பிரதமர் என்ன சொல்லப்போகிறாரோ?

பிரதமர் நரேந்திரமோடி இன்று அனைத்து முதல்-மந்திரிகளுடனும் காணொலி காட்சி மூலம் விரிவான ஆலோசனை நடத்துகிறார்.

Update: 2021-03-16 21:41 GMT
நாடு முழுவதும் குறிப்பாக மராட்டியம், பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு மாநிலங்களில் கொரோனா தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்து கொண்டிருக்கும் நிலையையும், தடுப்பூசி போடப்படும் பணிகளின் வேகம் குறித்தும் இந்த கூட்டத்தில் பேச இருக்கிறார். கடந்த ஜனவரி 16-ந்தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கப் பட்டபிறகு, இப்போதுதான் முதல்முறையாக பிரதமர், மாநில முதல்-மந்திரிகளுடன் ஆய்வு நடத்துகிறார். இந்த ஆய்வின்போது பிரதமர், மாநிலங்களில் முககவசம் அணிதல், சமூகஇடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தக்கூடும் என ஒரு அதிகாரி தெரிவித்தார்.

நேற்று இந்தியா முழுவதும் 24 ஆயிரத்து 492 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட சூழ்நிலை, 2-வது அலையை உருவாக்கிவிடுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மராட்டியத்தில் கொரோனா பரவலையொட்டி, மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. மாநிலம் முழுவதும் ஊரடங்கை நடைமுறைப்படுத்த உத்தரவிடப்படாவிட்டாலும், கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப் 
பட்டுள்ளன. அனைத்து சமூக, கலாசார, அரசியல், மதக்கூட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கவேண்டும். முககவசம் அணியாமல் யாரையும் உள்ளே நுழைய அனுமதிக்கக்கூடாது. திருமணங்களில் 50 பேர்தான் கலந்துகொள்ளவேண்டும். இறுதிச்சடங்குகளில் 20 பேர்தான் பங்கேற்கவேண்டும் என்பது போன்ற பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், கொரோனா குறித்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள அலட்சிய உணர்வுதான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்று தெரிவித்திருக் கிறார். தமிழ்நாட்டில் இது நிதர்சனமான உண்மை ஆகும். மக்களுக்கு கொரோனா பற்றிய பயமே இல்லாமல் போய்விட்டது. முககவசம் அணிவதையோ, சமூகஇடை வெளியை பின்பற்றுவதையோ மறந்துவிட்டனர். 51 நாட்களுக்கு பிறகு, கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 500-ஐ நெருங்குகிறது. 67 நாட்களுக்கு பின்னர், 867 பேருக்கு புதிதாக தொற்று ஏற்படும் வகையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை யில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் ஒரு ஆசிரியை மற்றும் 56 மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையிலும் ஒரு கல்லூரி முதல்வருக்கும், மற்றொரு பேராசிரியருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கல்லூரியில் வகுப்புகள் நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. இப்படி கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையாமல் உயர்ந்துகொண்டே போகிறது. நேற்று தலைமைச்செயலாளர் மாவட்ட கலெக்டர்களுடன் நடத்திய காணொலி ஆலோசனைக்கூட்டத்தில் முககவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்பட பல்வேறு கடுமையான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொதுவாக மக்களுக்கு பழைய சம்பவங்கள் எளிதில் மறந்துவிடுகிறது. கடந்த ஆண்டு ஊரடங்கினால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டது?, பொருளாதாரம் முடங்கியது, வாழ்வாதாரம் சீர்குலைந்தது, வேலையிழப்புகள் ஏற்பட்டது. இவையெல்லாவற்றுக்கும் காரணம் கொரோனா என்பதை மறந்து, இப்போது அதைபற்றிய பயமே இல்லாமல் அலட்சியமாக இருக்கிறார்கள் என்று சமூகஆர்வலர்கள் கருதுகிறார்கள். இதேபோல், கொரோனா பாதிப்பு சற்றுகுறைந்து, தடுப்பூசி வந்த உடனேயே எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இப்போது தேர்தல்நேரம் ஆரம்பித்துவிட்டது. மக்கள் அதிகம்கூடும் நிலையில், கொரோனா பரவலுக்கு வாய்ப்புள்ளது. எனவே அரசியல் கட்சிகளும் தங்கள் தொண்டர்கள் முககவசம் அணியாமல் வரக்கூடாது, சமூகஇடைவெளியை பின்பற்றிதான் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி கூறவேண்டும். கடந்த ஆண்டு அமலில் இருந்த ஊரடங்கை பொதுமக்கள் மறந்துவிடக்கூடாது. மீண்டும் ஊரடங்கு வராத நிலையை ஏற்படுத்தவேண்டிய நடவடிக்கைகளுக்கு இன்று பிரதமர், மாநில முதல்-மந்திரி களுடன் நடத்தும் கூட்டத்தில் தெரிவிக்கப்போகும் அறிவுரைகள், உத்தரவுகள் நிச்சயம் வழிகாட்டும்.

மேலும் செய்திகள்