தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருக்கிறது.;
1968-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தில் உள்ள ஒரு பாடலில், ‘தென்கோடி தூத்துக்குடி திருத்தும் துறைமுகத்தால் பொன்கோடி குவிக்கும் எங்கள் தாயகமே செல்வ பூந்தோட்டம் ஆகும் எங்கள் தமிழகமே’ என்று மறைந்த கவிஞர் கண்ணதாசன் எழுதிய கவிதை வரிகள் இன்று நனவாகி வருகிறது. சமீபத்தில் மதுரையில் தமிழ்நாடு வளர்கிறது என்ற தலைப்பில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிறிய அளவிலான சிப் (மின்னணு சாதனங்களின் இயக்கத்துக்கு தேவையான முக்கிய பொருள்) முதல் ‘ஷிப்’ (கப்பல்) வரை அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு தன்னிறைவு பெற்று தலை நிமிர்ந்து நிற்கிறது” என்று மிகவும் பெருமிதத்தோடு பேசினார். மேலும், “ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டின் வாகனத்துறையில் எத்தகைய வளர்ச்சியை ஏற்படுத்தியதோ, அதுபோல இந்த நிறுவனத்தின் கப்பல் கட்டுமான நிறுவனமும் உறுதியான வளர்ச்சியை ஏற்படுத்தும்” என்று கூறினார்.
அதுமட்டுமல்லாமல், அந்த நிறுவனம் தன்னுடைய கப்பல் கட்டும் திட்டத்துக்காக புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டிருக்கிறது. கப்பல் கட்டுமானத்தில் தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்துகின்ற இந்த முதலீடு மற்ற நிறுவனங்களையும் ஊக்குவிப்பதோடு, உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனங்களையும் ஈர்க்கக்கூடியதாக இருக்கும் என்று தொழில் வளர்ச்சிக்கான நல்ல அறிவிப்பையும் வெளியிட்டார். தென் கொரியா நாட்டை சேர்ந்த ஹூண்டாய், கப்பல் கட்டும் தொழிலில் உலகிலேயே மிகப்பெரிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் தமிழ்நாட்டை தன் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தேர்ந்தெடுத்து தன்னுடைய பல தொழிற்சாலைகளை நிறுவி வருகிறது. அதில் முக்கிய தேர்வாக, தான் தொடங்கப்போகும் கப்பல் கட்டும் தளத்தை முத்து நகரான தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதனால் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதுதவிர கப்பல் கட்டும் தளத்தால் உருவாகப்போகும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் அதை சார்ந்த துணை தொழில்களும் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை அள்ளி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்படும் ஒரு நேரடி வேலைவாய்ப்பு, மறைமுகமாக 6 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும். அந்தவகையில், வேலைவாய்ப்புகளின் கேந்திரமாக துத்துக்குடியில் தொடங்கப்போகும் இந்த கப்பல் கட்டும் தளம் திகழப்போகிறது. இதுமட்டுமல்லாமல் தூத்துக்குடியில் 2 பசுமைவெளி வர்த்தக கப்பல் தளங்கள் வர இருக்கின்றன.
இந்த கப்பல் கட்டும் தளத்தை இந்தியாவில் தொடங்க ஹூண்டாய் நிறுவனம் முடிவெடுத்தபோது, மத்திய அரசாங்கம் தமிழ்நாடு, குஜராத், ஆந்திரா உள்பட 5 மாநிலங்களை அடையாளம் காட்டியது. அதில் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில்தான் தென் கொரியாவில் உள்ள கப்பல் கட்டும் தொழிலின் தலைநகரான உல்சான் போல, இந்த தொழிலின் இயக்கத்துக்கு தேவையான தட்பவெப்ப நிலை, மழை அளவு இருக்கிறது. மேலும் இந்த தொழில் வளர்ச்சிக்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் தூத்துக்குடியிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் இருக்கிறது என்று ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் துணை தலைவர் மிகப்பெருமையாக கப்பல் கட்டும் தொழிலை ஹூண்டாயுடன் இணைந்து தமிழ்நாட்டில் தயாரிப்போம் என்று கூறியதுபோல, வரும் ஆண்டுகளில் தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்தால் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கு கப்பல் கட்டுகின்ற பெருமையான நிலை வரப்போகிறது.