போராட்டங்கள் ஜனநாயக உரிமை; ஆனால் பொது இடங்களில் அல்ல!

பொது இடங்களில் போராட்டங்கள் நடத்துவதோ, சாலை மறியல் செய்வதோ கூடாது என்று பரபரப்பான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது.

Update: 2020-10-11 23:30 GMT

பொதுமக்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை, எதிர்ப்புகளை தெரிவிக்க போராட்டங்கள் நடத்தலாம். ஆனால், பொது இடங்களில் நடத்துவதோ, சாலை மறியல் செய்வதோ கூடாது என்று பரபரப்பான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சம் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு அங்கு இருக்க முடியாமல் இந்தியாவுக்கு தஞ்சம் கேட்டுவந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்வதுதான். மற்ற மதத்தினரை எல்லாம் சேர்க்கும்போது முஸ்லிம்களை மட்டும் ஏன் சேர்க்கவில்லை? என்பதும், முஸ்லிம்களில் ஒரு சில பிரிவினருக்கும் இந்த நாடுகளில் துன்புறுத்தல் இருக்கத்தானே செய்கிறது என்பதும் ஒரு வாதமாக இருந்தது.

இந்த சட்டத்தை எதிர்த்து, டெல்லியில் கடந்த டிசம்பர் 14-ந்தேதி முதல் மார்ச் 24-ந்தேதி வரை ஷாகீன் பாக் போராட்டம் நடந்தது. இது பெண்கள் போராட்டமாக இருந்தது. இதனால், தெற்கு டெல்லி, நொய்டா பகுதிகள் முழுமையாக துண்டிக்கப்பட்டது, போக்குவரத்து முடங்கியது. ஆனால், தமிழ்நாட்டில் நடந்த போராட்டத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தெருக்களுக்குள் தான் நடத்தினர். சாலைகளில் நடத்தவில்லை. இந்த போராட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் கடந்த வாரம் புதன்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. போராட்டம் நடத்துவதற்கு உள்ள ஜனநாயக உரிமையையும், மக்களுக்கு சாலை மறியல் போன்ற போராட்டங்களால் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்ற தேவையையும் தராசின் இருதட்டுகளில் வைத்து இந்த தீர்ப்பை நீதிபதிகள் வழங்கியுள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பொது இடங்கள், சாலைகளில் மறியல் நடத்துவது என்பது ஒரு போராட்ட நடைமுறையாக இருந்தது. இப்போது ஜனநாயக நாட்டில் அதே போராட்டங்கள் நடத்துவது என்பது சரியல்ல. போராட்டங்களை அதற்காக நிர்ணயிக்கப்பட்ட இடங்களில்தான் நடத்தவேண்டும். சாலைகளில் மறியல் செய்வது பொதுமக்களின் பயணத்துக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். பொது இடங்களை ஆக்கிரமித்து போராட்டங்கள் நடத்துவது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும்.

போராட்டம் நடத்துவதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது. இந்த உரிமையை அரசியல் சட்டமே வழங்கியுள்ளது. ஆனால், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். பொது இடங்கள், சாலைகளை போராட்டக் கூடாரமாக ஆக்குவதை அனுமதிக்க முடியாது. சாலைகளை யார் ஆக்கிரமித்தாலும் அரசு நிர்வாகங்கள் அவர்களை உடனடியாக அகற்றவேண்டும். இதற்காக நீதிமன்றங்களின் உத்தரவுக்காக காத்திருக்க வேண்டியதில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. ஆக இந்த தீர்ப்பில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள், ஊர்வலங்கள் நடத்துவது தவறு என்று சொல்லவில்லை. ஜனநாயக நாட்டில் போராட்டம் என்பது மக்களின் குரலாகும். பல இடங்களில் போராட்டங்கள் நடத்த முறையான அனுமதி கொடுக்கப்படாததால்தான் தடையை மீறி போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. போராட்டங்களுக்கு தடை என்பது ஜனநாயக உரிமை என்ற வாயில் பிளாஸ்திரியை போட்டு ஒட்டுவது போலாகும். எனவே, மக்களின் குறைகளை, வேண்டுகோள்களை அரசின் கவனத்துக்கு கொண்டுவருவதற்கு, அவர்களுக்குள்ள உரிமையை வெளிப்படுத்தும் வகையில், அதற்கான அனுமதியை காவல் துறையும், சம்மந்தப்பட்ட துறைகளும் வழங்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின், இந்த தீர்ப்பை மாநில அரசுகளும், காவல்துறையும் மனதில் வைத்துக்கொண்டு, இனி எதிர்காலங்களில் எல்லா ஊர்களிலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு என்று தனி இடங்களை நிர்ணயிக்க வேண்டும். அந்த இடங்களும் போக்குவரத்துக்கோ, பொதுமக்களுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லாத இடங்களாக இருக்க வேண்டும். சுப்ரீம்கோர்ட்டு கூறியபடி, ஜனநாயகத்தில் போராட்டங்கள் நடத்துவதற்கும் உரிமை உண்டு. அதே நேரத்தில் அந்த போராட்டங்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற பொறுப்பும் போராட்டம் நடத்துபவர்களுக்கும் இருக்கிறது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்