எத்தனை மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் உள்ளது?

தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களாக கொரோனா பாதிப்பால் பள்ளிக்கூடங்கள் எல்லாம் மூடப்பட்டு கிடக்கின்றன. இந்தநிலையில் பல பள்ளிக்கூடங்களில் ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடங்களை கற்பித்து வருகிறார்கள்.

Update: 2021-06-29 21:28 GMT
ஆனால் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்பிப்பது எல்லா இடங்களிலும் வெற்றிகரமாக நடைபெறவில்லை. இதுபற்றி சென்னையிலுள்ள மேல்நிலைப்பள்ளிக்கூட ஆசிரியையிடம் கேட்டபோது, ‘எங்கள் பள்ளிக்கூடத்தில் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்பித்து வருகிறோம். ஆனால் வறுமைகோட்டுக்குக்கீழே உள்ள பல குடும்பங்களைச்சேர்ந்த மாணவ-மாணவிகளிடமும், அவர்களின் பெற்றோரிடமும், குடும்பத்தினரிடமும் ‘ஸ்மார்ட்போன்’ வசதியில்லை. கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடத்திட்டங்கள் சிறப்பாக இருக்கிறது. கற்பித்தல் முறையும் மிக நன்றாக உள்ளது’ என்றார்.

இது நகர்ப்புற ஆசிரியையின் கருத்து என்றால், கிராமப்புற ஆசிரியைகளிடம் கேட்டபோது, ‘கிராமங்களில் ஆன்லைன் வகுப்புகளே நடத்தப்படுவதில்லை. ஏனெனில் கிராமப்புற மாணவர்களின் குடும்பத்தினரிடம் ஸ்மார்ட்போன் வசதி 
நிச்சயமாக இல்லை. நாங்கள் அரசு தந்த பாடப்புத்தகங்களை மட்டும் வழங்குகிறோம். கல்வித்தொலைக்காட்சியை பார்த்து படித்துகொள்ளுங்கள் என்று கூறுகிறோம். ஆனால் எத்தனை மாணவர்கள் அவ்வாறு பார்க்கிறார்கள்? என்பது சந்தேகத்துக்குரியது. மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியின் இலவச டி.வி. வழங்கும் திட்டத்தால் எல்லா வீடுகளிலும் டி.வி. இருக்கிறது. ஆனால் கல்வி தொலைக்காட்சியை மாணவர்கள் பார்க்கிறார்களா? அங்கு கற்பித்துதரும் பாடங்களை புரிந்துகொள்கிறார்களா?, அதை பின்பற்றி தங்களை தயார்ப்படுத்தி கொள்கிறார்களா? என்று அவர்களிடம் கேட்டறிந்து கொள்ளும் வசதியும் ஆசிரியர்களுக்கு இல்லை. மேலும் 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள் காலை 5.30 மணி முதல் 8 மணி வரையிலும், இரவு 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும் ஒளிபரப்பாகிறது. இரவு 10.30 மணி வரை கல்வி தொலைக்காட்சியை பார்த்து பாடம் படிக்கும் மாணவர்கள் அதன்பிறகு சாப்பிட்டு படுத்துவிட்டு, காலை 5.30 மணிக்கு மீண்டும் கல்வி தொலைக்காட்சியை பார்ப்பார்களா? என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது’ என்றனர்.

அரசின் திட்டம் நல்லதிட்டம். முதல் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. இதுமட்டுமில்லாமல், ஒவ்வொருநாள் நிகழ்ச்சியும் யூ-டியூப்பில் பதிவேற்றமும் செய்யப்படுகிறது. ஆனால் எல்லா டி.வி.யிலும் யூ-டியூப் பார்க்கும் வசதி இல்லை. இந்தநிலையில் மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால் மட்டுமே எளிதாக பார்க்கமுடியும். இத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் கல்வித்துறை இப்போது ஒருநல்ல முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு மாணவர் வீட்டிலும் டி.வி. இருக்கிறதா?, அதில் கல்வித்தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்பாகிறதா?, மாணவர்களிடம் ஸ்மார்ட்போன்வசதி இருக்கிறதா? அல்லது அவர்களுடைய வீட்டிலுள்ள சகோதர, சகோதரிகள், உறவினர்களிடம் இணையதளவசதியுடன் கூடிய ‘லேப்டாப்’ இருக்கிறதா?, இந்த வசதிகள் எதுவுமில்லாத மாணவர்கள் எத்தனைபேர்? என்று மாணவர்களிடம் கேட்டு, ஒவ்வொரு பள்ளிக்கூடத்தின் சார்பில் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. இது நல்லமுயற்சி. ஆனால் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் முதல் கல்வித்தொலைக்காட்சி ஒளிபரப்ப தொடங்கியதிலிருந்து, பல பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியதிலிருந்து இப்போதுவரை இந்த பட்டியல் தயாரிக்கப்படவில்லை என்பது குறையாக இருந்தாலும், இப்போதாவது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே! என்பதை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

பொதுவான ஆசிரியர்களின் கருத்துகளை பார்க்கும்போது, ஆன்லைன் மூலம் கல்வியும், கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வியும் மிக சிறந்ததுதான். ஆனால் மாணவர்கள் கற்றல்திறனை புரிந்துக்கொள்வதற்கும், அவர்கள் படிக்கிறார்களா? என்பதை ஆசிரியர்கள் அறிந்துகொள்வதற்கும் நிச்சயமாக பள்ளிக்கூடங்களை திறந்தால் மட்டுமே முடியும். எனவே பள்ளிக்கூடங்களை எவ்வளவு விரைவில் திறக்கமுடியுமோ? அதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்கி மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு வந்து கல்விகற்கும் நிலையை ஏற்படுத்தினால்தான் நல்லது. ஒருபக்கம் ஆன்லைன், கல்வித்தொலைக்காட்சி என எல்லாமே இருந்தாலும், அடுத்தபக்கம் பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்த சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபடவேண்டும் என்பதே ஆசிரியர்களின், பெரும்பாலான மாணவர்கள், பெற்றோரின் வேண்டுகோளாக இருக்கிறது.

மேலும் செய்திகள்