பிரதமரை வியக்க வைத்த தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மை

விளைச்சலும் அதிகம் என்பதற்காக ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் சாகுபடிக்கு தாவினார்கள்.;

Update:2025-12-09 04:34 IST

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் விவசாயம்தான் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. விவசாயம் என்பது பயிர் சாகுபடியை மட்டும் உள்ளடக்கியது அல்ல. பயிர் சாகுபடியோடு காய்கறி, பழங்கள் தரும் செடி, மரங்களை வளர்ப்பது, தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, கோழி மற்றும் ஆடு வளர்ப்பு என பல பரிணாமங்களை கொண்டது. முன்பு நமது விவசாயிகள் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் இயற்கை முறையிலேயே சாகுபடி செய்தனர். அதனால் மண்ணும் வளமானதாக இருந்தது, மகசூலும் கொட்டியது. வீடுகளை சுற்றிலும் உரக்குழி அமைத்து அதில் மாட்டு சாணம், வீட்டில் எஞ்சும் மக்கும் கழிவுகளை போடுவதோடு மட்டுமல்லாமல், இலை, தழைகளையும் வெட்டிபோடுவார்கள். இது அனைத்தும் மக்கி பயிர்களுக்கு ஊட்டம் அளிக்கும் நல்ல உரமாக உருவெடுக்கும்.

இதைத்தான் தங்கள் வயல்களில் பயிர்களுக்கு உரமாக போடுவார்கள். பூச்சி கொல்லிக்கும் இயற்கை முறையிலான வேப்பெண்ணெயை பயிர்களின் மீது தெளிப்பார்கள். இப்படி விளைவிக்கும் பயிர்களுக்கு நல்ல சத்து இருப்பது மட்டுமல்லாமல் தனி மணமும் இருக்கும். ஆனால் காலப்போக்கில் இயற்கை வேளாண்மையை விவசாயிகள் புறந்தள்ளிவிட்டு வேலை குறைவு, விளைச்சலும் அதிகம் என்பதற்காக ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் சாகுபடிக்கு தாவினார்கள். இதுமட்டுமல்லாமல் கால்நடை வளர்ப்பையும் கைவிட்டனர். உடல் உழைப்பு குறைந்து, எல்லாமே எந்திர அரக்கனின் பிடியில் சிக்கிக்கொண்டது. இவ்வாறு விவசாயமே ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை சார்ந்துவிட்டதால் பூமியில் உள்ள மண்வளம் தன் சத்துக்களை உதிர்த்து மலடாகிவிட்டது. மண்ணின் ஈரப்பதத்திலும், வேளாண்மையின் நீடித்த நிலைத்தன்மையிலும் பாதிப்பு ஏற்பட்டது.

ரசாயன உரத்தை பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவு பொருட்களுக்கு சத்தும், சுவையும் இல்லாமல் போய்விட்டது. அதனால் விவசாயிகள் குறிப்பாக இன்றைய தலைமுறையினரின் தொலைநோக்கு பார்வை இயற்கை விவசாயத்தின் மீது விழுந்துள்ளது. நிறையபேர் மண்ணின் மாண்புகளை காக்க இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்ய தொடங்கிவிட்டார்கள். ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் பலரும் குறிப்பாக பெண்கள் நமது பாரம்பரிய இயற்கை வேளாண்மைக்கு மாறிவருகிறார்கள். மரங்கள், செடி, கொடிகளையும், கால்நடைகளையும் சோலை போல பூந்தோட்டம் அமைத்து ஒரே இடத்தில் வளர்ப்பதால் இயற்கை சூழலில் பல்லுயிர்த்தன்மை உருவாகும். தமிழ்நாட்டில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால் இயற்கை வேளாண்மை வளர்ச்சியை எட்டி, செழிப்பு அடைந்து வருகிறது.

கடந்த மாதம் கோவையில் நடந்த தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, இயற்கை விவசாயம் நமது பாரம்பரியத்தில் பிறந்தது. அதன் தலைமை இடம் தமிழ்நாடு என்று கூறினார். மேலும் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கோவையில் நடந்த மாநாட்டில் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளோடு கலந்துரையாடும்போது, அவர்களின் அபார முயற்சிகள் தன்னை வியப்படைய வைத்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆக தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மைக்கு விடியல் தொடங்கிவிட்டது. இயற்கை வேளாண்மைக்கு தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லிகளை விவசாயிகளே தயாரிக்கும் சூழ்நிலை இப்போது இல்லை. எனவே அவர்களே அதை தயாரித்து, தன்னிறைவை எட்டும்வரை வேளாண்மைத்துறையே உரம், பூச்சிக்கொல்லிகளை இயற்கை முறையில் உற்பத்தி செய்து மிக குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கவேண்டும். அதேபோல மலடாகிப்போன மண் வளத்தை ஊட்டச்சத்து கொடுத்து உயிர்ச்சத்து மிகுந்ததாக ஆக்கும் முயற்சியை அரசு மட்டுமல்லாமல், விவசாயிகளும் தொடங்கவேண்டும். 

Tags:    

மேலும் செய்திகள்