தேசத்துரோக சட்டம் இப்போது தேவைதானா ?

“பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்பது தமிழர்களின் வாழ்க்கை நெறி. அதனால்தான் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் முதல் நாளாம் போகி பண்டிகையன்று, தேவையற்ற பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவது தமிழர்களின் மரபு.

Update: 2021-07-18 19:02 GMT
“பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்பது தமிழர்களின் வாழ்க்கை நெறி. அதனால்தான் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் முதல் நாளாம் போகி பண்டிகையன்று, தேவையற்ற பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவது தமிழர்களின் மரபு. அதைப்போலத்தான், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி இப்போது, தேவையற்ற பழைய சட்டமான தேசத்துரோக சட்டம் இன்னும் வேண்டுமா? என்ற ஒரு கேள்வி கணையை மத்திய அரசாங்கத்தின் மீது தொடுத்திருக்கிறார்.

இந்திய தண்டனை சட்டத்தின் 124 (ஏ) பிரிவு, 1870-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்டது. மகாத்மா காந்தி, பாலகங்காதர திலகர் போன்றவர்களின் சுதந்திர போராட்டத்தை நசுக்குவதற்காக அது பயன்படுத்தப்பட்டது. இந்தச்சட்டம் தற்போது, பேச்சுரிமை, கருத்துரிமையை நசுக்கும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. இதை ரத்து செய்யவேண்டும் என்று கூறி, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி.ஒம்பத்கரே என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்தச்சட்டம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்பும் தேவையா?, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சுதந்திர போராட்டத்தை நசுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட இந்தச்சட்டம் இப்போது தவறாக பயன்படுத்தப்படுகிறது. இது, ஒரு தச்சர் கையில் உள்ள ரம்பம் போன்றது. அழகான மரச்சாமான்களை தயாரிக்க அவர் கையில் அது கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் ஒரு மரத்தை வெட்டுவதற்கு பதிலாக, காட்டையே அழிப்பதற்கு பயன்படுத்தினால் எவ்வளவு பேரழிவு ஏற்படுமோ?, அந்த வகையில்தான் இந்தச் சட்டத்தின் பயன்பாடும் இருக்கிறது.

இந்திய தொழில்நுட்பச் சட்டத்தின் 66 (ஏ) பிரிவு எப்படி அரசை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்களை நசுக்க பயன்படுத்தப்படுகிறது என்று 2015-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததோ, அதுபோலத்தான் இந்தச்சட்டமும் அரசுக்கு எதிராக குரல் எழுப்புபவர்களை நசுக்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்தச்சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதைப் பார்த்தால், இதில் தண்டனை விகிதம் மிகமிக குறைவாக இருக்கிறது. ஒரு குக்கிராமத்திலுள்ள போலீஸ் அதிகாரிகூட யார் மீதும் தேசத்துரோக வழக்கை எதற்காகவும் பதிவு செய்துவிட முடியும். மக்கள் அச்சத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள். இன்னும் இந்தச்சட்டம் தேவையா? என்று நீதிபதிகள் கேட்டிருப்பது அரசாங்கத்திற்கு ஒரு கடுமையான செய்தியை தெரிவித்திருப்பதுபோல தெரிகிறது.

ஜனநாயகத்தில் ஒருவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை அவர் நிரபராதிதான். அந்த நிலையில், தேசத்துரோக வழக்கு என்று போடுவது எப்படி நியாயமான ஒன்றாகும்?. பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்றவுடன் தேவையற்ற ஏராளமான பழைய சட்டங்களை ரத்து செய்வதில் மிகத்தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதுவரையில், 1500-க்கும் மேற்பட்ட பழைய சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்களைப்போல, தேசத்துரோக சட்டமும் தேவையற்ற ஒன்றாகும். நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேவையான மற்ற பல சட்டங்கள் இருக்கிறது. அப்படி இருக்க ஆங்கிலேயர் கொண்டுவந்த இந்த சட்டம் எதற்கு?.

கூடங்குளம் அணுமின் நிலையம் தேவையற்ற ஒன்று என்று போராட்டம் நடத்திய உதயகுமார், அவர் மனைவி மற்றும் வயதான மூதாட்டிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டு இன்னும் நிலுவையில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துகள் மிகமிக வரவேற்கத்தக்கது. மத்திய அரசாங்கமே சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி காட்டிய வழியை பின்பற்றி இந்த தேசத்துரோக சட்டப்பிரிவை நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் வழக்கு தொடர்ந்தவர்களின் கோரிக்கையாக இருக்கிறது, வழக்கு தொடராதவர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

மேலும் செய்திகள்