தொடர்கிறது அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை
அமெரிக்கா-இந்தியா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை இன்று முதல் 3 நாட்கள் டெல்லியில் நடக்கிறது.;
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றவுடனேயே அதிரடி நடவடிக்கைகளை தொடங்கினார். ‘அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக ஆக்குவேன், அமெரிக்காதான் முதலில்’ என்ற பிரகடனங்களை முழங்கிய அவர், அனைத்து தொழில்களையும் அமெரிக்காவில் தொடங்க முயற்சிகளை எடுத்துவருகிறார். அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கெல்லாம் பரஸ்பர வரி விதித்தார். அந்தவகையில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் பரஸ்பர வரியாக 25 சதவீத வரி நிர்ணயிக்கப்பட்டது. இவ்வளவுக்கும் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள்தான் அதிகம்.
இந்த பரஸ்பர வரி மட்டுமல்லாமல் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறது, அந்த தொகையை வைத்துத்தான் ரஷியா உக்ரைனுடன் நடத்தும் போருக்காக செலவழிக்கிறது என்று சாக்குபோக்கு சொல்லி அதற்கு அபராதமாக மேலும் 25 சதவீத வரி என மொத்தம் 50 சதவீத வரியை இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ளது. அமெரிக்கா, பிறநாடுகள் மீது விதிக்கும் வரியில் அதிகபட்சம் இதுதான். இந்த வரி விதிப்பால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஆடைகள், கடல்சார் பொருட்கள், என்ஜினீயரிங் பொருட்கள், தோல் பொருட்கள் போன்றவற்றின் ஏற்றுமதி 8.9 சதவீதம் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள், ஆம்பூர், வேலூரில் இருந்து தயாராகும் தோல்பொருட்கள் ஏற்றுமதியிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வரும் இந்த பிரச்சினைக்கு வர்த்தக பேச்சுவார்த்தைதான் முற்றுப்புள்ளி வைக்கும் என்று இரு நாடுகளும் கருதுகின்றன.
ஏற்கனவே 5 சுற்று பேச்சுவார்த்தை நடந்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மார்ச் மாதத்தில் தொடங்கிய இந்த வர்த்தக பேச்சுவார்த்தை கடைசியாக அக்டோபர் மாதத்தில் நடந்தது. ஆனாலும் இதுவரை வரி குறைப்பு பற்றிய உறுதியான எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. கடந்த வாரம் ரஷிய அதிபர் புதின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் டெல்லியில் நடந்த உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். இதுவரை புதின் இந்தியாவுக்கு 10 முறை வந்திருந்தாலும், இந்த தடவை இரு நாடுகளுக்கும் பயன் அளிக்கும் வகையிலான 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த சூழ்நிலையில் அமெரிக்கா-இந்தியா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை இன்று முதல் 3 நாட்கள் டெல்லியில் நடக்கிறது. அமெரிக்க குழு, அந்நாட்டு துணை வர்த்தக பிரதிநிதி ரிக் சுவிட்சர் தலைமையிலும், இந்திய குழு வர்த்தக அமைச்சக செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலும் சந்தித்து மிக ஆழமாக விவாதிக்கிறது.
அமெரிக்க அரசியல் பதவிகளில் ரிக் சுவிட்சர் மிக உயர்ந்த இடத்தில் இருப்பதால் டெல்லியில் நடக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் அமெரிக்கா விதிக்கும் 50 சதவீத வரி பிரச்சினை விவகாரத்தில் அதிகாரப்பூர்வமான முடிவுகளை அவரால் எடுக்கமுடியாது. என்றாலும் அதற்கான வாசலை திறக்க, குறிப்பாக பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கு வழிகோல முடியும். இந்த பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்துக்காக இந்தியா தரப்பில் எடுத்து வைக்கப்படும் புள்ளி விவரங்களும், அதுபோல அமெரிக்கா தரப்பில் முன்வைக்கப்படும் விவரங்களும் இரு நாடுகளின் குழுக்களால் மிக விரிவாக விவாதிக்கப்பட்டு, இரண்டு தரப்பினரும் விரும்பத்தகுந்த ஒரு நல்ல முடிவை எடுக்க பாதையை வகுக்கப்போகிறது என்று மக்கள் கருதுகிறார்கள்.