வீடு இருந்தால் தான் ஓடு மாற்ற முடியும்!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. ஏப்ரல் 1-ந் தேதி 234 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,மே 31-ந்தேதி அது 22,333 ஆக அதிகரித்திருக்கிறது.

Update: 2020-05-31 22:59 GMT
மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள நாடு முழுவதிலும் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட13 மண்டலங்களில், தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய3 மண்டலங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவில் உள்ள 5 நகரங்களில் தான் 50 சதவீத பாதிப்புகள் இருக்கின்றன. அதில் சென்னையும் இடம் பெற்றுள்ளது. இந்தநிலையில், 4-வது ஊரடங்கு முடியும் நேரத்தில், மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு ஊரடங்கை ஜூன் 30-ந்தேதி வரை நீட்டித்து பல தளர்வுகளை அறிவித்துள்ளது. வழிபாட்டு தலங்கள் வருகிற 8-ந்தேதி முதல் திறக்கப்படும். மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்குள்ளும் பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு தடையில்லை. இ-பாஸ் தேவையில்லை என்று அறிவித்திருந்தது.

ஆனால், தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை 30-ந்தேதி வரை, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்துள்ளது. அதில், வழிபாட்டு தலங்களில், பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் மறு உத்தரவு வரும் வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல, வணிக வளாகங்கள்,பள்ளி-கல்லூரிகள், சர்வதேச விமான போக்குவரத்து, மெட்ரோ ரெயில், மின்சார ரெயில், திரையரங்குகள், அனைத்து விழாக்கள், கூட்டங்கள், ஊர்வலங்கள், மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டு, இதுபோன்ற அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் தொற்றின் தன்மைக்கு ஏற்றவாறு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டை 8 மண்டலங்களாக பிரித்து காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மண்டலம் மற்றும் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய மண்டலங்களை தவிர அனைத்து மண்டலங்களிலும் இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. மத்திய அரசாங்க உத்தரவில் இ-பாஸ் தேவையில்லை என்று கூறப்பட்டிருந்தாலும், தமிழக அரசின் உத்தரவில் மண்டலங்களுக்குள் இ-பாஸ் தேவையில்லை, ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து வரவும், மண்டலங்களுக்கு இடையே சென்று வரவும் இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆட்டோ, ரிக்‌ஷா 2 பயணிகளுடன் இயங்கவும், சென்னையில் சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள்ஏ.சி. இல்லாமல் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 சதவீத ஊழியர்களுடனும், மற்ற மாவட்டங்களில் 100 சதவீதஊழியர்களுடனும், வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள், நகை , ஜவுளி கடைகள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படவும், 8-ந்தேதி முதல் ஓட்டல்களில் உட்கார்ந்து சாப்பிடவும் அனுமதி என்பது போன்ற பல தளர்வுகள் பொதுமக்களுக்கு நிச்சயமாக நன்மையளிக்கும். பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பினமாக ரூ.2,500 மதிப்பூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அவர்களின் தன்னலமற்ற சேவைக்கு ஒரு அங்கீகாரமாக எடுத்துக்கொள்ளலாம்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த கட்டுப்பாடுகள், தளர்வுகளை எல்லாம் அறிவித்துவிட்டு, அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் இந்த நோய் பரவலை தடுக்க இயலாது என்று கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. பேரறிஞர் அண்ணா கூறியதுபோல, வீடு இருந்தால் தான் ஓடு மாற்ற முடியும் என்பதை தமிழக மக்கள் ஒவ்வொருவரும் மனதில் வைத்துக்கொண்டு, வீட்டிலும், பணிபுரியும் இடத்திலும் அடிக்கடி சோப்புபோட்டு கை கழுவுவதையும், முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் தவறாமல் பின்பற்றினால் ஒழிய கொரோனா பரவலை தடுக்கவே முடியாது.

மேலும் செய்திகள்