சாத்தான்குளம் சம்பவத்திற்கு நீதி

கேட்டாலே நெஞ்சம் பதறும் அளவுக்கு ஒரு கொடூரச் சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடந்துள்ளது.

Update: 2020-06-24 19:28 GMT


கேட்டாலே நெஞ்சம் பதறும் அளவுக்கு ஒரு கொடூரச் சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் கடையை மூடச்சொல்ல வேண்டியது போலீசாரின் கடமை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், அவ்வாறு அமல்படுத்தும்போது, சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க எத்தனையோ வழிகள் இருந்தும், சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு அத்துமீறி போலீஸ் நிலையத்திற்கு கொண்டுபோய் தாக்கியதால் இரு உயிர்கள் பறிபோய் இருக்கின்றன. அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் கடையை திறந்துவைத்திருந்தார்கள் என்ற ஒரே விதிமீறலுக்கு நடவடிக்கை எடுக்க எத்தனையோ வழிமுறைகள் இருந்தும் போலீசார் தாக்கி தந்தை, மகன் இரு உயிர்களும் ஒரே நாளில் பறிபோய் இருக்கிறது என்பது அந்தப் பகுதி மக்களின் பெரிய ஆதங்கமாக இருக்கிறது.

சாத்தான்குளத்தில் மரக்கடை நடத்தி வந்தவர், ஜெயராஜ். அதே பகுதியில், மொபைல் போன் கடை வைத்திருந்தவர் 31 வயதுள்ள அவரது மகன் பென்னிக்ஸ். அவர்கள் இருவரும் மொபைல் போன் கடையை திறந்துவைத்திருந்தார்கள் என்று கூறி, ரோந்து வந்த போலீசார் அவர்களிடம் வாக்குவாதம் நடத்தியிருக்கிறார்கள். அப்போது, ஜெயராஜை போலீசார் விசாரணைக்காக போலீஸ்நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். தன் தந்தையை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்ததும், பென்னிக்ஸ் காவல்நிலையத்திற்கு போய், ஏன் என் தந்தையை அழைத்துக்கொண்டு வந்தீர்கள்? என்று கேட்க, அங்கே பெரிய வாக்குவாதம் நடந்திருக்கிறது. அந்தநேரத்தில், அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. பின்னர், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இரவு இருவருமே மரணம் அடைந்திருக்கிறார்கள் என்பது தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவின் குற்றச்சாட்டு.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் முன், அவர்கள் இருவரும் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்களா? அப்படி ஆஜர்படுத்தப்பட்டால் அவர்கள் உடலில் உள்ள காயங்கள் பதிவு செய்யப்பட்டதா? சிறையில் அடைக்கப்படும் முன் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை வேண்டும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள். சிறையில் ஆஜர்படுத்தும்போது, சிறை அதிகாரிகளும் அவர்கள் உடல்நிலையை கவனித்திருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் தாக்கப்பட்டதை யாருமே கண்டுகொள்ளவில்லை என்றால், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டதா? அல்லது பின்பற்றப்படவில்லையா? என்ற சந்தேகமும் மக்களிடையே எழுகிறது.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து சாத்தான்குளம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் உள்ள 2 சப்-இன்ஸ்பெக்டர்களை தற்காலிக பணிநீக்கம் செய்திருக்கிறார். இந்த போலீஸ்நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் உள்பட அனைத்து போலீஸ்காரர்களும் கூண்டோடு இடமாற்றம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். இது போதாது. சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் நடக்கும் விசாரணை முழு அளவில் நடந்து முடிந்து விரைந்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. காவல்நிலையத்தில் அடித்து, உதைத்துதான் விசாரணை நடத்த வேண்டும் என்பதில்லை. நவீன தொழில்நுட்பத்தில் எவ்வளவோ வழிமுறைகள் இருக்கும்போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி கடையை திறந்துவைத்திருந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கைது செய்வதும், மரணம் ஏற்பட வேண்டிய அளவில், காயம் ஏற்படுத்தும் அளவுக்கு அடித்து, உதைப்பதும், நிச்சயமாக ஏற்புடையதல்ல என்பதுதான் இப்போது பொதுவான கருத்தாக இருக்கிறது.

இந்த சம்பவங்களை எல்லாம் பார்க்கும்போது, போலீஸ் பயிற்சி முறையிலும், புத்தாக்க பயிற்சி முறைகளிலும், பெரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். சாத்தான் குளம் சம்பவம் சாதாரண சம்பவம் அல்ல. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்கும் வகையில், அரசு எடுக்கப்போகும் நடவடிக்கைகளில்தான் இந்த பாதிப்புக்கு ஆறுதலும் கிடைக்கும், காவல்துறை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையும் பிறக்கும்.

மேலும் செய்திகள்