ரவுடிகளை அலற வைக்கும் போலீசாரின் அதிரடி வேட்டை!

போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தமிழ்நாடு முழுவதும் போலீசார் அதிரடியாக ரவுடிகள் மற்றும் கூலிப்படைகளின் அட்டகாசத்தை ஒடுக்க சோதனைகளை நடத்த உத்தரவிட்டார்.

Update: 2021-09-29 20:38 GMT
எந்தவொரு மாநிலமும் அமைதி பூங்காவாக திகழ்ந்தால்தான் அங்கே தொழில்முனைவோர், வர்த்தகம் செய்வோர் முதலீடு செய்ய ஓடோடி வருவார்கள். எந்தவித அச்சமும் இல்லாமல், மக்களும் நிம்மதியாக வாழும் சூழல் இருக்கவேண்டும். சட்டம்-ஒழுங்கு சீராக பராமரிக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு, போலீசாரின் பங்குதான் மிக முக்கியமானது. காவல்துறை விழிப்போடு பணியாற்றினால்தான் மக்கள் நிம்மதியாக உறங்கமுடியும். காவல்துறை நினைத்தால் எத்தகைய பெரிய சமூக விரோதிகள் என்றாலும் சரி, ரவுடிகள் என்றாலும் சரி, அவர்கள் கொட்டத்தை அடக்கிவிடமுடியும். 1970-ம் ஆண்டுக்கு முன்பு தூத்துக்குடியில் ரவுடிகளின் அட்டகாசம் கட்டுக்கடங்காமல் இருந்த நேரத்தில், தெற்கு, வடக்கு, சென்டிரல் என 3 போலீஸ் நிலையங்களிலும் 3 இளம் சப்-இன்ஸ்பெக்டர்களை காவல்துறை நியமித்தது. அந்த 3 இளம் துடிப்புள்ள சப்-இன்ஸ்பெக்டர்கள் தூத்துக்குடியா இது? என்று சொல்லும் வகையில் சுற்றி, சுற்றி வந்து சமூகவிரோத சக்திகள் வெளியே வரமுடியாத நிலையை ஏற்படுத்தினர்.

அவ்வளவு ஏன்? 10 மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம் இருந்தநிலையில், போலீசாரும், ராணுவத்தினரும் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக 96 மாவட்டங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மாவோயிஸ்டுகளின் அட்டகாசம் தலைவிரித்தாடியநிலையில், இப்போது 41 இடங்களில்தான் இருக்கிறது. இதுபோல தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளைகள் கொஞ்சம் அதிகரித்தவண்ணம் இருந்தது. குறிப்பாக பழிக்குப்பழியாக நடந்த கொலைகள், கூலிப்படையினரின் அட்டகாசம் அதிகமாக இருந்த நிலையில், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, மிக திட்டமிட்டு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையிலான உளவுப்பிரிவு மிக சிறப்பாக செயல்பட்டு, ரவுடிகள் பற்றிய விவரங்களை தெரிவித்துவருகிறது.

இந்தநிலையில், தென் மாவட்டங்களில் கொலைகள் நடந்த உடன் சைலேந்திரபாபு உடனடியாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு விரைந்துசென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, அடுக்கடுக்காக உத்தரவு பிறப்பித்தார். சென்னை வந்த அவர் கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு முதல் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போலீசார் அதிரடியாக ரவுடிகள் மற்றும் கூலிப்படைகளின் அட்டகாசத்தை ஒடுக்க சோதனைகளை நடத்த உத்தரவிட்டார். இதன்படி, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டிருந்த 21 ஆயிரத்து 592 பழைய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் 3 ஆயிரத்து 325 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 294 பேர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளன. 972 பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இந்த அதிரடி சோதனையில் 1,117 பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 7 நாட்டு துப்பாக்கிகளும் சிக்கியுள்ளன. இந்த வேட்டை இன்னும் தொடர்ந்து நடக்கும் என்று சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். மொத்தத்தில் சைலேந்திரபாபுவின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. போலீசார் நினைத்தால் எதையும் நடத்திக்காட்டமுடியும் என்பது நிரூபணமாகிவிட்டது. இதுபோல சங்கிலி பறிப்பு, செல்போனை பறித்துக்கொண்டு செல்லுதல், வீடுகளில் புகுந்து நகை திருட்டு போன்ற எல்லா குற்றங்களையும் அடக்கி ஒடுக்க, நமது போலீசாரால் நிச்சயமாக முடியும் என்ற நம்பிக்கை பொதுமக்கள் மனதில் தோன்றிவிட்டது.

இதுபோல குற்றங்களை பதிவு செய்யும் போலீசார் மிக திறமையாக புலன்விசாரணை செய்து குறுகியகாலத்தில் கோர்ட்டில் தீர்ப்பு பெறும் வகையில், தண்டனை பெற்றுத்தரும் அளவுக்கு அவர்களது சட்ட திறமையையும் வளர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கவேண்டும். பல வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கும் நிலையை ஆய்வு செய்து, ஒவ்வொரு வழக்குக்கும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்தால்தான், குற்றம் செய்பவர்களுக்கு நமக்கு தண்டனை கிடைக்கும் என்ற பயம் ஏற்பட்டுவிடும். குற்றச்செயல்களில் ஈடுபடவும் பயப்படுவார்கள்.

மேலும் செய்திகள்