களும், 7 லட்சத்து 40 ஆயிரம் ஓய்வூதியம் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கூடுதல் அகவிலைப்படியை தமிழக அரசு இந்த நிதியாண்டு முடியும் வரை நிறுத்திவைத்ததின் மூலமாக ரூ.4,900 கோடியும், அரசு ஊழியர்கள் தங்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து, அதற்கு ஈடாக ஊதியம்பெறும் முறையை நிறுத்திவைத்ததின் மூலமும் ரூ.2,450 கோடியையும் மிச்சப்படுத்தியது. அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 59-ஆக உயர்த்தியதன் மூலம் ஏறத்தாழ ரூ.5 ஆயிரம் கோடி செலவுகளை கட்டுப்படுத்த முடிந்தது. இனி அனைத்து அரசு துறைகளிலும் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படமாட்டாது என்று ஒரு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைகள் வேலையில்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு தலையில் இடி விழுந்ததுபோல இருக்கும். தனியார் நிறுவனங்களும் வருவாய் இல்லாமல் பெரும் தவிப்புக்கு உள்ளாகியிருக்கும் நேரத்தில், இருக்கிறவர்களையே வேலையில் தொடர்ந்து வைக்க முடியாத சூழ்நிலையில், ஆள்குறைப்பு தவிர்க்க முடியாது என்ற நிர்ப்பந்தத்தில் இருக்கும்நிலையில், அங்கும் புதிய வேலைவாய்ப்புக்கு வழியே கிடையாது.

எனவே, வேலையில்லா திண்டாட்டம் இளைஞர்களுக்கு பெரும் வேதனையளிக்கப்போகிறது. இந்தநிலையில், அரசு பல புதிய சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அரசின் வழக்கமான நடைமுறைச் செலவுகளில் 20 சதவீதம் குறைப்பு, பர்னிச்சர் வாங்குவதற்கு 50 சதவீதம் குறைப்பு, அலுவல் சார்ந்த அனைத்து மதிய உணவு, இரவு உணவு மற்றும் இதர கேளிக்கை ரத்து, புதிய கருவிகள் வாங்குவது ஓராண்டுக்கு ரத்து, அலுவல் ஆய்வு கூட்டத்தை தவிர 20 பேர்களுக்கு மேல் கூடும் அலுவல் ரீதியான விழாக்கள், கூட்டங்களுக்கு தடை என்பது போன்ற நடவடிக்கைகளோடு அரசு ஊழியர்களின் தினப்படி 25 சதவீதம் குறைப்பு, விமானங்களில் பயணம் செய்ய தடை, வெளிநாட்டு பயணங்களுக்கு தடை என்பதுபோன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமல்லாமல், அரசு செலவில் பரிசுப்பொருட்கள், பூங்கொத்து, சால்வை, நினைவுப்பரிசு, மலர்மாலைகள் கொடுப்பது எல்லாம் தடை செய்யப்பட்டுள்ளது. இதில் சில தடைகள் இப்போது மட்டுமல்ல, நிரந்தரமாக கட்டுப்படுத்தப்பட்டால் அரசுக்கு எப்போதும் செலவு மிச்சமாகும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரை அரசுக்கு மிச்சம் ஏற்படும். அரசு விளம்பரங்கள் கொடுப்பதற்கான செலவு 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்கள், அறிவிப்புகள், விளக்கங்கள் எல்லாம் மக்களுக்கு சென்றடைவதில்தான் அதன் வெற்றியே இருக்கிறது. அந்த வகையில், மூலை முடுக்கில் உள்ள ஏழை, எளிய, பாமர மக்களையும் சென்றடைய வேண்டுமென்றால், விளம்பரங்கள் மிக முக்கியம். அதுவும் இந்த கொரோனா நேரத்தில் மக்களுக்கு பல விழிப்புணர்வு செய்திகள் சென்றடைய வேண்டும். எனவே, இதுபோன்ற செலவு குறைப்புகளை தளர்த்த முடியுமா? என்று அரசு பரிசீலிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்