இயல்பு வாழ்க்கை திரும்புகிறது; எச்சரிக்கை தேவை!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

Update: 2021-08-22 20:44 GMT
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அன்று தொடங்கி நேற்று வரை, முதலில் முழு ஊரடங்கினாலும், பிறகு கொஞ்சம் கொஞ்சம் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டாலும், மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். உற்பத்தி பாதித்தது, தொழிற்சாலைகள் மூடப்பட்டன, வணிகம் வீழ்ச்சி அடைந்தது. மக்களுக்கு வேலையிழப்பு, வருமானம் சரிவு என்று பல துயரங்களை அனுபவிக்க வேண்டியது இருந்தது. தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், முதலில் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீள முடியவில்லை.

இந்தநிலையில், இன்று முதல் அரசு அறிவித்துள்ள தளர்வுகள், இயல்பு நிலைக்கு தமிழகம் திரும்புவதற்கு வழிவகுத்துவிட்டது. 9, 10, 11, 12-ம் வகுப்புகளில் படிக்கும் ஏறத்தாழ 37 லட்சம் மாணவர்கள் செப்டம்பர் 1-ந்தேதி முதல் சுழற்சி முறையில் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல இருக்கிறார்கள். மதிய உணவும் வழங்கப்பட இருக்கிறது. இந்த வகுப்புகள் செயல்படுவதை கவனித்து, 15-ந்தேதிக்கு பிறகு மழலையர் வகுப்புகள் மற்றும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை திறக்க அரசு ஆலோசனை செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளும் சுழற்சி முறையில் இதேபோல செப்டம்பர் 1-ந்தேதி முதல் திறக்கப்பட இருக்கிறது. சினிமா தியேட்டர்கள் இன்று முதல் 50 சதவீத ரசிகர்களோடு இயக்கப்படுகிறது. கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை திறந்துவைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இப்படி கிட்டத்தட்ட எல்லா செயல்பாடுகளும் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் இன்னும் குறையவில்லையே, இவ்வளவு தளர்வுகள் தேவையா?, இது கொரோனா பரவலை மேலும் அதிகரிக்க வழிவகுத்து விடாதா? என்றும் விமர்சனங்கள் வருகின்றன. ஆனால், “அலை என்று ஓய்வது, கடலில் எப்போது இறங்குவது” என்ற பழமொழிக்கு ஏற்ப, கொரோனா.. கொரோனா.. என்று நினைத்துக் கொண்டே இருந்தால், மக்களின் வாழ்வாதாரமும், நாட்டின் பொருளாதாரமும் மீண்டு எழமுடியாத நிலைக்கு போய்விடும். ஆனால், அதே நேரத்தில், இதுவரை இருந்த எச்சரிக்கை நடவடிக்கைகளைவிட இனி பல மடங்கு எச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை.

கொரோனா பாதிப்பை தடுக்கும் ஆயுதங்களான, முககவசம் அணிதலும், தனி மனித இடைவெளியும், எங்கும் எந்த நேரத்திலும் பின்பற்றப்படவேண்டும் என்ற உத்தரவு மக்களால் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் 35 சதவீதம் பேர்தான் முழுமையாக முககவசம் அணிகிறார்கள் என்பதை நினைவில் கொண்டு, அரசும் யாரும் முககவசம் அணியாமல், வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது, கடைகள் என்றாலும் சரி, சாலைகளில் நடக்கும்போதும் சரி, பஸ்-ரெயிலில் பயணம் செய்யும்போதும் சரி, அலுவலகங்களிலும் சரி, எல்லாவற்றுக்கும் மேலாக கல்லூரிகள் உள்பட பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் 37 லட்சம் மாணவர்களும் சரி, ஆசிரியர்களும் சரி, யாரும் முககவசம் அணியாமல் இல்லை, 100-க்கு நூறு சதவீதம் முககவசம் அணிகிறார்கள் என்ற நிலையை உருவாக்குவது, அரசுத் துறைகளின் கையில்தான் இருக்கிறது.

பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு முககவசம் வழங்குவதையும், சானிடைசர் வழங்குவதையும், நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்குவதையும் பள்ளிக்கூட கல்வித்துறை, மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை உறுதி செய்யவேண்டும்.

இந்த நிலையில், ஜைடஸ் கேடிலா நிறுவனம் 12 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு அடுத்த மாதம் இறுதியில் ஊசியில்லாத தடுப்பூசி மருந்தை கொண்டுவர இருக்கிறது. இதில் பெரும்பங்கு தடுப்பூசி மருந்துகளை தமிழ்நாட்டுக்கு வாங்கி நமது மாணவர்களுக்கு போடும் பணியை அரசு சிரம் மேற்கொண்டு செய்யவேண்டும். தளர்வுகள் நீடித்து நிலைத்து இருக்க, கொரோனா பரவலை குறைக்கும் நடவடிக்கைகளில், தடுக்கும் நடவடிக்கைகளில் அரசின் துறைகள் இன்னும் வேகம் காட்டவேண்டும். விழிப்புணர்வு பிரசாரங்கள் இன்னும் தீவிரப்படுத்தவேண்டும்.

மேலும் செய்திகள்